Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நந்தி தேவர்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

திருவையாறில் சிலாத முனிவர் யாகம் புரிய நிலத்தை சமன் செய்தார். மண்ணை அள்ளி முகர்ந்தார். நெய்யின் மணமும், அரசுச் சுள்ளியின் சுகந்தமும் ஒருசேர வீச இதுவே யாகசாலை எனத் தீர்மானித்தார். மண்ணைத் தன் கரத்தால் அகழ்ந்து வெளியே கொணர சட்டென்று சூரியப் பிரகாசம் கண்ணைக் கூசச்செய்தது. பொன்னாற் செய்த பெட்டியொன்றைக் கண்டார். திறந்து பார்க்க அருணோதயமாக ஒளிர்ந்தது ஓர் குழந்தை. வாரி அணைத்து வீடு நோக்கி நடந்தார்.

ஆன்றோர்களைக் கூட்டி ஆயுள் ஹோமம் புரிந்து ஜப்பேசன் எனும் திருப்பெயர் சூட்டினார். ஜப்பேசன் ஈசனின் நாமத்தை ஜபித்தும், திருவையாறு ஐயாறப்பனைத் அகத்தில் இருத்தியும் பிழம்பாக வளர்ந்தான். முக்கண்ணன் அவன் பக்கம் தன் கண்களைத் திருப்ப கயிலாயக் காட்சியுற்றான். ‘இனி நீ நந்நீசன்’, எனும் தீட்சா நாமம் சூட்டினார் பிறைசூடனான ஐயாறப்பன். நந்தீசர் சிவகணத்திற்கெல்லாம் அதிபதியானார். எந்நாளும் ஈசனின் எதிரே இருக்கும் பெரும்பேறு பெற்றார்.

ஐயாறப்பர் பெருமான் அதோடு நில்லாது நந்தீசனுக்கு மணமுடிக்க முடிவெடுத்தார். நந்தீசனுக்கு இணையான நங்கையாக வியாக்ரபாதரின் குமரியைக் கண்டனர். திருமழபாடியிலேயே திருமணம் முடிக்கலாமே என்றவுடன் திருவேதிக்குடி வேதியர்கள் கூட்டம் வியந்தது. உலகெலாம் ஆளும் ஈசன் உறையும் திருக்கோயில்களில் வருடாந்திர உற்சவங்கள், திங்கள்தோறும் திருவிழா என்று நடைபெறுவது வழக்கம். சிவாலயங்களில் வாயிலில் கொடிமரத்தில் மந்திர உச்சாடனங்களுடன் கொடி ஏற்றப்படும். பக்தர்கள் குழுவாகக் கூடி நமசிவாய... நமசிவாய... என்று கரங்களை உயர்த்தி வணங்குவர். அந்தக் கொடி காற்றில் படபடத்து அசையும்போது சந்தோஷம் கொள்வர்.

கோயிலுக்குள்ளிருந்து பார்க்காமல் போனாலும், அவரவர் இல்லங்களிலிருந்தோ, சற்று உயரமான பகுதிகளிலிருந்து பார்ப்போரும் பரவசமாவார்கள். ஆஹா... நல்ல தொடக்கமாக இருக்கிறதே. இனி விழாக்கள் எல்லாம் சிறப்பாக நடைபெறுமே என மகிழ்ச்சி கொள்வர். சற்று அந்தக் கொடியை உற்றுப்பார்த்தால் கொடியின் மையத்தே நந்தியின் சின்னம் பொறிக்கப்பட்டிருக்கும். ஈசனுக்கு உரியது நந்திக்கொடி. ஒவ்வொரு நாட்டிற்கும் தேசியக்கொடிபோல சைவத்தைக் குறிக்கும் அடையாளச் சின்னம் நந்திக்கொடி.

இரண்டாயிரம் ஆண்டுகளாக நமது நாட்டில் ரிஷபக்கொடி, இடபக் கொடி, நந்திக்கொடி என்று பல்வேறு பெயர்களோடு விளங்கும் சைவத்தின் இலச்சினை அதாவது சைவத்தின் சின்னத்தை கொடியாகப் பறக்க விட்டுள்ளார்கள். பல்லவர்களின் கொடியே ரிஷபக்கொடிதான். தர்மத்தின் பாதையைக் காட்டும் கொடி நந்திக்கொடி. நந்தி அறம் வளர்த்த நாயகர். வேதங்கள் உரைக்கும் ஆன்மாவின் சொரூபம். ஈசனின் வாகனம். அதனாலேயே ஈசனை இடபக்கொடியோன் என்பார்கள்.

