Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

புற்றுநோயிலிருந்து மீண்ட உலக அழகி!

நன்றி குங்குமம் தோழி

2025ம் ஆண்டிற்கான உலக அழகிப் போட்டி இந்தியாவின் ஹைதராபாத் நகரில் நடக்க, அந்த அரங்கில் அனைவரையும் கவர்ந்து உலக அழகி மகுடத்தை சூடியவர் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 24 வயது ஓபல் சுக்சாடா சுவாங்ஸ்ரீ (Opal Suchata Chuangsri). இவரின் வெற்றி அழகுக்கு மட்டுமல்ல, மனத்துணிவுக்கும், வாழ்க்கை மீதான நம்பிக்கைக்கும் கிடைத்த மகுடமாகும்.‘‘நான் உயிருடன் இருப்பதே எனக்கு பரிசுதான்.

உலக அழகியாக நான் மகுடம் சூடி இருப்பது என் பயணத்தின் அடுத்த அத்தியாயம் மட்டுமே” என ஓபல் கண்களில் கண்ணீருடன் மேடையில் பேசினார். ஆமாம், ஓபல் தனது 16 வயதில் மார்பகப் புற்றுநோயால் (Breast Cancer) பாதிக்கப்பட்டவர். இது அவருக்கும், அவரது குடும்பத்திற்கும் மிகப்பெரிய அதிர்ச்சியை தர, ஆரம்ப நிலையிலேயே இதற்கான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தீவிர சிகிச்சை, பெற்றோரின் ஆதரவு, தன்னம்பிக்கை இவற்றால் அதிலிருந்து முழுமையாக மீண்டார் ஓபல். பிறகு அவரின் வாழ்க்கை முற்றிலுமாக மாறியது.

மார்பகப் புற்றுநோய் தொடர்பான பிரச்சாரங்களையும் தொடர்ந்து மேற்கொண்டவர், உலக அழகிப் பட்டத்தை வெல்வதற்கான பயணத்தை 2021ம் ஆண்டிலேயே தொடங்கினார்.தனது புற்றுநோய் அனுபவத்தை ஓபல் மேடையில் பகிர்ந்த நிமிடம், அந்த மகுடம் வெறும் அழகுக்கு அல்ல, ஆற்றலுக்கான அங்கீகாரம் என மாறியது. “என் மார்பில் இருந்த துன்பம் ஒரு தடயமாக இருக்கலாம். ஆனால், அது எனது தன்னம்பிக்கையின் தடயமும் கூட” என்ற அவரின் வார்த்தைகள் பல பெண்களின் இதயங்களை தொட்டன.

மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது மற்றும் ஆபத்தான நிலையில் உள்ள பெண்களுக்கு இலவச பரிசோதனைகளுக்கான உதவிகளை வழங்கும் ‘Beauty With a Purpose’ அமைப்பின் சமூக திட்டப் பகுதியில், ஓபல் தனது ‘Pink Courage’ திட்டத்தை செயல்படுத்தினார். இதில் அவரின் அனுபவம் மற்றும் அவர் செய்த பணிகள் மதிப்பீட்டாளர்களை வெகுவாய் கவர்ந்தன. உண்மையான அழகு இதுதான் என அனைத்தையும் பின்னுக்குத் தள்ளியது உலக அழகிப் போட்டிக்காக ஜொலி ஜொலித்த அந்த மேடை.

இந்த வெற்றியால் ஓபல் சுக்சாடா தனது வாழ்க்கையை மட்டுமல்ல, பிற பெண்களுடைய வாழ்க்கையையும் மாற்றும் ஒரு சமூகத் தூதுவராக மாறியிருக்கிறார். தற்போது அவர் தாய்லாந்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான ஹெல்த் சப்போர்ட் ஹப் ஒன்றை துவக்க திட்டமிட்டுள்ளார். மேலும், இன்ஸ்பிரேஷனல் ஸ்பீக்கராக பல்வேறு நாடுகளில் உள்ள பெண்களுக்கு மத்தியில் உரையாற்றி வருகிறார்.உலக அழகி பட்டத்தை ஓபல் சுக்சாடா சுவாங்ஸ்ரீ வென்றபோது, இவரின் ஆடை அனைவரையும் ஈர்க்கும் வகையில், பெண்களுக்கான நம்பிக்கை, தூய்மை மற்றும் விசுவாசம் என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டு இருந்தது.

72வது உலக அழகி என்ற பெருமை மிக்க மகுடத்தை இவருக்கு சூட்டியவர் 2024ம் ஆண்டில் 71வது உலக அழகி பட்டம் வென்ற செக் குடியரசு நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா.ஓபலுக்கு அணிவிக்கப்பட்ட கிரீடத்தில் 175.49 கேரட் எடையில் 1770 ஜொலிக்கும் வைரங்கள் இடம் பெற்று இருந்தன. அவற்றுடன் 3 கோடி மதிப்பிலான வெள்ளைத் தங்கமும் இணைக்கப்பட்டு இருந்தது. இது தவிர இந்திய மதிப்பில் 1.15 கோடி பரிசுத் தொகையும் பணமாக வழங்கப்பட்டது.

2003ம் ஆண்டு பிறந்த ஓட்டல் உரிமையாளர்களின் மகளான ஓபல், தாய், ஆங்கிலம், சீன மொழிகளில் சரளமாய் உரையாடக்கூடியவர். தற்போது பல்கலைக்கழகம் ஒன்றில் மாணவியாக அரசியல் அறிவியல் பாடத்தை படித்து வருகிறார்.நமது போராட்டங்களும், மீண்டெழும் ஆற்றலும்தான் நம்மை உண்மையான அழகியாக மாற்றும் என்பதை உலகி அழகிப் பட்டத்தை வென்றதன் மூலம் நமக்கு சொல்லாமல் சொல்லியிருக்கிறார் ஓபல் சுக்சாடா சுவாங் ஸ்ரீ .

தொகுப்பு: மணிமகள்