கடையநல்லூர்,ஜன.4: திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவை முன்னிட்டு நடந்த மாநில அளவிலான கட்டுரை போட்டியில் இரண்டாமிடம் பெற்ற நெடுவயல் சிவசைலநாத நடுலைப்பள்ளி மாணவிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டி பரிசு வழங்கினார். கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை நிறுவி 25வது ஆண்டு வெள்ளி விழா நிறைவை முன்னிட்டு மாநில அளவிலான கட்டுரை போட்டிகள் நடந்தது. இதில் மாநிலத்தின் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இப்போட்டியில் நெடுவயல் சிவசைலநாத நடுநிலைப்பள்ளி 7ம் வகுப்பு மாணவி மதுஜா மாநில அளவில் இரண்டாமிடம் பெற்று சாதனை படைத்தார். சாதனை படைத்த மாணவிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.3,750 பரிசு தொகையும், பாராட்டுச் சான்றிதழையும் வழங்கினார்.
தென்காசி மாவட்ட அளவில் நடைபெற்ற திருவள்ளுவர் வெள்ளிவிழா போட்டியில் 7ம் வகுப்பு மாணவி உமா சங்கவி வினாடி வினா போட்டியில் முதலிடம் பெற்று ரூ.5 ஆயிரம் பரிசு தொகை பெற்றார். பேச்சுப் போட்டியில் 7ம் வகுப்பு மாணவி இம்ரானா முதலிடம் பெற்று ரூ.5 ஆயிரம் பரிசு தொகை பெற்றார். 2 மாணவிகளுக்கு பரிசு தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழை மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் வழங்கினார். வெற்றி பெற்ற மாணவிகளையும், பயிற்சி அளித்த ஆசிரியர் பிரபாகரனையும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி, மாவட்ட கல்வி அலுவலர் ஜெயபிரகாஷ்ராஜன், வட்டார கல்வி அலுவலர்கள் முத்துலிங்கம், மகேஸ்வரி, பள்ளியின் நிர்வாகி கணேஷ்ராம், பள்ளியின் செயலர் தம்புசாமி, தலைமை ஆசிரியை சுதாநந்தினி, பள்ளிக் குழு உறுப்பினர் மணிகண்டன், ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் பாராட்டினர்.

