Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ரூ.80 கோடியில் பிரமாண்டமாக புனரமைப்பு; வள்ளுவர் கோட்டத்தை முதல்வர் நாளை திறந்து வைக்கிறார்: கல்சிற்ப தேருக்கு சிறப்பூட்டும் வகையில் லேசர் ஒளி மற்றும் ஒலி நிகழ்ச்சி

சென்னை: ரூ.80 கோடியில் புனரமைக்கப்பட்ட வள்ளுவர் கோட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார். உலக பொதுமறையான திருக்குறளை படைத்த வள்ளுவனுக்கு நினைவு சின்னம் இல்லையே என்ற ஏக்கத்தை போக்கும் விதமாக தமிழ்நாட்டில் தலைநகரான சென்னையில் நுங்கம்பாக்கம் - கோடம்பாக்கம் நெடுஞ்சாலை சந்திப்பில், 5 ஏக்கர் பரப்பளவில் 1974ம் ஆண்டு முதல்வராக இருந்த கலைஞரால் அடிக்கல் நாட்டப்பட்டது. உலகமே வியக்கும் திருக்குறளை போன்று நினைவு சின்னமும் எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தும் விதமாக திருவாரூர் ஆழித்தேரை மாதிரி வடிவமாக கொண்டு, பல்லவக்கலை சிற்ப வேலைபாடுகளுடன் 128 அடி உயரம் கொண்ட விண்ணை முட்டுவதை போன்று உணர்வை தரும் வகையிலாக கல்தேர் செதுக்கப்பட்டது. சிற்ப வேலைபாடுகளுடன், கல்லால் செதுக்கப்பட்ட சிற்பத்தேரில் திருவள்ளுவர் சிலை வைக்கப்பட்டுள்ளது.

காந்தார கலை வடிவில் தோரண வாயிலும், திராவிட கட்டிடக் கலை பிரதிபலிக்கும் வகையில் கட்டப்பட்டது.மேலும், இங்கு 3,000 பேர் அமரும் வகையிலான அரங்கமும், இந்த அரங்கத்தின் மேல் பகுதியில் குறள் மணிமாடம் ஒன்றும் உள்ளது. அதில் 1300 குறள்களும் கற்பலகைகளில் செதுக்கிப் பார்வைக்கு வைக்கப்பட்டது. கலைஞரின் நேரடி கண்காணிப்பில் சிற்பி கணபதியை கொண்டு அடிக்கல் நாட்டிய, அடுத்த இரண்டு ஆண்டுகளில் அதாவது 1976ம் ஆண்டு வள்ளுவர் கோட்டம் அமைக்கப்பட்டு, சுற்றுலா தளமாக விளங்கி வந்ததது.ஆனால் கடந்த ஆட்சியில் உரிய முறையில் பராமரிக்கப்படாததால், சிதிலமடைந்து தனது பொலிவை இழந்து மோசமான நிலையில் இருந்தது. இந்நிலையில், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு வள்ளுவர் கோட்டத்தின் நிலையை அறிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் இதை புனரமைக்க முடிவெடுத்து ரூ.80 கோடி ஒதுக்கி உத்தரவிட்டார்.

இதை தொடர்ந்து கடந்த ஆண்டு ஜனவரி 18ம்தேதி முதல் விறுவிறுப்பாக புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. இதற்கான பணியில் 270 தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்று வரும் புனரமைப்பு மேம்பாட்டு பணிகளில் கலையரங்கம், குறள்மணி மாட கூரை புனரமைப்பு, தரைகள் புதுப்பித்தல், குறள் மணிமாட ஓவியம் சீரமைத்தல், வளாக சுற்றுச் சுவர் புதுப்பித்தல், தூண்கள், நுழைவாயில் பகுதிகளில் சிற்ப வேலைபாடுகள், மாற்றுத் திறனாளிகள் நடைபாதை என புதிய வடிவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பிரமாண்டமாக மாற்றியமைக்கப்பட்டு வந்தது.அதன்படி பார்த்தால், வள்ளுவர் கோட்டத்தின் கலையரங்கின் மேற்கூரையில் வள்ளுவனின் பிரமாண்ட படம் அமைக்கப்பட்டுள்ளது. அதோடு திருவாரூர் ஆழித்தேரை காண்பது இன்னும் வியப்பில் ஆழ்த்த கூடிய வகையில் உள்ளது.

இதில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்தேயக மின் தூக்கி , பலநிலை வாகன நிறுத்துமிடம், உணவுக்கூடம், விற்பனை மையம் உள்ளது.அதோடு கட்டுமானத்தில் சிறப்பு சேர்க்கும் விதமாக மழைநீர் வடிகால் வசதி, 2 லட்சம் கொள்ளளவு நீர் சேமிப்பு தொட்டி அமைத்தலும், சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக பேவர் பிளாக் பாதை அமைத்தல், ஆர்ஓ பிளான்ட் அமைத்தல், புல்வெளி அமைத்தல், செயற்கை நீரூற்று அமைத்தல், ஒளி ஒலி காட்சி அமைத்தல், கூட்ட அரங்கம் மற்றும் குறள்மணி மாடம் புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகள் நடந்து வந்தது. மேலும், வள்ளுவர் கோட்டம் கம்பீரமாக தோற்றம் அளிக்கும் வகையில் பிரமாண்டமான தோரணவாயில் அமைக்கப்பட்டுள்ளது. வேகமாக நடைபெற்று வந்த இந்த பணிகள் அனைத்தும் தற்போது முடிவடைந்துள்ளது.

இதனால் புனரமைக்கப்பட்ட வள்ளுவர் கோட்டம் சென்னையில் நடுவில் கம்பீரமாக காணப்படுகிறது. வர்ணம் பூசுதல் உள்ளிட்ட இறுதி கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், பொதுமக்கள் அதை கண்டுகளிக்கும் வகையில் புனரமைக்கப்பட்ட வள்ளுவர் கோட்டத்தை திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, நாளை வள்ளுவர் கோட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்க உள்ளார். அதனை தொடர்ந்து புனரமைக்கப்பட்ட குறள் மணிமாடம், திருக்குறள் ஆய்வரங்கம் மற்றும் கல்சிற்ப தேருக்கு சிறப்பூட்டும் வகையில் லேசர் ஒளி மற்றும் ஒலி நிகழ்ச்சிகளை முதல்வர் பார்வையிட உள்ளார்.