15 ஆண்டுகளில் மெகா மோசடி; 8 பேரை திருமணம் செய்த ஆசிரியை கைது: 9ஆவது திருமணத்திற்கு முயன்ற போது சிக்கினார்
நாக்பூர்: கடந்த 15 ஆண்டுகளாக சமூக வலைதளம் மூலம் திருமணமானவர்களைக் குறிவைத்து, 8 பேரைத் திருமணம் செய்து மிரட்டிப் பணம் பறித்ததாக ஆசிரியை சிக்கினார். மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த சமீரா பாத்திமா. ஆசிரியை. தன்னை விவாகரத்துப் பெற்றவர் என்று கூறி சமூக வலைத்தளம் மூலம் இரண்டாவது திருமணம் செய்ய தயாராக உள்ளதாக தகவல் பரப்பி கடந்த 15 ஆண்டுகளில் 8 திருமணம் செய்துள்ளார். திருமணம் முடிந்த சில நாட்களிலேயே, சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பதாக மிரட்டி, பொய்ப் புகார்கள் அளித்து பணம் பறிப்பதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார்.
இவர் மீது குலாம் பதான் என்பவர் கடந்த 2023ம் ஆண்டு மார்ச் மாதம் கிட்டிகாடன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், சமீரா 2010ம் ஆண்டு முதல் பல ஆண்களைத் திருமணம் செய்து ஏமாற்றியுள்ளதாகவும், பல லட்சம் மோசடி செய்ததாகவும் குறிப்பிட்டு, அதற்கான ஆதாரங்களைத் தந்துள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்த புகார் அடிப்படையில் சமீரா பாத்திமா கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்ட போது 9வது திருமணத்திற்கு முயன்றது தெரிய வந்தது.