பெங்களூரு: பெங்களூரு கலாசிபாளையத்தில் மாநகர போக்குவரத்து கழகம் மற்றும் தனியார் பேருந்துகள் நிற்கும் பேருந்து நிலையம் உள்ளது. நேற்று காலை 11 மணியளவில் பேருந்து நிலையத்திற்கு வந்த மர்ம நபர் ஒருவர், கழிவறை சென்று, அங்கிருந்த மேஜை மீது பை ஒன்று வைத்து விட்டு சென்றார். நான்கு மணி நேரம் கடந்தும், மேஜை மீது வைத்த பையை யாரும் எடுத்து செல்லவில்லை. இதில் சந்தேகமடைந்த கழிவறை ஊழியர் உடனடியாக மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.
போக்குவரத்து கழக அதிகாரிகள் கலாசிபாளையம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக இணை போலீஸ் கமிஷனர் கிரிஷ் தலைமையில் போலீஸ் அதிகாரிகள், வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்களுடன் வந்தனர். மேஜை மீது இருந்த பையை மோப்ப நாய் பரிசோதித்து சத்தம் போட்டது. உடனடியாக பலத்த பாதுகாப்புடன் வெடி குண்டு நிபுணர்கள், பையை சோதனை செய்தனர். அந்த பையில் வெடிகுண்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் ஜெலிட்டின் குச்சிகள், டெடனேட்டர் ஒயர்கள் இருந்தது.
அதை பறிமுதல் செய்த அதிகாரிகள், கழிவறை மட்டுமில்லாமல் பேருந்து நிலையத்தில் வேறு எங்கேயாவது வெடிகுண்டுகள் வைத்துள்ளார்களா? என்று மாநகர மற்றும் தனியார் பேருந்து நிலையம் முழுவதும் தீவிரமாக சோதனை நடத்தினர். இதில் வெடிகுண்டு கிடைக்கவில்லை. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து கழிவறையில் பை வைத்து சென்ற மர்ம நபரை தேடுகின்றனர்.