பேச்சுவார்த்தையும், ராஜதந்திரமும்தான் தீர்வு காசா - இஸ்ரேல் இடையே நிரந்தர போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும்: ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா வலியுறுத்தல்
ஐநா: இஸ்ரேல் காசா இடையே நீடித்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க, எகிப்து, கத்தார் உள்ளிட்ட நாடுகள் மேற்கொண்ட முயற்சியின் விளைவாக கடந்த ஜனவரி 19ம் தேதி இஸ்ரேல் ஹமாஸ் இடையே ஏற்பட்ட முதற்கட்ட ஒப்பந்தம் கடந்த மார்ச் 1ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், இரண்டாம்கட்ட ஒப்பந்தம் இன்னும் இறுதியாகவில்லை. இதையடுத்து காசா மீது இஸ்ரேல் மீண்டும் தொடர் தாக்குதல்களை தீவிரப்படுத்தி உள்ளது.
காசாவில் உணவு உள்ளிட்ட நிவாரண பொருள்களை வாங்க காத்திருக்கும் மக்கள் மீது இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து ஈவு, இரக்கமின்றி தாக்குதல் நடத்தி வருகிறது. காசாவில் கடந்த 72 மணி நேரத்தில் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் உணவு பற்றாக்குறை காரணமாக பலியாகி விட்டதாக செய்தி வௌியாகி உள்ளது. இந்நிலையில் காசா இஸ்ரேல் இடையே நிரந்தர போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என இந்தியா வலியுறுத்தி உள்ளது.
இதுகுறித்து ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் நேற்று பேசிய இந்தியாவுக்கான நிரந்தர தூதர் பர்வதேனி ஹரிஷ், “காசாவில் நீடித்து வரும் மனிதாபிமான நெருக்கடிகளுக்கு மத்தியில் இந்த கூட்டம் நடக்கிறது. உணவு மற்றும் எரிபொருள் பற்றாக்குறை, போதிய மருத்துவ வசதிகள் இல்லாதது, கல்வி பாதிப்பு போன்ற கடுமையான பிரச்னைகளால் காசா மக்கள் தினமும் அவதிப்படுகின்றனர். போர் நிறுத்தத்தை நோக்கி முன்னோக்கி செல்லும் வழிகள் தௌிவாக உள்ளது. காசாவில் துயரங்கள் தொடர அனுமதிக்க கூடாது.
காசா மக்கள் எதிர்கொள்ளும் துன்பங்களை நிவர்த்தி செய்ய இடைக்கால போர் நிறுத்தங்கள் போதுமானதில்லை. மனிதாபிமான உதவிகள் நிலையாக, பாதுகாப்பானதாக இருக்க வேண்டும். அது சரியான நேரத்தில் வழங்கப்பட வேண்டும். அமைதிக்கு மாற்றாக எதுவும் இல்லை. காசாவில் நிரந்தர போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட வேண்டும். பணய கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும். இந்த நோக்கங்களை அடைவதற்கு பேச்சுவார்த்தைகளும், ராஜதந்திரமும் மட்டுமே சாத்தியமான பாதைகளாக அமையும். வேறெதும் போரை நிறுத்த முடியாது” என்று வலியுறுத்தினார்.