Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தேசிய விண்வெளி நாள் நிகழ்ச்சி

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த அரண்வாயலில் உள்ள பிரத்யுஷா பொறியியல் கல்லூரியும், சதீஷ் தவான் விண்வெளி மையமும் இணைந்து தேசிய விண்வெளி தினம் 2024ஐ கொண்டாடியது. பிரதியுஷா கல்லூரி தலைவர் பி.ராஜாராவ் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் பி.சரண் தேஜா, முதன்மை நிர்வாக அலுவலர் பி.பிரத்யூஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சென்னை தலைவர் சாந்தி வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் கூடுதல் தலைமை செயலாளர் ஜே.ராதாகிருஷ்ணன், ஸ்ரீ ஹரிகோட்டா இயக்குனரும், அறிவியல் விஞ்ஞானியுமான ராஜராஜன், துணை இயக்குனர் ஜி.ரமேஷ் பாபு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பள்ளி மாணவர்களின் அறிவியல் படைப்புகளை பார்வையிட்டனர்.

கூடுதல் தலைமை செயலாளர் ஜே.ராதாகிருஷ்ணன் பேசியதாவது: தேசிய விண்வெளி நாள் என்பது விஞ்ஞானிகளுக்கும் மாணவர்களுக்குமானது. அதுமட்டுமின்றி முதன் முதலில் ஆரியபட்டாவையும் எஸ்எஸ்எல்வியையும் விண்ணில் ஏவிய போது இந்தியர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லை இல்லை. அத்துடன், அவர்கள் தொடங்கி வைத்த அந்த ஆரம்பக் கால விண்வெளி ஆராய்ச்சிதான் இன்று நாம் வளர்ச்சி அடைந்த நிலையில் இருக்க காரணம். அப்துல் கலாம் உட்பட பல முக்கிய விஞ்ஞானிகள் இந்த பணியை செய்துவிட்டு சென்றுள்ளனர். ஒரு ஏவுகணையை விண்ணில் செலுத்தும் போது கடைசி நிமிடம் வரையில் ஏராளமான பொறியாளர்கள் வேலை செய்கிறார்கள். அவர்களது பணியை போற்றும் வகையில் தான் இந்த தேசிய விண்வெளி நாள் கொண்டாடப்படுகிறது என்றார்.

பிறகு செய்தியாளர்களிடம் இஸ்ரோ விஞ்ஞானி ராஜராஜன் கூறியதாவது: ஆகஸ்ட் 23ம் தேதி தேசிய விண்வெளி தினம் கொண்டாடப்பட உள்ளது. தமிழகத்திலும் பல்வேறு பகுதிகளில் இது தொடர்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இந்த நிகழ்ச்சி மூலம் விண்வெளியால் என்னென்ன நன்மைகளை நாம் அடைகிறோம், நம் வாழ்வின் முன்னேற்றத்திற்கு விண்வெளி எப்படி பயன்படுகிறது, விண்வெளி ஆராய்ச்சிகளை எப்படி படிப்பது உள்ளிட்ட தகவல்களை நாம் அறிந்து கொள்ளலாம். 2047ம் ஆண்டு விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா வளர்ந்த நாடாக இருக்க வேண்டும் என்பது பிரதமர் மட்டுமின்றி நமது அனைவரது கனவாக இருக்கின்றது. இதற்காகத்தான் இது போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளும் பயிற்சிகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன என்றார்.