கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே வீட்டில் தனியாக இருந்த தாய், மகள் கழுத்தறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். கிருஷ்ணகிரி பாஞ்சாலியூர் அருகே யாசின்நகர் பகுதியைச் சேர்ந்தவர் எல்லம்மாள் (50). கணவர் இறந்துவிட்டதால், வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தார். இவர்களது மகன் பெரியசாமி (16), 10ம் வகுப்பு படித்து வருகிறார். மேலும், சுகிதா(13), சுசிகா(13) என்ற இரட்டையர்களில் சுசிகா விபத்தில் இறந்து விட்டார். சுகிதா 7ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று காலை பெரியசாமி, சுகிதா ஆகியோர் வழக்கம்போல் பள்ளிக்கு சென்றனர். காலாண்டுத் தேர்வு முடிந்த நிலையில், மதியம் சுகிதா வீடு திரும்பினார். தாய்- மகள் மட்டும் தனியாக இருந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று மாலை எல்லம்மாளின் வீட்டிற்கு அவரது தம்பி காவேரியின் மனைவி சரோஜா சென்றுள்ளார். அங்கு, ஷோபாவில் எல்லம்மாள் ரத்தவெள்ளத்தில் சடலமாக கிடந்தார். அருகில் தரையில் சுகிதா இறந்து கிடந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில், எஸ்பி தங்கதுரை மற்றும் போலீசார் வந்து விசாரித்தனர். இதில், மர்ம நபர்கள் வீடு புகுந்து தாய்- மகளை கொடூரமாக வெட்டியும், கழுத்தறுத்தும் படுகொலை செய்திருப்பது தெரிய வந்தது.
போலீசார் நடத்திய விசாரணையில் கொலை நடந்த வீட்டில் நகைகள், பணம் எதுவும் கொள்ளை போகவில்லை என தெரியவந்தது. வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலில் ஏற்பட்ட முன்விரோதத்தில் இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். குழந்தைகள் பள்ளி சென்றிருப்பார்கள் என எண்ணி வீடு புகுந்த மர்ம நபர்கள் எல்லம்மாளை வெட்டி சாய்த்துள்ளனர். ஆனால், அங்கு சுகிதாவும் இருந்துள்ளார். தொடர்ந்து அவரையும் கொலை செய்திருப்பது தெரியவந்தது. பள்ளி சென்ற பெரியசாமி வீடு திரும்பாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார. எதற்காக இந்த இரட்டை கொலை நடந்தது என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.