கருர் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். இதில், 9 பேர் குழந்தைகள் என்பது அதைவிட பெரும் துயரம். இந்த சோக நிகழ்வை தொடர்ந்து, பல வழக்குகள் நீதிமன்றத்தில் தொடரப்பட்டன. கரூர் போன்ற துயரங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க, வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் அறிவுறுத்தியது. அதன்படி, நீதிமன்ற உத்தரவை ஏற்று, அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டம், பேரணி உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து பரிந்துரை தயாரித்துள்ளது. அரசியல் கட்சி பொதுக்கூட்டங்களில் 50,000 பேர் கூடினால் ரூ.20 லட்சம் டெபாசிட் செலுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் இதில் இடம்பெற்றுள்ளன.
தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளில், அரசியல் தலைவர்கள் ‘ரோடு ஷோ’ எனப்படும் சாலை ஊர்வலங்களை நடத்துவது குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்திருக்கிறது. முக்கியமான அரசியல் தலைவர்கள், தேர்தல் பரப்புரைக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட தங்களுடைய வாகனங்களில் இருந்தபடி பல்வேறு இடங்களுக்கு சென்று, ஆங்காங்கே மக்கள் மத்தியில் பேசுவது வழக்கம். ஆனால், சமீப ஆண்டுகளில் சாலைகளின் இருபுறங்களிலும் மக்கள் நிற்க, அரசியல் தலைவர்களின் வாகனங்கள் நடுவில் செல்வது அல்லது தலைவர்கள் வாகனங்களை விட்டு இறங்கி நடப்பது போன்ற கலாச்சாரம் அதிகரித்துள்ளது.
தமிழக அரசு கொண்டுவந்துள்ள இந்த கட்டுப்பாடுகள், எதிர் கட்சிகளின் செயல்பாடுகளை முடக்கும் என்ற அதிமுக குற்றச்சாட்டு, எந்த வகையிலும் ஏற்க முடியாத ஒன்று. அரசியல் கட்சிகளின் செயல்பாடுகளுக்கு ஒட்டுமொத்தமாக தடை விதிப்பது, ஜனநாயகமாக இருக்காது. அதனால்தான், நிபந்தனைகளும், கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இந்த கட்டுப்பாடு, ஆளும்கட்சி, எதிர்கட்சி என எல்லா கட்சிகளுக்கும் சமமான ஒன்று. நமக்கு நாமே போட்டுக்கொள்ளும் ஒரு தற்காப்பு வேலி, அவ்வளவுதான்.
வீதியில் வலம் வரும் தலைவர்களை பார்த்து, தொண்டர்களும் மக்களும் பெருமளவில் கூடுவதால், கட்டுக்கடங்காத பல நிகழ்வுகள் நடந்து விடுகின்றன. தற்போது விதிக்கப்பட்டுள்ள இந்த கட்டுப்பாடுகள், ஒரு கடிவாளம் போன்று இருக்கும். இதில் எந்த சந்கேமும் இல்லை. ஜனநாயக அமைப்பில், கட்டுப்பாடுகள் அவசியம் என்பதே நடுநிலையாளர்களின் கருத்து. இந்த கட்டுப்பாடுகளை அடுத்தடுத்த கட்டங்களுக்கு எடுத்துச்செல்ல வேண்டும். அதாவது, பொதுக்கூட்டம் நடக்கும் இடங்களில் குடிநீர் வசதி, கழிப்பறை வசதிகள் அமைக்க வேண்டும். பொதுக்கூட்டங்களை நடத்த விரும்பாவிட்டால், அதுபோன்ற மைதானங்களில் வாகனங்களை நிறுத்தி தலைவர்கள் பேசலாம். இதற்காக, சாலைகளை பயன்படுத்துவதை அடியோடு தடுக்கலாம்.
உச்சநீதிமன்றம் இதுபோன்ற கூட்டங்களுக்கு சில நெறிமுறைகளை வகுத்துள்ளது. அதேபோல், ஐ.நா.வும் சில வழிமுறைகளை தந்துள்ளது. அங்கீகரிக்கப்பட்ட, பதிவுசெய்யப்பட்ட எல்லா கட்சிகளையும் அழைத்து அவர்களது கருத்துகளை கேட்டு, தமிழக அரசின் இந்த பரிந்துரைகள் இறுதி செய்யப்பட உள்ளது. மக்களை காப்பதும், மக்கள் நலனை பேணுவதும் அரசியல் கட்சிகளின் தலையாய கடமை. இதிலிருந்து எந்த அமைப்பும் விலகிட முடியாது. எனவே, கட்டுப்பாடுகள் அவசியம். பழம்பெரும் கட்சிகள் முதல் புற்றீசல்போல் முளைக்கும் புது கட்சிகள் வரை அனைத்தையும் முறைப்படுத்துவது ஒரு நல்ல துவக்கம்.

