திருமலை: ரூ.3500 கோடி மதுபான ஊழல் வழக்கு தொடர்பாக ஜெகன்மோகன் ரெட்டிக்கு சொந்தமான பாரதி சிமென்ட்ஸ் அலுவலகத்தில் சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தி ஆவணங்களை எடுத்து சென்றனர். ஆந்திர மாநிலத்தில் கடந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் 5 ஆண்டு கால ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியில் ரூ.3500 கோடி மதுபான ஊழல் நடைபெற்றதாக விசாரணை நடந்து வருகிறது.
இதில் தொடர்புடைய ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ராஜம்பேட்டை எம்பி மிதுன்ரெட்டி உள்ளிட்ட 12 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அதேபோல் முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் பாரதி சிமெண்ட்ஸ் நிறுவன இயக்குனராக இருந்த பாலாஜி கோவிந்தப்பா என்பவரும் கைது செய்யப்பட்டார். அதனடிப்படையில் நேற்று ஐதராபாத் பஞ்சாரா ஹில்ஸில் உள்ள பாரதி சிமெண்ட் நிறுவனத்தின் நிர்வாக அலுவலகத்திற்கு நேற்று புலனாய்வு பிரிவு விசாரணை அதிகாரிகள் சென்று அங்குள்ள முக்கிய ஆவணங்களை ஆய்வு செய்தனர்.
இந்த நிலையில் ஆந்திர மதுபான ஊழல், பாரதி சிமென்ட்ஸின் மூலம் நடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. மேலும், பாரதி சிமென்ட்ஸிலிருந்து ஐதராபாத்தில் உள்ள 6 குடோன்களுக்கு லஞ்சப்பணம் மாற்றப்பட்டுள்ளதாகவும், பாரதி சிமென்ட்ஸின் நிர்வாக அலுவலகத்தில் இருந்து மதுபான விநியோக நிறுவனங்கள் மற்றும் டிஸ்டில்லர்களின் உரிமையாளர்களுடன் சந்திப்புகள் நடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த சந்திப்பிற்கு பிறகு தான் பாரதி சிமென்ட்ஸூக்கு ஊழல் பணம் ஒப்படைக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் இச்சோதனை நடைபெற்றது. தொடர்ந்து அதிகாரிகள் சோதனை செய்து பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றி கொண்டு சென்றனர்.