Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மயிலாடுதுறை டிஎஸ்பி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் எஸ்பி, இன்ஸ்பெக்டரிடம் டிஐஜி நேரில் விசாரணை

மயிலாடுதுறை: மயிலாடுதுறை டிஎஸ்பி மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இது தொடர்பாக தஞ்சை சரக டிஐஜி ஜியாகுல் ஹக் நேற்று எஸ்பி மற்றும் இன்ஸ்பெக்டரிடம் விசாரணை நடத்தினார். மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மதுவிலக்கு அமலாக்கு பிரிவு டிஎஸ்பி சுந்தரேசனின் வாகனத்தை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், விஐபி பாதுகாப்பு பணிக்கு மாற்றிவிட்டு பழுதடைந்த வாகனத்தை கொடுத்ததாகவும் அந்த வாகனம் தனக்கு தேவையில்லை என்று ஒப்படைத்துவிட்டு அவர் வீட்டிலிருந்து நடந்தே அலுவலகம் சென்றுள்ளார்.

இது குறித்த வீடியோ வைரலானது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் மாலை டிஎஸ்பி சுந்தரேசன் அளித்த பேட்டியில், காஞ்சிபுரம் ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டர் கஸ்தூரி கொலை வழக்கில் தனது விசாரணை அறிக்கையை மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி, உயர்அதிகாரிகள் தூண்டுதல் பெயரில் எஸ்பி, தனது வாகனத்தை எடுத்துக்கொண்டு மனரீதியாக தன்னை டார்ச்சர் செய்து வருகிறார்.

நேர்மையான போலீஸ் அதிகாரியான தனக்கு நான்கு மாதம் சம்பளம் வழங்கப்படாத நிலையில் தான் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்துள்ளேன். ஆனால் நான் ஓய்வூதியம் பெறக்கூடாது என்பதற்காக சஸ்பெண்ட் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். நான் லஞ்சம் வாங்கியது, நிரூபிக்கப்பட்டால் அலுவலக வாசலிலேயே தூக்கில் தொங்க தயார்’ என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நேற்று மயிலாடுதுறை மாவட்ட கண்காணிப்பு அலுவலகத்தில் இருந்து டிஎஸ்பி சுந்தரேசன் மீது குற்றசாட்டுகள் குறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: 2005-2006 நந்தம்பாக்கத்தில் டிஎஸ்பி சுந்தரேசன் பணிபுரிந்தபோது வழக்கு ஆவணங்களை முறையாக பராமரிக்கவில்லை என ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வள்ளியூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்த போது ஒருவர் மீது குற்ற வழக்குகள் இருப்பதை மறைத்து பாஸ்போர்ட் வழங்க பரிந்துரைத்ததாக குற்றச்சாட்டு உள்ளது.

சென்னை துரைப்பாக்கம் எல்லையில் 2 டாஸ்மாக் கடை மேலாளர்களை மிரட்டி சட்டவிரோதமாக மது விற்றதாக மாதம் ரூ.3000 வாங்கியதாக குற்றச்சாட்டு உள்ளது. துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த போது பெண்ணிடம் புகார் வாங்காமல் செல்போன் எண்ணை வாங்கிக் கொண்டு பழகி வந்ததாக குற்றச்சாட்டு உள்ளது. தனக்கு பழக்கமான பெண்ணை உதவி ஆணையர் அலுவலகத்தில் வைத்து தரக்குறைவாக பேசி அடித்ததாகவும் குற்றச்சாட்டுள்ளது.

2008ல் துரைப்பாக்கம் காவல் எல்லையில் முடிவுற்ற வழக்கை சுட்டிக்காட்டி மிரட்டி ரூ.40,000 கையூட்டு வாங்கியதாக சுந்தரேசன் மீது குற்றச்சாட்டு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்நிலையில் நேற்று மயிலாடுதுறைக்கு வந்த தஞ்சாவூர் சரக டிஐஜி ஜியாகுல் ஹக், மாவட்ட கண்காணிப்பு அலுவலகத்தில் எஸ்பி மற்றும் தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஆகியோரிடம் டிஎஸ்பி மீது உள்ள குற்றச்சாட்டுகள் பற்றி விளக்கமாக கேட்டறிந்தார். இந்த விசாரணை மாலை வரை நடந்தது.