துறையூர்:திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கீழக்குன்னுப்பட்டியை சேர்ந்தவர் சிவக்குமார். லாரி டிரைவர். இவரது மனைவி கிருத்திகா(35). இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். சிவக்குமார் மற்றும் அவரது பெரியப்பா ஜோதிவேல் வயல்கள் அருகருகே உள்ளது. இருவருக்கும் கிணற்றிலிருந்து வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவது சம்பந்தமாக பிரச்னை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த ஜூன் 29ம் தேதி கிருத்திகா கிணற்றில் இருந்து வயலுக்கு தண்ணீர் பாய்ச்சியபோது அங்கு வந்த ஜோதிவேல், அவரிடம் வாக்குவாதம் செய்து தாக்கினார். இதில் காயமடைந்த கிருத்திகா, துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுதொடர்பாக அவர் துறையூர் போலீசில் புகார் அளித்தார். அதேசமயம் ஜோதிவேல், சிவக்குமார் தம்பதி மீது துறையூர் ேபாலீசில் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து விசாரணைக்கு வருமாறு துறையூர் எஸ்ஐ சஞ்சீவி, கிருத்திகாவை காவல் நிலையத்துக்கு அழைத்துள்ளார். அங்கு சென்ற கிருத்திகாவிடம், உனக்கு எதுவாக இருந்தாலும் நான் பார்த்துக்கொள்கிறேன். நீ எனது ஆசைக்கிணங்க வேண்டும். இல்லை என்றால் உன் மனுவை விசாரிக்காமல் அலைக்கழிப்பேன் என காவல் நிலையத்திலேயே எஸ்ஐ கூறியதாக தெரிகிறது.
இதில் அதிர்ச்சியடைந்த கிருத்திகா, அங்கிருந்து அழுதபடியே வீட்டிற்கு வந்துள்ளார். வெளி மாநிலத்தில் லாரி ஓட்டி கொண்டிருந்த கணவரிடம் இது பற்றி செல்போனில் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் இதுபற்றி கிருத்திகா, எஸ்பி அலுவலகத்திலும் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து கிருத்திகா, சுமார் 2 நிமிடத்திற்கு மேல் எஸ்ஐ சஞ்சீவி மீது குற்றம் சாட்டி பேசும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.