திருமலை: பாபட்லாவில் தனியார் குவாரியில் கிரானைட் பாறைகள் சரிந்து 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஆந்திர மாநிலம், பாபட்லா மாவட்டம், பல்லிகுரவா அருகே தனியார் கிரானைட் குவாரி இயங்கி வருகிறது. இதில் 16 தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று வழக்கம் போல் கிரானைட் கற்களை வெட்டி எடுக்கும் பணி நடைபெற்று வந்தது. அப்போது எதிர்பாராத விதமாக கிரானைட் பாறைகள் சரிந்து அங்கிருந்த தொழிலாளர்கள் மீது விழுந்தது. இதில் 6 தொழிலாளர்கள் பாறைக்கு அடியில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 10 தொழிலாளர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக நரசராவ்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அனைவரும் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையில் தகவலறிந்த வந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அதில், குவாரி நிர்வாகம் எந்த பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை தெரியவந்தது. மேலும், இறந்தவர்கள் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இதற்கிடையில் பாபட்லா கலெக்டர் மற்றும் எஸ்பி ஆகியோர் விபத்து குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த உத்தரவிட்டனர். இதுகுறித்து தகவலறிந்த முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி, படுகாயங்களுடன் மருத்துவமனையில் உள்ளவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார். மேலும், விபத்துக்கான காரணம் குறித்து முழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.