Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

திருமணப் பொருத்தம் பார்க்கப்போகிறீர்களா?

சில மாதங்களுக்கு முன்பு ஒரு ஜோதிட ஆர்வலரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அப்பொழுது நான் சொன்னேன். ‘‘திருமணத்திற்கு ஜாதகங்களைச் சேர்த்துக் கொடுங்கள் என்று கேட்கிறார்கள். விரும்பிய ஜாதகங்களை சேர்த்துக் கொள்ள முடியுமா என்பது எனக்கு சந்தேகம்தான்’’ என்று சொன்னேன். அவர் சொன்னார். ‘‘என்ன இப்படிச் சொல்கிறீர்கள்? ஒரு பையனுக்கோ பெண்ணுக்கோ நிறைய ஜாதகங்கள் வருகின்றன, அதில் இருந்து ஒன்றை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். எது பொருத்தமாக இருக்கிறதோ அதைத்தானே தேர்ந்தெடுக்க முடியும்?’’ அப்பொழுது நான் சொன்னேன். ‘‘பொருத்தமாக இருப்பதைத் தேர்ந்தெடுப்பது என்பது வேறு; விரும்பியபடி ஜாதகம் அமைய வேண்டும் என்று நினைத்து ஜாதகத்தைத் தேர்ந்தெடுப்பது வேறு. இது இரண்டுக்கும் வேறுபாடு இருக்கிறது. நாம் விரும்பியபடி ஜாதகங்கள் அமைவது கிடையாது.’’ ஏன் என்று காரணத்தைக் கேட்டார். அப்பொழுது நான் சொன்னேன்.

‘‘இன்னாருக்கு இன்னார் என்று எழுதி வைத்தானே தேவன் அன்று’’ என்று ஒரு திரைப்பாடலைக் கேட்டிருக்கிறீர்கள் அல்லவா? ஜாதகம் என்பது பூர்வ கர்மா என்பதை முதலில் மனதில் கொள்ளுங்கள். பிறக்கும் போது பழைய ஜென்மத்தில் செய்த புண்ணிய பாவங்களின் விளைவுதான் ஜாதகக் கட்டங்கள். கிரகங்கள் அமைந்த கட்டங்களும் சரி, அவைகளின் நட்சத்திர சாரங்களும் சரி, அது தரும் பலன்களும் சரி, எல்லாம் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டது. அந்த விதிகளை மாற்றாமல் நம்முடைய மதியைப் பயன்படுத்தி எப்படி புத்திசாலித் தனமாக வாழ முடியும் என்பதைத் தான் யோசிக்க வேண்டுமே தவிர, நம்முடைய விருப்பத்திற்கு தகுந்த மாதிரியான ஒரு ஜாதகத்தை இணைப்பது முடியாது என்பதுதான் என்னுடைய கருத்து. அவர் கொஞ்சம் குழம்பினார். நான் சொன்னேன்.

‘‘உங்களுக்கு இப்படிப்பட்ட பிள்ளைதான் வேண்டும் என்பதை நீங்கள் நிர்ணயித்து பெற்றுக் கொள்ள முடியுமா? அப்படி பெற்றுக் கொள்ள முடிந்தால் ஒவ்வொருவரும் மிகச் சிறந்த பிள்ளை களைத் தானே பெற்றுக் கொள்வார்கள். நீங்கள் விரும்பிய தாய் தந்தையிடமா பிறக்கிறீர்கள்? இப்படி எல்லாம் இல்லாதபோது அவரவர்களுக்கென்று அமைந்த இல்லறத் துணைவியை விருப்பத்திற்கு தகுந்த மாதிரி இணைப்பதும் முடியாத காரியம். (முடிவது போல் தெரிந்தாலும், அது அதன் வேலைக்காட்டத்தான் செய்யும்). சேர்ந்த மனைவியை விருப்பத்தோடு அனுசரித்து வாழலாம்.

ஒரு பையன் பிறந்து அவனுக்கு தகுந்த வயதில் ஒரு பெண்ணை திருமணம் பேசி முடிக்கிறார்கள் என்று சொன்னால், அந்தப் பெண் ஏற்கனவே எங்கோ பிறந்துவிட்டாள். எத்தனைதான் விரும்பினாலும் சுற்றினாலும் ஏதோ ஒரு வகையில் இந்த பெண் இந்த பையனுக்குத்தான் மாலையிடுவாள். காரணம், நிர்ணயிக்கப்பட்ட விதி. அதை மாற்ற முடியாது. இதை இன்னொரு விதத்தில் சொல்ல வேண்டும் என்று சொன்னால், நீங்கள் காதல் திருமணம் செய்து கொள்பவர்களைப் பாருங்கள். இருவரின் ஜாதகத்தைப் பார்த்தால் அவைகள் ஒன்றுக் கொன்று பொருந்தித்தான் இருக்கும். (அல்லது அதனதன் பின் விளைவுகளை உத்தேசித்தே (நல்லதோ, கெட்டதோ) சேர்ந்து இருக்கும்.) நண்பர் ஒரு கேள்வி கேட்டார்.

