Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நியூஸ் பைட்ஸ் - டாப் 10 மகிழ்ச்சியான நகரங்கள்

நன்றி குங்குமம் தோழி

சமீபத்தில் ஆசியாவிலேயே அதிக மகிழ்ச்சியான 10 நகரங்களின் பட்டியல் வெளியாகியிருக்கிறது. இதில் இந்தியாவில் உள்ள மும்பை முதலிடத்தைப் பிடித்து, ஆசியாவிலேயே அதிக மகிழ்ச்சியான நகரம் என்ற சிறப்பைப் பெற்றுள்ளது. சீனாவின் பெய்ஜிங், ஷாங்காய் நகரங்கள் இரண்டாம், மூன்றாம் இடத்தையும், தாய்லாந்தில் உள்ள சியாங் மாய் நான்காம் இடத்தையும் பிடித்துள்ளன. சிங்கப்பூர் ஒன்பதாம் இடத்தையும், தென்கொரியாவின் சியோல் பத்தாம் இடத்தையும் பிடித்துள்ளன.

முதல் மேயர்

உலகின் மிகுந்த செல்வாக்கான, முக்கியமான நகரங்களில் ஒன்றான நியூயார்க்கின் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார், ஜொஹ்ரான் மம்தானி. இவ்வளவு வருடங்களில் ஒரு இஸ்லாமியர் கூட நியூயார்க்கின் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதில்லை. இந்நிலையில் நியூயார்க்கின் முதல் இஸ்லாமிய மேயர் என்ற சிறப்பை தன்வசமாக்கியிருக்கிறார் ஜொஹ்ரான். மட்டுமல்ல, நியூயார்க்கின் முதல் தெற்கு ஆசிய மேயர், நியூயார்க்கின் முதல் இந்திய வம்சாவளி மேயர் மற்றும் முதல் இளம் வயது மேயரும் இவரே. ஆம்; ஜொஹ்ரானின் வயது 34தான். ஜனநாயக கட்சியின் உறுப்பினரான ஜொஹ்ரான், அமெரிக்காவின் முக்கியமான அரசியல் அமைப்பான ‘டெமாக்ரடிக் சோஷியலிஸ்ட்ஸ் ஆஃப் அமெரிக்கா’விலும் உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகரிக்கும் பெண்கள் கடத்தல்

டெல்லியில் கடந்த ஜனவரி ஒன்றாம் தேதியிலிருந்து, அக்டோபர் 15ம் தேதி வரை காணாமல் போனவர்களின் பட்டியலை டெல்லி காவல்துறை வெளியிட்டிருக்கிறது. இதில் அதிகமாக காணாமல் போனவர்கள் பெண்கள்தான் என்பது இன்னமும் பேரதிர்ச்சி. கடந்த பத்து மாதங்களில் 19,682 பேர் காணாமல் போயிருக்கின்றனர். இதில் 11,917 பேர் பெண்கள்; 7,765 பேர் ஆண்கள். அதாவது, காணாமல் போனவர்களில் 61 சதவீதம் பேர் பெண்கள்; மீதி 39 சதவீதம் பேர் ஆண்கள்.

இவர்களில் 6,541 பெண்களையும், 4,239 ஆண்களையும் கண்டுபிடித்துவிட்டனர். இதில் அடிக்கோடிட்டு குறிப்பிட வேண்டிய விஷயம், டெல்லியில் காணாமல் போகிறவர்களில் பெண்களும், சிறுமிகளும்தான் அதிகமாக பாதிப்புக்குள்ளாகின்றனர் என்பது. மட்டுமல்ல, கடந்த பத்து மாதங்களில் 4,854 குழந்தைகளும் காணாமல் போயிருக்கின்றனர். இதில் 3,509 பேர் பெண் குழந்தைகள்; 1,345 பேர் ஆண் குழந்தைகள். அதாவது, 72 சதவீதம் பேர் பெண் குழந்தைகள்; மீதி 28 சதவீதம் பேர் ஆண் குழந்தைகள் என்பது மிகவும் கவனிக்கத்தக்கது.

முதல் இந்தியப் பெண் ரேஸர்!

சர்வதேச கார் பந்தயத்தில் ஃபெராரி காரை ஓட்டப்போகும் முதல் இந்தியப் பெண் ரேஸர் என்ற பெருமையை தன்வசமாக்கியிருக்கிறார், டயானா பண்டோல். ஆம். இந்தியாவின் முதன்மையான பெண் கார் ரேஸர் இவர்தான். நவம்பரிலிருந்து ஏப்ரல் வரை மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள புகழ்பெற்ற ஃபார்முலா ஒன் டிராக்குகளில் நடக்கப்போகிற ‘ஃபெராரி சேலஞ்ச் மிடில் ஈஸ்ட்’ எனும் தொடர் கார் பந்தயத்தில் கலந்து கொள்ள தேர்வாகியிருக்கிறார் டயானா.

இப்பந்தயத்தில் தேர்வு செய்யப்படுவதே பெரும் கௌரவம்; உலகளவிலான கார் பந்தய வீரர்கள், வீராங்கனைகளின் கனவும் கூட. இந்தப் பந்தயத்தில்தான் ‘ஃபெராரி 296 சேலஞ்ச்’ எனும் ஃபெராரி காரை ஓட்டப் போகிறார் டயானா. இதுவரைக்கும் டயானா ஓட்டிய கார்களிலிருந்து அதி நவீனமானது இந்த கார். மிக வேகமாகச் செல்லக்கூடியது. எந்தச் சூழலிலும் காரை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது எளிது.

பிளாஸ்டிக்கை சுவாசிக்கும் இந்தியர்கள்

இந்தியாவில் உள்ள மாநகரங்களில் காற்று மாசுபாடு மிகவும் அதிகரித்துள்ளதாக அதிர்ச்சியளிக்கிறது சமீபத்திய ஆய்வு. குறிப்பாக கொல்கத்தா, டெல்லி, மும்பை போன்ற நகரங்களில் உள்ள சந்தைப்பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன என்றும் சொல்கிறது அந்த ஆய்வு. இந்தச் சந்தைப்பகுதிகளில் ஒருவர் தொடர்ந்து 8 மணி நேரம் இருந்தால் 190 மைக்ரோ பிளாஸ்டிக் துகள்களை சுவாசிக்க வேண்டியிருக்கும் என்றும் எச்சரித்துள்ளது அந்த ஆய்வு.

தொகுப்பு: த.சக்திவேல்