ஆந்திர மதுபான ஊழல் வழக்கு தொடர்பாக சோதனை பண்ணை வீட்டில் பதுக்கிய ரூ.11 கோடி பறிமுதல்: சிறப்பு குழு தீவிர விசாரணை
திருமலை: ஆந்திராவில் மதுபான ஊழல் வழக்கில் ஒய்எஸ்ஆர் கட்சியை சேர்ந்தவர்கள் மற்றும் கடந்த ஆட்சியில் பணிபுரிந்த அதிகாரிகள் என மொத்தம் 40 பேர் மீது வழக்கு உள்ளது. இதில் கடந்த மாதம் 12 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக சில நாட்களுக்கு முன்பு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ராஜம்பேட்டை தொகுதி எம்.பி. மிதுன் ரெட்டியை போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் விசாரணை நோட்டீஸ் அனுப்பி அழைத்து பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, ஏ.சி.பி. நீதிமன்றம் அவரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டதால் தற்போது அவர் சிறையில் உள்ளார். இந்நிலையில் ஆந்திர மதுபான ஊழல் வழக்கில் ைகது செய்யப்பட்டுள்ள வருண் அளித்த தகவலின்பேரில் ஐதராபாத் ஷம்ஷாபாத் மண்டலத்தில் உள்ள கச்சரம் பண்ணை வீட்டில் நேற்று சிறப்பு விசாரணை குழு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு 12 அட்டை பெட்டிகளில் கட்டுக்கட்டாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.11 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. முதல் குற்றவாளியாக இருக்கும் ராஜ் காசிரெட்டியின் உத்தரவின்பேரில் வருண் மற்றும் சாணக்யா ஆகியோர் 12 பெட்டிகளில் ரூ.11 கோடியை மறைத்து வைத்ததாக ஒப்புக்கொண்டதாகத் தெரிகிறது. இந்தத் தொகை ஜூன் 2024ம் ஆண்டில் மறைத்து வைக்கப்பட்டதாக எஸ்ஐடி அதிகாரிகள் தெரிவித்தனர்.