‘‘அப்படியானால் ஏன் விவாகரத்து நடக்கிறது?’’நான் சொன்னேன் ‘‘அப்படித் தான் நடக்கும். அதைத்தான் இருதார தோஷம் என்றெல்லாம் ஜாதகத்தில் சொல்லுகின்றார்கள். அப்படி ஒரு தோஷம் இருக்கும் பொழுது என்னதான் புத்திசாலித்தனமாக ஜாதகம் சேர்த்தாலும்கூட அப்படித்தான் ஆகிவிடுகிறது.‘‘ஏன் இதை தகுந்த ஜோதிடர்கள் முன்கூட்டியே சொல்லி தடுக்க முடியாதா?’’‘‘ஒரு ரகசியத்தை உங்களுக்குச் சொல்லுகிறேன். இந்த மாதிரி நடக்கும் வாய்ப்பு பெற்றவர்களை அந்த கிரகமே தவறான ஜோதிடம் கேட்க அனுப்பும். அல்லது அவர்களாக முடிவு செய்து கொள்வார்கள். இப்படி ஏதோ ஒரு விதி இந்த ரகசியத்தை அவர்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்காமல் தடுத்துவிடும். அதுதான் பெரும்பாலோர் விஷயத்தில் நடக்கிறது. இதில் ஜோதிடர்களைக் குறை சொல்லிப் பிரயோஜன மில்லை. அவர்கள் நன்றாகத் தான் பார்ப்பார்கள். ஆனால் அவர்கள் சொல்வதை ஏற்றுக் கொள்ள வேண்டுமே?’’ அவர் மௌனமாகி

விட்டார். நான் தொடர்ந்தேன்

.

‘‘இப்பொழுது ஏன் விவாகரத்து ஆகிறது? அந்தக் காலத்தில் ஏன் இவ்வளவு விவாகரத்து இல்லை என்பதற்கு இன்னொரு காரணமும் உண்டு.’’‘‘என்ன காரணம்?’’ என்று கேட்டார்.‘‘சகிப்புத்தன்மைதான் காரணம். அப்பொழுது உள்ளவர்களும் இதே பிரச்னையோடுதான் வாழ்ந்தார்கள். ஆனால், அதற்காக அவர்கள் விவாகரத்து செய்து கொள்ளவில்லை. எனக்குத் தெரிந்து ஒரு கணவரும் மனைவியும் 20 வருடகாலம் பேசாமல் ஒரே வீட்டில் விவாகரத்து இல்லாமலே வாழ்ந்தார்கள். அவர்கள் பேசாமல் வாழ்ந்தார்கள் என்பதே மற்றவர்களுக்குத் தெரியாத அளவில் வாழ்ந்தார்கள். இதை திருநீலகண்டர் கதையிலும் காணலாம். திருநீலகண்டரும் மனைவியும் ஒருவருக் கொருவர் தீண்டாமலேயே விவாகரத்து இல்லாமல் வாழ்ந்தார்கள் என்பதுதான் பெரிய புராணக் கதை.

“அயல் அறியா வாழ்க்கை” என்று வியந்து பாடுகிறார் சேக்கிழார். அவர்களை சேர்த்து வைக்கத்தான் சிவபெருமானே வருகின்றார். இந்தப் பொறுமை இருந்தால் கொஞ்ச காலத்தில் விவாகரத்து செய்து கொண்ட தம்பதிகள் அவரவர்கள் தவறை சரி செய்து கொண்டு, ஒன்றாக வாழ்வதற்கும் வழி உண்டு. காரணம், ஒரு கிரகத்தின் தசா புத்தி இணைத்து வைக்கும். ஒரு தசாபுத்தி பிரித்து வைக்கும். இன்னொரு தசா புத்தி மறுபடியும் சேர்த்து வைக்கும். இந்த காலத்திற்காக பொறுமையோடு காத்திருப்பதுதான் இந்தச் சிக்கலை தீர்க்கும் வழி. ஆனால் அப்படி எல்லாம் காத்திருக்க இப்பொழுது யாரும் விரும்புவதில்லை. என்னிடம் ஒருவர் இரண்டு ஜாதகங்களை காட்டி, இவைகள் சேருமா என்று கேட்கவில்லை, சேரும்படி ஏதாவது இருக்கிறதா என்று பார்த்துச் சொல்லுங்கள்; ‘‘இவர்களுக்கு திருமணம் நிச்சயம் செய்துவிட்டோம்’’ என்று சொன்னார். நிச்சயம் செய்துவிட்ட பிறகு இதனைப் பார்ப்பதில் ஒரு பிரயோஜனமும் இல்லை. அது அப்படித்தான் நடக்கும்.

போய் வாருங்கள் என்று அவரை வழி அனுப்பி வைத்தேன். ஆனால், ஒன்று. இன்று வரை ஒரு பிரச்னையும் இல்லாமல் அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். காரணம் ஜாதகம் பார்த்தாலும் பார்க்காவிட்டாலும் அந்த சேர்க்கை என்பது இயல்பாகவே நடந்துவிடுகிறது. பையன் அல்லது பெண்ணின் ஜாதகத்தில், இன்ன கணவன்தான் வருவான்.இந்த மனைவிதான் வருவாள் என்பதை எளிதாகக் கண்டுபிடித்து விடலாம். அது எப்படி என்பதை உதாரண ஜாதகத்தோடு விளக்குகிறேன்.