அதாவது, நந்திக்கொடியை தன் தனித்த அடையாளமாக பெற்றிருப்பவன் ஈசன் என்று நந்திக்கு உயர்வு கூட்டி அழகு பார்த்தனர் ஆன்றோர்கள். ஈசனுக்கு மட்டுமா வாகனம் அவர், தன்னை தரிசிப்போரையும் சுமந்து ஈசனிடம் சேர்க்கும் கருணைத்தேவன், நந்தியெம்பெருமான். அதுமட்டுமல்லாது, பக்தரையும் இறைவனையும் பிணைக்கும் சத்குரு நந்திதேவர். சிவபெருமான் நந்திமீதேறி வருவான் என்பதை ‘வெள்ளை எருதேறி’, ‘விடையேறி’ என்றெல்லாம் திருமுறைகள் கூறுகின்றன.

சத்திய தர்மத்திலே சிவம் உறையும் என்பதை கூறுகிறது. நந்திக்கு குறுக்கே செல்லக்கூடாது என்பது மரபு. அதாவது தர்மத்தின் குறுக்காக அறக்குறுக்கீடு செய்வது பாவம் என்பதே அதன் பொருள். பிரதோஷகாலத்தில் தர்மம் எனும் நந்தியின் இருகொம்புகளுக்கிடையே சிவனை வழிபடவேண்டும் எனும் அரிய தத்துவத்தை உணர்த்துகிறது. இன்னும் சற்று ஆழமாக ஆராய மற்றுமொரு பேருண்மை விளங்கும். சிவனுக்குரிய நாமமே நந்தி என்பது. தேவாரத்தில் ‘நந்தி நாமம் நமசிவாய’ என்றும், ‘நங்கள் நாதனாம் நந்தி’ என்றும் திருமந்திரம் பேசுகிறது.

ஆகவே, நந்தியும் சிவமும் வெவ்வேறல்ல என்பதும், சிவனின் தர்மரூபமே நந்தியம்பெருமான் என்பதும் சைவம் தரும் அருஞ்செய்தி. மற்றொரு பெரியவர், சக்தி சிவனின் ஆற்றலெனில், நந்தி சிவனின் இயல்பு என பிரமிப்பூட்டுகிறார். ஆற்றலும், இயல்பும் ஈசனிடமிருந்து குறித்த நேரத்தில் வெளிப்பட்டு ஒடுங்கும். ஆனால், அவை ஈசனைவிட்டு பிரியாது இருக்கும். ஊழிக்காலத்தில் யாவையும் அழிந்தாலும் ஈசன் நந்தி மீதேறி தொடர்ந்திருப்பார்.

நந்தியே சைவத்தின் கொடிச்சின்னம் என்பது சங்கப்பாடலான புறநானூற்றுக் கடவுள் வாழ்த்தாக அமைந்த பாடல் அழகாகச் சொல்கிறது. கண்ணி கார் நறுங்கொன்றை...அதாவது தன் தலையிலும், மார்பிலும் கொன்றப் பூவைச் சூடியவன் ஈசன். அவனுக்கு, ‘ஊர்தி வால் வெள்ளேறே, சிறந்த சீர்கெழு கொடியும் அவ் ஏறு என்ப’ என்கிறது. இப்பாடல் நந்தியே சிவனின் வாகனமும், கொடியும் ஆகிறது என்று உறுதியாகக் கூறுகிறது.

நந்தியம்பெருமான் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் கூட சிவனின் மகாத்மியங்களை விளக்கிக்கூறி, ஈசனின் திருவிளையாடல்களாக நிகழ்ந்த விஷயங்கள் எத்தலத்தில் நடந்தது என்று சொன்ன விஷயங்கள் கணக்கிலடங்கா. ஸ்காந்தபுராணம் எனும் பிரம்மாண்டபுராணத்தில் நந்தியம்பெருமான் சொன்ன விஷயங்கள் ஆயிரக்கணக்கானவை. ஈசனை நோக்கி தவம்புரிந்த நந்தியம்பெருமான் இமயப்பர்வதமாக மலைவடிவம் பெற்று சிவனைத் தாங்கும் பெரும்பேறு பெற்றவர்.

நந்தித்தேவர் வெண்ணிறமுடையவர். முக்கண் கொண்டவர். நான்கு கைகளை உடையவர். ஜபமாலை, சூலம், அபயவரதம் காணப்படும். நந்தித்தேவரின் நாத ஒலியால் உண்டானதே நந்திநாதோற்பவம் என்ற நதி. இது காசியில் இருக்கிறது. தில்லைவாழ் அந்தணர் மரபில் வந்த உமாபதி சிவாச்சார்யார் இயற்றியதில் கொடிக்கவி என்பதும் ஒன்று. இந்நூல் உருவான வரலாறு சுவைமிக்கது. தில்லைக்கூத்தனின் திருவாதிரைத் திருநாளில் நந்திக்கொடி ஏற்ற முயன்றனர். ஏனோ கொடி ஏறவில்லை. தீட்சிதர்கள் திகைத்தனர். நடராஜர் அசரீரியாக ஒலித்தார். ‘‘இங்கு உமாபதி வந்தால் கொடி ஏறும்’’ என்றார். உமாபதிசிவம் கைதொழுது கண்ணீர் பெருக்கி நின்றார். திருவாயால் ஐந்து திருவெண்பாக்கள் பாடினார். அதுவே கொடிக்கவி என்பதாம். இதிலிருந்தே நந்திக்கொடியின் வலிமை எத்தகையது என்பது புரியும்.

