புதுடெல்லி: தேசிய விளையாட்டு நிர்வாக மசோதாவை ஒன்றிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா மக்களவையில் நேற்று அறிமுகம் செய்தார். இந்த மசோதா விளையாட்டு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை, நிர்வாக பொறுப்பு, வீரர்களின் நலன்களை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது. இது சட்டமாக இயற்றப்பட்டால் இந்திய கிரிக்கெட் வாரியத்தின்(பிசிசிஐ) செயல்பாடுகளில் மாற்றங்கள் வரும். இந்த மசோதா அனைத்து விளையாட்டு சம்மேளனங்களுக்கும் பொருந்தும்.
பிசிசிஐ அரசிடம் இருந்து நிதியுதவி பெறவில்லையென்றாலும் இந்த சட்டம் அவர்களுக்கும் பொருந்தும். தேசிய விளையாட்டு தீர்ப்பாயம் அமைக்கப்பட உள்ளது. இது ஒரு சிவில் நீதிமன்றத்தின் அதிகாரங்களைக் கொண்டிருக்கும். சம்மேளனங்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் சம்பந்தப்பட்ட தேர்வு முதல் தேர்தல் வரையிலான தகராறுகளைத் தீர்க்கும் என விதிமுறையில் குறிப்பிடப்பட்டுள்ளது.