நெல்லை: பெண் ஏட்டு வீட்டில் 30 பவுன் திருடிய போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார். நெல்லை பேட்டை அருகே மலையாள மேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (45). இவரது மனைவி தங்கமாரி (40). இவர் மாநகர ஆயுதப்படையில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருகிறார். பாளை ஆயுதப்படை வளாகத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் 2வது மாடியில் குடியிருந்து வருகின்றனர். கடந்த 16ம் தேதி தங்கமாரியின் வீட்டு பீரோக்களில் இருந்த 30 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.
அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து விசாரித்ததில், ஏட்டு தங்கமாரியின் வீட்டின் பின்பக்க வீட்டில் வசிக்கும் ஆயுதப்படை காவலர் மணிகண்டன் (31), அவரது நண்பர் கடையநல்லூரை சேர்ந்த முகமது அசாரூதீன் (30) ஆகியோர் ஏட்டு தங்கமாரி கதவை பூட்டிவிட்டு சாவியை ‘ஷூ ரேக்கில்’ வைத்துச் செல்வதை பார்த்து, அவர் இல்லாதபோது வீட்டை திறந்து நகை திருடியது தெரியவந்தது. இதையடுத்து மணிகண்டனையும், அவரது நண்பர் முகமது அசாருதீனையும் நேற்று போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.