போதை சாக்லேட் பயன்படுத்திய எஸ்ஆர்எம் கல்லூரி மாணவர்கள் உள்பட 11 பேர் அதிரடி கைது: போதை மாத்திரை, கஞ்சா பறிமுதல்
சென்னை: கஞ்சா, போதை சாக்லேட் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், எஸ்ஆர்எம் கல்லூரி மாணவர்கள் உள்பட 11 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை அடுத்த பொத்தேரி பகுதியில் இயங்கி வரும் எஸ்ஆர்எம் கல்லூரி மாணவர்கள் பலர், பொத்தேரி மற்றும் கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விடுதிகள் மற்றும் வீடுகளை எடுத்து தங்கி படித்து வருகின்றனர். இவர்களை குறிவைத்து போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. அதன்பேரில், கூடுவாஞ்சேரி, பொத்தேரி, மறைமலைநகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விடுதிகள், வாடகை குடியிருப்புகள், சிறு கடைகள், டீக்கடைகள் உள்ளிட்டவற்றில், தாம்பரம் காவல் துணை ஆணையர் பவன் குமார் ரெட்டி தலைமையிலான சுமார் 100க்கும் மேற்பட்ட போலீசார் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது பொத்தேரி பகுதியில் ஒரு தனியார் குடியிருப்பில் போதை மாத்திரைகள், போதை சாக்லேட், கஞ்சா உள்ளிட்டவை இருப்பது தெரிந்தது. அவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் இதுதொடர்பாக, 2 வாலிபர்களை பிடித்து, மறைமலை நகர் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அவர்கள் அளித்த புகாரின் பேரில், எஸ்ஆர்எம் கல்லூரி மாணவர்கள் மற்றும் பழைய மாணவர்கள் என 11 பேர் கைது செய்தனர்.
பின்னர், அவர்களை செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இப்பகுதிக்கு போதை பொருட்கள் எப்படி கொண்டு வரப்படுகிறது, போதைப் பொருட்களை விற்பனை செய்ய மூளையாக செயல்படும் நபர்கள் யார், இவற்றிற்கு பின்னால் இருப்பது யார், போதைப்பொருட்கள் எந்த நேரத்தில் கைமாற்றப்படுகிறது என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.