கோவை: வாலிபரை கொன்ற பாஜ நிர்வாகிக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது. கோவை நல்லாம்பாளையம் அன்னையப்பன் வீதியை சேர்ந்தவர் கந்தசாமி (எ) குட்டி(29). இவர் கணபதி பகுதி பாஜ மண்டல துணைத்தலைவராக இருந்தார். மேலும் விவசாயம் மற்றும் கேபிள் டிவி ஆபரேட்டர் தொழில் செய்து வந்துள்ளார். கடந்த 2018ம் ஆண்டு கந்தசாமி மற்றும் அப்பகுதியை சேர்ந்த பாஜ-வினர் கமிட்டி அமைத்து விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட பொதுமக்கள், கடைகளில் வசூல் செய்தனர். விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடியதில், வசூலானதில் செலவு போக ரூ.25 ஆயிரம் மீதம் இருந்துள்ளது. அந்த பணத்தை கொண்டு கிடா விருந்து வைக்க கந்தசாமி ஏற்பாடு செய்தார்.
கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் 29ம் தேதி இரவு கோவை ஆலாந்துறை அருகே உள்ள இக்கரை போளூவாம்பட்டியில் தோட்டம் ஒன்றில் கறியுடன் மது விருந்து நடந்தது. அப்போது அதே பகுதியை சேர்ந்த தனியார் நிறுவனத்தில் சூபர்வைசராக வேலை பார்த்து வந்த நாகராஜ் (21) என்பவர் விநாயகர் சதுர்த்தி விழாவில் வசூலான பணத்திற்கு கணக்கு கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் இடையே தகராறு நடந்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த கந்தசாமி, நாகராஜை தாக்கி கத்தியால் குத்தி கொலை செய்தார். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த கொலை வழக்கில் ஆலாந்துறை போலீசார் கந்தசாமியை கைது செய்து கோவை சிறையில் அடைத்தனர். இது தொடர்பான வழக்கு கோவை 5வது ஏடிஜே நீதிமன்றத்தில் நடந்து வந்தது. சாட்சி விசாரணை முடிந்து, நேற்று இறுதி விசாரணை நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சிவக்குமார், பாஜ நிர்வாகி கந்தசாமிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் மோகன் பிரபு ஆஜராகி வாதாடினார்.