மதுரை: மதுரை மாநகராட்சியில் கட்டிடங்களுக்கு சொத்து வரியை குறைத்து நிர்ணயம் செய்து பல கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாக ஆய்வில் தெரிந்தது. இதுதொடர்பாக அதிகாரிகள் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டனர். இம்முறைகேடு வழக்கை நீதிமன்ற உத்தரவின்பேரில், மதுரை சரக டிஐஜி அபினவ் குமார் தலைமையில் சிறப்பு விசாரணைக்குழு விசாரிக்கிறது.
இதற்கிடையில் வரி முறைகேடு வழக்கு தொடர்பாக மாநகராட்சி 51வது வார்டு திமுக கவுன்சிலரும், வரிவிதிப்புக்குழு தலைவருமான விஜயலட்சுமி, 96 வது வார்டு ஹார்விபட்டியை சேர்ந்த ஒப்பந்த ஊழியர் செந்தில்பாண்டி ஆகியோர் நேற்று விசாரணைக்கு அழைக்கப்பட்டனர். அவர்களிடம் போலீசார் விசாரித்தனர்.
இதைத்தொடர்ந்து செந்தில்பாண்டி கைது செய்யப்பட்டார். தேவையெனில் மீண்டும் விசாரணைக்கு ஆஜராகவேண்டும் என, விஜயலட்சுமியிடம் எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பியதாக போலீசார் தெரிவித்தனர். விஜயலட்சுமி ஏற்கனவே மண்டல தலைவர்களுடன், குழுத்தலைவராக இருந்து ராஜினாமா செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.