Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருமணமான 10 நாட்களில் வாந்தி எடுத்த புதுப்பெண் 2 மாத கர்ப்பிணி; கருவை கலைக்க இன்சூரன்ஸ் ஆபீசரிடம் பணம் பறிப்பு: ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டிய நண்பருக்கு வலை

சேலம்: சேலத்தில் திருமணமான 10 நாளில் புதுப்பெண் வாந்தி எடுத்த நிலையில், 2 மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. கருவை கலைக்க இன்சூரன்ஸ் ஆபீசரிடம் மாப்பிள்ளை பணம் வாங்கிய நிலையில், ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டிய அவரது நண்பரை போலீசார் தேடி வருகின்றனர். சேலம் அழகாபுரத்தை சேர்ந்தவர் சேகர் (44). தர்மபுரியில் தனியார் வங்கியில் இன்சூரன்ஸ் பிரிவு மேலாளராக பணி யாற்றி வருகிறார். இதற்கு முன்பாக சேலத்தில் உள்ள இன்னொரு இன்சூரன்ஸ் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். மேலாளர் பதவி கிடைத்ததும் தர்மபுரிக்கு சென்று விட்டார். திருமணமான இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சேகர் சேலத்தில் வேலை பார்த்தபோது, அங்கு பணியாற்றிய திருமணமாகாத இளம்பெண்ணுடன் நட்பாக பழகினார். நாளடைவில் இது தகாத உறவாக மாறியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் அந்த இளம்பெண்ணுக்கு வாலிபர் ஒருவருடன் திருமணம் நடந்தது. திருமணமான 10 நாளில் புதுப்பெண் திடீரென வாந்தி எடுத்தார். இதனால் அதிர்ச்சியடைந்த புதுமாப்பிள்ளை, மனைவியை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடினார். பரிசோதனை செய்து பார்த்த டாக்டரோ, ‘2 மாத கரு வற்றியில் வளர்ந்து வருகிறது’ என்றார். இதனை கேட்ட புதுமாப்பிள்ளைக்கோ தலையில் இடி விழுந்ததுபோல ஆனது. அதிர்ச்சியடைந்த அவர், திருமணம் ஆகியே 10 நாட்கள் தானே ஆகிறது, இதற்குள் எப்படி 2 மாதம் கர்ப்பமாக இருக்கிறாய் என மனைவியிடம் கேட்டார். பதில் சொல்ல முடியாமல் தவித்த அவர், திடீரென மனமுடைந்து கதறி அழுதார். நான் உங்களுக்கு துரோகம் செய்துவிட்டேன், என்னை மன்னித்து விடுங்கள் என கண்ணீர் விட்டார். மேலும், தன்னுடன் வேலை பார்த்தவருடன் ஏற்பட்ட பழக்கம் குறித்த விவரத்தையும் தெரிவித்தார்.

இதையடுத்து கருவை கலைத்து விட முடிவு செய்த புதுமாப்பிள்ளை, சேகரை தேடி தர்மபுரிக்கு சென்றார். தன்னுடன் நண்பரான கோபால் (40) என்பவரையும் அழைத்து சென்றார். சேகரை பிடித்து கடும் எச்சரிக்கை செய்த இருவரும், கருவை கலைக்க ரூ.80 ஆயிரம் கேட்டனர். இல்லை என்றால் காவல் துறையில் புகார் செய்வோம் என்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த சேகர், உடனடியாக கேட்ட பணத்தை கொடுத்துவிட்டார். பணத்தை வாங்கி வந்த புதுமாப்பிள்ளை, யாருக்கும் தெரியாமல் கருவை கலைத்ததுடன், புதுமனைவியை மன்னித்து ஏற்றுக்கொண்டு குடும்பம் நடத்தி வருகிறார். ஆனால் அவர் அழைத்து சென்ற நண்பர் கோபால், பணம் பறிக்கும் திட்டத்தை கையில் எடுத்தார். தர்மபுரிக்கு சென்று இன்சூரன்ஸ் மேலாளர் சேகரை அவ்வப்போது மிரட்டி பணம் பறித்தார்.

பணத்தை கொடுக்கவில்லை என்றால் பலாத்கார வழக்கில் சிறைக்கு சென்று விடுவாய் என மிரட்டி ரூ.9 லட்சம் வரை பெற்றுள்ளார். கேட்டவுடன் பணம் கிடைத்ததால், இவனை விடவே கூடாது.. நமக்கு கிடைத்த அருமையான அடிமை என திட்டம் போட்டார். ரூ.10 லட்சம் மொத்தமாக கொடுத்தால் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்து விடலாம், இல்லை என்றால் சிக்கலில் இருந்து தப்பிக்கவே முடியாது என மிரட்டினார். இதனால் கடும் அதிர்ச்சியடைந்த சேகர், பெண்ணுடன் பழகியதற்கு தண்டனையாக ரூ.9 லட்சத்து 80 ஆயிரம் வரை கொடுத்துவிட்டேன், இனியும் ரூ.10 லட்சம் என்பது முடியாது என மறுத்ததுடன், அழகாபுரம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார். புகாரை பெற்றுக்கொண்ட போலீசார், வழக்கு பதிவு செய்து, தலைமறைவான கோபாலை தேடி வருகின்றனர்.