*வாலிபருக்கு தர்மஅடி
பந்தலூர் : பந்தலூர் அருகே தேவாலாவில் வீட்டின் கதவுகளை தட்டி வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து பெண்களிடம் பலாத்கார முயற்சியில் ஈடுபட்ட வாலிபரை பொதுமக்கள் தர்மஅடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே தேவாலா செத்தக்கொல்லி பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், இப்பகுதியில் வசித்து வரும் ரிஷால் (24) என்பவர் நேற்று அதிகாலை அந்த பகுதியில் உள்ள வீடுகளின் கதவுகளை தட்டி, கதவு திறக்கும்போது அத்துமீறி நுழைந்து தனியாக இருக்கும் பெண்களிடம் பலாத்கார முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
ஒரு பெண்ணின் கூச்சல் சத்தம் கேட்டு திரண்டு வந்த மக்கள், ரிஷாலை பிடித்து கட்டி வைத்து தர்மஅடி கொடுத்தனர். பின்னர், தேவாலா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரை மீட்டு காவல்நிலையம் கொண்டு சென்றனர்.
பொதுமக்கள் கொடுத்த புகாரின்பேரில் வழக்குபதிவு செய்து ரிஷாலை கைது செய்தனர்.
இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் கரியசோலை பகுதியில் நிறுத்தியிருந்த அரசு பேருந்தை கடத்தி சென்று தேவாலா டேன்டீ சரகம் 4 பகுதியில் நிறுத்தி சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.