நாகப்பட்டினம், அக்.25: நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சார்ந்த மெட்ராஸ் ரெஜிமெண்ட்டில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் விதவையர்களுக்கு மெட்ராஸ் ரெஜிமெண்ட் அலுவலர்களுடனான நேருக்குநேர் முகாம் வரும் 27ம் தேதி நடைபெறுகிறது.இதுகுறித்து நாகை கலெக்டர் ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: மெட்ராஸ் ரெஜிமெண்ட்டில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் விதவையர்களுக்கு மெட்ராஸ் ரெஜிமெண்ட் அலுவலர்களுடனான நேருக்கு நேர் முகாம் வரும் 27ம் தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகத்தில் அமைந்துள்ள மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
இந்த முகாமில் மெட்ராஸ் ரெஜிமெண்ட்டில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் விதவையர்கள் தங்களுடைய குறைகள், கோரிக்கைகளை எழுதி விண்ணப்பத்துடன் நேரில் வரவேண்டும். கூடுதல் விவரங்களுக்கு நாகப்பட்டினம் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தை அலுவலக வேலை நாட்களில் நேரிலோ அல்லது தொலைபேசி எண். 04365 299765 மூலமாகவோ அணுகலாம் என கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.


