நாகப்பட்டினம், டிச.5: நாகையில் மழையால் நெல் வயல்களில் ஏற்பட்டுள்ள சேதங்களை கண்காணிக்க மாவட்ட மற்றும் வட்டார அளவில் வெள்ளக் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
டிட்வா புயல் காரணமாக பெய்த கனமழையினால் நாகப்பட்டினம் மாவட்டத்தில் சம்பா மற்றும் தாளடி பருவத்தில் பயிரிடப்பட்ட 1 லட்சத்து 30 ஆயிரம் ஏக்கர் நெற்பயிரில் 60 ஆயிரம் ஏக்கர் நீரில் மூழ்கியுள்ளதாக முதற்கட்ட அறிக்கை வாயிலாக அறியப்படுகிறது.
தமிழக முதல்வர் உத்தரவின்படி, பாதிக்கப்பட்டுள்ள நெல் வயல்களில் ஏற்பட்டுள்ள சேதங்களை கண்காணிக்க மாவட்ட மற்றும் வட்டார அளவில் வெள்ளக் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

