சூலூர்: கோவை மாவட்டம் சூலூர் பாப்பம்பட்டி பிரிவு பகுதியில் காம்பவுண்ட் ஒன்றில் அடுத்தடுத்ததாக 5 வீடுகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இதில் குடும்பத்தினர் மற்றும் பேச்சுலர்கள் தங்கி இருக்கின்றனர். இந்நிலையில் கடந்த 5 மாதங்களாக 3 வாலிபர்கள் ஒரு வீட்டில் தங்கி இருந்தனர். கடந்த 4 நாட்களுக்கு முன்பு இவர்களுடன் புதிதாக சேலம் மாவட்டம் சின்ன சீரகப்பட்டியை சேர்ந்த ராஜேஷ்கண்ணா (20) என்ற வாலிபர், ரூம் மேட்டாக சேர்ந்து தங்கினார். இவர் எல் அன்ட் டி பைபாஸ் சாலையில் இயங்கும் தனியார் டிரான்ஸ்போர்ட் அலுவலகத்தில் சூப்பர்வைசராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் நேற்று காலை பக்கத்து வீட்டில் வசிக்கும் குடும்பத்தை சேர்ந்த பள்ளி மாணவி குளிப்பதற்காக பாத்ரூம் சென்றிருக்கிறார். அதே வேளையில் ராஜேஷ் கண்ணா பக்கத்து பாத்ரூமில் நுழைந்துள்ளார். யாருக்கும் தெரியாமல் ராஜேஷ் கண்ணா தனது செல்போன் மூலம் பக்கத்து பாத்ரூமில் குளித்து கொண்டிருந்த மாணவியை படம் பிடிக்க முயன்றுள்ளார். இதை தற்செயலாக பார்த்த மாணவி அதிர்ச்சியில் கூச்சலிட்டு வீட்டிற்குள் ஓடி வந்து விட்டார். அப்போது, பாத்ரூமில் இருந்த ராஜேஷ் கண்ணா ஏதும் தெரியாதது போல் தனது அறைக்கு சென்றுள்ளார். பள்ளி மாணவி குளிக்காமல் அரைகுறை ஆடையுடன் வீடு திரும்பியதை பார்த்த தாய் என்ன நடந்தது என கேட்டுள்ளார்.
அப்போது அந்த மாணவி தனது தாயாரிடம் நடந்த சம்பவத்தை சொல்லி அழுதுள்ளார். உடனடியாக அவரது தாய், சூலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கிருந்த ராஜேஷ் கண்ணாவை அழைத்து வந்து விசாரணை நடத்தினர். முதலில் ராஜேஷ்கண்ணா தான் அதுபோல செய்யவில்லை என மறுத்துள்ளார். பின்னர் போலீசார் அவரது செல்போனை சோதனை செய்ய வாங்கியுள்ளனர். அதில் பல்வேறு பாஸ்வேர்ட் லாக்குகள் போடப்பட்டிருந்தது.
தொடர்ந்து ராஜேஷ் கண்ணாவிடம் கேட்டு கேட்டு ஒவ்வொன்றாக ஓபன் செய்து பார்த்துள்ளனர். அதில் 3000-க்கும் மேற்பட்ட ஆபாச படங்கள் இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் தொடர்ந்து விசாரித்தபோது யாரும் கண்டுபிடிக்க முடியாத வகையில், கடைசியாக மாணவியை எடுத்த போட்டோவையும் ராஜேஷ் கண்ணா மறைத்து வைத்திருந்தார். இதையடுத்து ராஜேஷ்கண்ணா மீது போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
* பெண் ஊழியர்களை ஆபாசமாக படம் எடுத்த மின்வாரிய ஆய்வாளர் கைது
மதுரை மாவட்டம், சமயநல்லூர் மின் கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் பணியாற்றும் பெண் ஊழியர் ஒருவர், நேற்று அலுவலக வளாகத்தில் உள்ள கழிவறைக்கு சென்றுள்ளார். அப்போது அதே அலுவலகத்தில் வணிகப்பிரிவு ஆய்வாளராக இருக்கும் மதுரை, செல்லூர் அருள்தாஸ்புரத்தை சேர்ந்த ராஜராஜேஸ்வரன் (33), கழிவறை ஜன்னல் வழியே செல்போனில் தன்னை படம் எடுப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் கூச்சல் போட்டுள்ளார். இதனால் அங்கிருந்து ஓட்டம் பிடித்த ராஜராஜேஸ்வரன், எதுவும் நடக்காததுபோல் அலுவலகத்திற்குள் வந்துவிட்டார்.
இதையறிந்த சக பெண் ஊழியர்கள் மின் கோட்ட செயற்பொறியாளர் ஜெயலட்சுமியிடம் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து ராஜராஜேஸ்வரனிடம் இருந்த செல்போனை வாங்கி பார்த்தபோது, அந்த அலுவலகத்தில் பணி புரியும் பெண் ஊழியர்களின் ஆபாச படங்கள் ஏராளமாக இருந்தன. இதனை பார்த்து அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெண் ஊழியர் புகார் அளித்தார். இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து ராஜராஜேஸ்வரனை கைது செய்தனர்.