Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அக்னி பரீட்சை

கடந்த 2022, ஜூன் 14ம் தேதி ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்திய முப்படைகளில் இளைஞர்கள் 4 ஆண்டுகள் மட்டுமே பணிபுரியும் ‘அக்னிபாத்’ திட்டத்தை அறிமுகம் செய்து வைத்தார். இளைஞர்களை ராணுவத்தில் அதிகளவில் சேர்ப்பதற்காகத்தான் இந்த திட்டம் எனவும், பாதுகாப்புப்படையில் 4 ஆண்டுகள் பணியாற்றும் இளைஞர்களில் 25 சதவீதம் பேருக்கு பணி நீட்டிப்பு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. ராணுவத்தில் நீண்ட ஆண்டுகள் சேவை புரிய வேண்டுமென்ற தங்களது ஆசையானது நிராசையாகி விட்டதாக கூறி பீகாரில் ராணுவ பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஒட்டுமொத்த இளைஞர்களும் போராட்டத்தில் களமிறங்கினர். மேலும், பல மாநிலங்களிலும் போராட்டங்கள் வலுத்தன.

இது ராணுவத்திற்கான நிதி ஒதுக்கீட்டை குறைக்கும் முயற்சி என்பதுதான் எதிர்க்கட்சிகள் முன்வைத்த முக்கிய வாதம். அதாவது, ஒன்றிய அரசு ஆண்டுதோறும் ராணுவத்திற்கு ரூ.5.20 லட்சம் ேகாடிக்கு மேல் நிதி ஒதுக்குகிறது. இதில் ஓய்வூயத்திற்கு மட்டும் ரூ.1.20 லட்சம் கோடி, பராமரிப்பு உள்ளிட்ட இதர செலவுகளுக்கு ரூ.2.30 லட்சம் கோடி வரை ஒதுக்குகிறது. அக்னிபாத் திட்டத்தில் 4 ஆண்டுகள் பணி புரியும் வீரருக்கு வெறும் சம்பளம் மட்டுமே. ஓய்வூதியம் உட்பட எந்தவித அரசு சலுகையும் பெற முடியாது. இதன்மூலம் ஆண்டுக்கு ஒன்றிய அரசு சராசரியாக ரூ.2 லட்சம் கோடி செலவினங்களை தவிர்க்க முடியும்.

ேமலும், ஆண்டுதோறும் சுமார் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அக்னி வீரர்களாக தேர்வு செய்யப்படுவார்கள். இவர்களில் 25 சதவீதத்திற்கும் குறைவானவர்களே பணி நிரந்தம் பெற முடியும். அதுவும் உறுதி கிடையாது. 4 ஆண்டுகள் மட்டுமே பணி எனும்போது, அர்ப்பணிப்பு உணர்வு அங்கு கண்டிப்பாக அடிபடும். நாட்டுக்கான பணி என்ற எண்ணத்தை விட, 4 வருட வேலை என்ற எண்ணத்தில்தான் அவர்கள் பணியாற்றுவார்கள். கல்வித்தகுதி 10ம் வகுப்பு அல்லது பிளஸ் 2 எனும்போது, கல்லூரி படிப்பையும் தொடர்வதில் சிக்கல் ஏற்படும். 4 ஆண்டுக்கு பின் தங்களது தகுதிக்கேற்ற வேலைகளை அக்னி வீரர்கள் தேர்ந்தெடுக்க முடியாத சூழல் நிலவும் என்பது அரசியல் விமர்சகர்கள், பொதுமக்களின் கருத்தாகும்.

2022ம் ஆண்டு அக்னிபாத் திட்டத்தில் முதல்முறையாக சேர்ந்தவர்கள் அடுத்த ஆண்டு பணி ஓய்வு (!?!?) பெற வேண்டும். இதனால் வீரர்களிடையே எதிர்காலம் குறித்த அச்சம் கிளம்பியுள்ளது. இந்த பரபரப்பான சூழலில்தான் ஒன்றிய உள்துறை அமைச்சகம் சார்பில் மாநில அரசுகளுக்கு புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ராணுவத்தில் பயிற்சி பெற்ற அக்னி வீரர்களைத் தனியார் பாதுகாப்பு நிறுவனங்களில் காவலாளிகளாகப் பணியமர்த்தும் முயற்சிகளில் ஈடுபடுமாறு அறிவுறுத்தியுள்ளது.

நாட்டின் எல்லையில் கம்பீரமாக வேலை பார்த்து வெளியேறுபவர்களை, தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக நியமிப்பதா? இது அவர்களை அவமானப்படுத்தும் செயல் இல்லையா என்ற கேள்விகள் பல்வேறு தரப்பில் இருந்து மீண்டும் எழுந்துள்ளது. குறைந்த ஆண்டு பணியாற்றினாலும், நாட்டை காத்த வீரர்களுக்கு அவர்களின், கல்வித்தகுதி அடிப்படையில் நல்ல வேலையில் அமர்த்த வேண்டுமென்ற கோரிக்கையும் வலுத்துள்ளது. இதற்கு ஒன்றிய அரசு என்ன பதில் தரப்போகிறது? வழக்கம்போல மவுனமா அல்லது ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி தவிர்க்கப் போகிறதா என்பது அவர்களுக்கே வெளிச்சம். அக்னிபாத் வீரர்களுக்கு காவலாளி பணி அறிவிப்பு, மீண்டுமொரு முறை போராட்டத்தீயை பற்ற வைத்துள்ளது என்றால் மிகையல்ல.