நந்தியின் உருவமைப்பே தத்துவக் குவியல். முன்பக்கத்து வலது கால் சற்றே உயர்ந்திருக்கும். அது ஞானமார்க்கத்தை குறிக்கும். சரியை, கிரியை, யோகம் என்ற மூன்று கால்களையும் மடித்து ஒடுக்கிக்கொண்டு நாலாம் பாதமாகிய ஞானப்பாதத்தினால் பரம்பொருளைக் கண்டு கொண்டிருக்கிறது என்கிறது ஆகம நூல்கள். நந்துதல் என்ற வேர்ச்சொல்லிலிருந்துதான் நந்தி என்ற சொல் வந்தது. நந்துதல் என்றால் மேலேறிச் செல்லுதல் என்ற பொருளுண்டு.

ஒரு யோகியானவன் பத்மாசனத்தில் அமர்ந்து மூலாதாரக் கனலை எழுப்பும் அமைப்பும் நந்தியிடம் உண்டு. ஔவையார் கூட விநாயகர் அகவலில் ‘மூலாதாரத்தின் மூண்டு ஏழு கனலைக் காலால் எழுப்பும்’ கருத்து அறிவித்து எனும் வரிகள் நந்தியம்பெருமானை நினைவுறுத்தும். நந்தியின் துணையால் மேலேறி ஈசனைக் காணவேண்டும் என்பதே முழுப்பொருள். நந்தியின் அருளில்லாது ஈசனைக் காண இயலாது என்கிறது சைவ ஆகமங்கள்.

ஆனால், இப்போது சில சிவாலயங்கள் தவிர பெரும்பான்மையான கோயில்களில் நந்திக்கொடியின் மகத்துவம் மறைந்து விட்டிருக்கிறது. நந்திக்கொடியின் மூலமாகத்தான் விழா நடைபெறுகிறது என்று உறுதி செய்து கொள்வார்கள். யாத்ரீகர்களாக தீர்த்த யாத்திரைக்கு பயணப்படுவோருக்கு நந்திக்கொடியே இங்கொரு சிவாலயம் உள்ளது என்று தெரிவிப்பதாக இருக்கும். அதைப் பார்த்துவிட்டுத்தான் அக்கால மக்கள் திருக்கோயிலுக்குச் சென்று தரிசிப்பார்கள். விழாக்காலங்களில் உற்சவ மூர்த்திகள் ஊர்வலமாக வரும்போது நந்திக்கொடிகளை ஏந்தி இறைவன் எழுந்தருளுகிறார். நின்று தரிசியுங்கள் என்று சேதி சொல்லும். சைவ விழாக்களில் மட்டுமல்லாது, ஒவ்வொரு கோயிலின் கலசத்திற்கருகேயோ அல்லது கோயிலின் உயரமான இடங்களில் நந்திக்கொடியை பறக்கவிடும்போது மக்கள் அடையாளம் கண்டு கொண்டு சிவதரிசனம் செய்வார்கள்.

சைவ உலகின் முதன்மையான சின்னமான நந்திக்கொடியை எல்லா சைவவிழாக்களில் ஏந்தித் திருவுலா வரவேண்டும் என்பதற்காக இலங்கையின் கொழும்புவைச் சேர்ந்த திரு. சின்னத்துரை தனபாலன் என்பவர் பன்னாட்டு அளவில் நந்திக்கொடியின் முக்கியத்துவத்தை பரப்பி சைவ உலகிற்கு அருந்தொண்டாற்றி வருகிறார். கொழும்பு சைவமுன்னேற்றச் சங்கத்தின் அறங்காவலராக உள்ளார். எல்லா சிவாலயங் களிலும் நந்திக்கொடி பட்டொளி வீசிப் பறக்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்து பயணித்து வருகிறார். நந்தி தர்மத்தின் உருவெனில், தர்மமே சைவத்தின் அடிப்படை. ஆதாரத்தை இறுக்கப்பற்றினால் சிவம் தானாக தன்னில் ஒளிரும் என்கிறார்.

தொகுப்பு: கிருஷ்ணா