ரூ.3,000 கோடி வங்கிக் கடன் மோசடி அனில் அம்பானி குழும நிறுவனங்களின் 35 இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு: பெரிய அளவில் விதி மீறல்கள் நடந்ததாக குற்றச்சாட்டு
மும்பை: ரூ.3,000 கோடி வங்கிக் கடன் மோசடி தொடர்பாக, மும்பையில் அனில் அம்பானி குழும நிறுவனங்களின் 35 இடங்கள் மற்றும் அதன் நிர்வாகிகள் மற்றும் நிறுவனத்துக்கு தொடர்புடைய 25 பேரின் இடங்கள் உட்பட 60 இடங்களில் அமலாக்கத்துறையினர் நேற்று ரெய்டு நடத்தினர். அனில் அம்பானி குழுமத்தைச் சேர்ந்த ரிலையன்ஸ் நிறுவனங்கள் கடந்த 2017 - 2019 காலக்கட்டத்தில் வங்கியில் கடன் வாங்கி மோசடி செய்ததாக குற்றச்சாட்டு கூறப்படுகிறது. இது தொடர்பாக பண பரிவர்த்தனை மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில், மும்பையில் அனில் அம்பானி குழுமத்தின் 35 நிறுவனங்கள் மற்றும் அதன் நிர்வாகிகள் உட்பட அந்த நிறுவனங்களுடன் தொடர்புடைய 25 பேருக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் நேற்று திடீர் ரெய்டு நடத்தினர். இதுதொடர்பாக அமலாக்கத்துறை வட்டாரத்தில் கூறியதாவது: அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழும நிறுவனங்கள், கடந்த 2017 முதல் 2019 வரையிலான காலக்கட்டத்தில் யெஸ் வங்கியில் ரூ.3,000 கோடி கடன் வாங்கியுள்ளன.
கடன் ஒப்புதல் அளிக்கப்படுவதற்கு சற்று முன்னதாக, வங்கியின் முக்கிய நிர்வாகிகளுக்கு அனில் அம்பானி நிறுவனங்களில் இருந்து பணம் கைமாறியுள்ளது. இதன் மூலம், லஞ்சம் கொடுத்து முறைகேடாக கடன் பெற்றுள்ளதாகத் தெரிகிறது. கடன் வழங்குவதற்கு உரிய விதிகள் கடைப்பிடிக்கவில்லை. பெரிய அளவில் விதி மீறல் நடந்திருக்கிறது. முன்தேதியிட்ட கடன் ஒப்புதல் பத்திரங்கள் தயாரித்தும், எந்தக் காரணத்துக்காக கடன் வழங்கப்படுகிறது?
கடன் பெறுவதற்கு நிறுவனத்துக்குத் தகுதி இருக்கிறதா என்பன உள்பட பல விஷயங்களை ஆராயாமல் வங்கியின் கடன் கொள்கைக்கு எதிராக மேற்கண்ட ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என சந்தேகிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, கடன் தொகை எந்த நோக்கத்துக்காக வாங்கப்பட்டதோ அதற்காகப் பயன்படுத்தப்படாமல், குழுமத்தின் வேறு நிறுவனங்களுக்கு மடை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. செயல்படாத போலி நிறுவனங்கள் மூலமாகவும் நிதி வேறு பயன்பாட்டுக்காக அனுப்பப்பட்டுள்ளன. ரிலையன்ஸ் குழும கடன் மோசடி தொடர்பாக சிபிஐ 2 எப்ஐஆர்களைப் பிதிவு செய்துள்ளது.
இது தொடர்பான விவரங்களை, தேசிய வீட்டு வசதி வங்கி (என்எச்பி), செபி, தேசிய நிதி அறிக்கை ஆணையம் (என்எஃப்ஆர்ஏ மற்றும் பாங்க் ஆஃப் பரோடா ஆகிய வங்கிகள் அமலாக்கத்துறைக்குப் பகிர்ந்துள்ளன. இவற்றின் மூலம், நன்கு திட்டமிட்டு வங்கிகள் பங்குதாரர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களை ஏமாற்றி பணத்தை வேறு பயன்பாட்டுக்கு மாற்றியும் அபகரித்தும் உள்ளனர் என்பது தெரிய வருகிறது.
இவ்வாறு அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தின் மீதான செபி அறிக்கையன் அடிப்படையிலேயே அமலாக்கத்துறை விசாரணை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. செபி அறிக்கையின்படி 2017-18 நிதியாண்டில் ரூ.3,742.6 கோடியாக இருந்த கடன், 2018-19 நிதியாண்டில் ரூ.8,670.8 கோடியாக உயர்ந்திருப்பது தெரிய வருகிறது.