Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

முட்டுக்காடு படகு குழாம், கரிக்காட்டுக்குப்பம் தூண்டில் வளைவு திட்டப் பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு

திருப்போரூர்: முட்டுக்காடு படகு குழாமில் நடைபெறும் மிதக்கும் படகு கட்டும் பணி மற்றும் கரிக்காட்டுக்குப்பம் தூண்டில் வளைவு திட்டப்பணிகளை கலெக்டர் அருண்ராஜ் நேரில் ஆய்வு செய்தார். சென்னை அடுத்துள்ள முட்டுக்காட்டில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்திற்கு சொந்தமான படகு குழாம் உள்ளது. இந்த, படகு குழாமில் தனியார் பங்களிப்புடன் ரூ.5 கோடி மதிப்பீட்டில் 125 அடி நீளம், 25 அடி அகலத்தில் பிரமாண்டமான உணவகத்துடன் கூடிய 2 அடுக்கு மிதக்கும் கப்பல் விடப்பட ள்ளது. இதற்கான கட்டுமானப்பணி கடந்த ஆண்டு மார்ச் மாதம் 27ம் தேதி தொடங்கி, தற்போது நிறைவு பெற்றுள்ளது. செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் நேற்று இந்த கப்பல் கட்டும் பணி நிறைவு பெற்றதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் மிதக்கும் கப்பலில் சுற்றுலாப் பயணிகளுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து, சுற்றுலாத்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் சக்திவேல், சுற்றுலாத்துறை சார்பில் முட்டுக்காடு படகுத்துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள திட்டப்பணிகள், இயக்கப்படும் படகுகளின் எண்ணிக்கை குறித்து விளக்கினார். இதைத்தொடர்ந்து முட்டுக்காடு ஊராட்சிக்கு உட்பட்ட கரிக்காட்டுக்குப்பம் மீனவர் பகுதியில் மீன்வளத்துறை சார்பில், நபார்டு வங்கி நிதி உதவியுடன் ரூ.16 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் மீன் இறங்கு தளம் மற்றும் தூண்டில் வளைவு பணிகளை மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மீன்வளத்துறை உதவி இயக்குநர் ஜனார்த்தனன், கடந்த ஜனவரி மாதம் இப்பணிகள் தொடங்கியதாகவும், வருகிற மழைக்காலத்திற்குள் பணிகள் முடிவடையும் என்றும் கூறினார். இந்த ஆய்வுகளின்போது திருப்போரூர் வட்டாட்சியர் பூங்கொடி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

* மாமல்லபுரம் அரசு மருத்துவமனையில்...

மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி இசிஆர் சாலையொட்டி அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. மாமல்லபுரம் அரசு மருத்துவமனையில் ஓ.பி, உள்நோயாளிகள் பிரிவு, ஊசி போடும் இடம், மருந்து மாத்திரைகள் வழங்குமிடம், சித்த மருத்துவ பிரிவு, பொது மருத்துவ பிரிவு, பல் மருத்துவ பிரிவு, எக்ஸ்ரே அறை, நோயாளிகளுக்கு போதிய படுக்கை வசதி உள்ளதா என செங்கல்பட்டு கலெக்டர் அருண்ராஜ் நேற்று மாலை திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மருத்துவர்களிடம் தினமும் எத்தனை நோயாளிகள் வருகின்றனர். போதிய அளவு மருந்து மாத்திரைகள் கையிருப்பு உள்ளதா, மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் உள்ளனரா என கேட்டறிந்தார். மேலும் மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் எத்தனை பேர் தேவை என அறிக்கை அளிக்க வேண்டும் என மருத்துவ இணை இயக்குனநர் (பணிகள்) அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது, மருத்துவ இணை இயக்குநர் (பணிகள்) தீர்த்தலிங்கம், திருக்கழுக்குன்றம் தாசில்தார் ராஜேஷ்வரி, மண்டல துணை தாசில்தார் சத்யா, மாமல்லபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் கணேஷ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.