Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருவாரூர் அருகே பரபரப்பு 9ம் வகுப்பு மாணவரை காரில் கடத்த முயற்சி

*5 பேரை சுற்றி வளைத்து போலீசில் ஒப்படைப்பு

முத்துப்பேட்டை : திருவாரூர் அருகே 9ம்வகுப்பு மாணவரை காரில் கடத்த முயன்ற 5பேரை பொதுமக்கள் சுற்றிவளைத்து போலீசில் ஒப்படைத்தனர்.திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த உதயமார்த்தாண்டபுரம் நாச்சிகுளம் கிராமத்தை சேர்ந்தவர் சௌரிராஜன் (45).

மலேசியா நாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மலர்விழி (37). மகன் மைக்கேல் ராஜ் (13). மலர்விழியும், அவரது மகன் மைக்கேல் ஆகியோர் நாச்சிகுளம் ஏரிக்கரை சாலையில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர்.

மைக்கேல் ராஜ், நாச்சிக்குளத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9ம்வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் சௌரிராஜன், தஞ்சாவூரை சேர்ந்த நேதாஜி(33) என்பவரது சகோதரரை வெளிநாடு அனுப்புவதாக கூறி ரூ.2லட்சம் பணத்தை வாங்கியுள்ளார். சௌரிராஜன் கூறியபடி, வெளிநாடு அனுப்பவில்லை. பலமுறை நேதாஜி கொடுத்த பணத்தை கேட்டும் அவர் திருப்பி கொடுக்கவில்லை.

இதில் ஆத்திரமடைந்த நேதாஜி, தனது உறவினர்களான விருதாச்சலத்தை சேர்ந்த வீரமணி(47), தஞ்சாவூர் வண்ணாரப்பேட்டையை சேர்ந்த தமிழ்திருமூர்த்தி(25), இளையராஜா(42), ஆனந்தகுமார்(30) ஆகியோருடன் நேற்றுமுன்தினம் மாலை நாச்சிகுளத்துக்கு சௌரிராஜனின் வீட்டுக்கு வந்தனர். அப்போது அவரது வீடு பூட்டி இருந்தது.

அவரது குடும்பத்தை பற்றி விசாரித்து கொண்டு, அவரது மகன் மைக்கேல் ராஜ் அங்குள்ள தனியார் பள்ளியில் படிப்பதை தெரிந்து கொண்டனர். பின்னர் பள்ளி விடும் நேரம் வரை காத்திருந்த அவர்கள் பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்த மைக்கேல் ராஜை, மறித்து காரில் கடத்தி செல்ல முயன்றனர்.

அப்போது மைக்கேல்ராஜ், கூச்சலிட்டதை கண்ட அப்பகுதி மக்கள் ஒன்று கூடி காரில் கடத்திய கும்பலை வழிமறித்து மைக்கேல்ராஜை மீட்டனர். பின்னர் முத்துப்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து அங்கு சென்ற டிஎஸ்பி பிலிப் பிராங்கில் கென்னடி தலைமையில் இன்ஸ்பெக்டர் மாரிமுத்து, சப்.இன்ஸ்பெக்டர் ராகுல் ஆகியோர் அடங்கிய போலீசார் கடத்தல் கும்பலை பொதுமக்களிடமிருந்து மீட்டனர்.இதுதொடர்பாக அவர்களிடம் விசாரணை நடந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து நேதாஜி உள்பட 5 பேரை கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.