Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

மீ டைம்

நன்றி குங்குமம் தோழி

ஒரு நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு மிகவும் முக்கியமானது மேலாண்மை, மென்திறன் மற்றும் ஆங்கிலத்தில் சரளமாக பேசவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். இவைதான் அடிப்படை தேவையாக இருந்து வருகிறது. அதன் பிறகுதான் அவர்களின் திறமையினை கணக்கிடுகிறார்கள். இவை மூன்றும் நாம் பள்ளியிலோ அல்லது கல்லூரியிலோ பயில முடியாது. மாறாக அதற்கு தனிப்பட்ட பயிற்சி அவசியம். அப்படிப்பட்ட பயிற்சியினை அளித்து வருகிறார் மலைமகள்.

இவர் ‘வைட்டல் ஸ்கில் ஸ்கொயர்’ என்ற நிறுவனம் மூலமாக ஒரு நிறுவனத்தில் வேலை செய்ய தேவையான அனைத்து திறமைக்கான பயிற்சியினையும் அளித்து வருகிறார். மேலும் இந்தியா மட்டுமில்லாமல், USA, சிங்கப்பூர், மலேசியா, பெஹ்ரைன், ஓமன் என 35க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள நிறுவனங்களுக்கு மேலாண்மை, மென்திறன், ஆங்கிலம் போன்ற பயிற்சிகள் மட்டுமில்லாமல், கன்டென்ட் ரைட்டிங் மற்றும் உளவியல் ஆலோசனைகளும் வழங்கி வருகிறார். ‘‘உளவியலில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கிறேன். மேலும் பயிற்சி மற்றும் மேம்பாடு, உளவியல் ஆலோசனையில் முதுகலை டிப்ளமோ முடிச்சிருக்கேன்.

பயிற்சி மற்றும் மேம்பாடு துறையில் இரண்டு பாடங்களில் முதலிடம் பெற்றதால், அன்றைய குடியரசுத் தலைவராக இருந்த பிரணாப் முகர்ஜி அவர்களிடம் அதற்கான விருதினை பெற்றேன். அந்த நாள் என்னால் மறக்கவே முடியாது. படிப்பு முடித்ததும் ஆசிரியர், விரிவுரையாளர், பயிற்சித் துறை தலைவர், உளவியல் ஆலோசகராகவும் செயலாற்றி இருக்கிறேன். தற்போது பெற்றோர்களுக்கான குழந்தை வளர்ப்பு சார்ந்த ‘10 வேஸ் டூ சாஃப்டிவை யுவர் கிடோஸ்’ என்ற தலைப்பில் குழந்ைத வளர்ப்பு குறித்து புத்தகம் ஒன்றை எழுதி இருக்கிறேன்.

ஒரு நிறுவனத்திற்கான தலைமை பதவி வகிப்பவர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கு பண்புகளை, திறனை மேம்படுத்தக்கூடிய பயிற்சிகளை அளிக்கும் போது, அதையே ஏன் பெற்றோர் மூலம் குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடாது என்ற எண்ணம் ஏற்பட்டது. அந்தக் கருவில் உருவானதுதான் இந்த புத்தகம். பத்து எளிய வழிகளில் பிள்ளைகளை செம்மையான பண்புடையவர்களாக வளர்க்க என்னென்ன செய்யலாம் என்று இந்த நூலில் அறிவியல், மேலாண்மை தத்துவங்கள் மற்றும் உளவியல் சார்ந்த வழிமுறைகளாக கொடுத்திருக்கிறேன்’’ என்றவர் இந்த நிறுவனம் அமைத்த காரணத்தை விவரித்தார்.

‘‘பல பட்டப் படிப்புகளை படித்திருந்தாலும், வாழ்வில் மிகப்பெரிய நெருக்கடி வரும் வரை, எனக்குள் இருக்கும் திறமை மற்றும் பணத்தேவை பற்றி சிந்தித்ததே இல்லை. அந்த நெருக்கடியை சமாளிக்க பெறிதும் போராட வேண்டி இருந்தது. அதற்கான வெற்றிப் பாதையை நோக்கி நான் பயணிக்க தயாரான போதுதான் எனக்குள் இருந்த திறமைப் பற்றி என்னால் கண்டறிய முடிந்தது. அதற்கு ஏற்ப நான் என் வாழ்க்கையை சீரமைக்கத் துவங்கினேன். அப்படி உருவானதுதான் இந்த நிறுவனம். இந்த முயற்சியில் நான் கற்றுக் கொண்ட முக்கிய பாடம், பெண்களுக்கான ‘மீ டைம்’ அவசியம் என்பதுதான்.

பொதுவாக சமூகத்தில் பெண்கள் மற்றவரை சார்ந்து வாழ்பவர்களாக தான் பார்க்கப்படுகிறார்கள். அதுதான் உண்மை. ஆனால் பெண்களுக்கு பிரத்யேக தலைமைப் பண்புகள் அவர்களுக்குள் உள்ளது. அதுதான் அவர்களை குடும்பத்தை வழிநடத்தவும், நிறுவனத்தில் திறம்பட வேலை செய்யவும் உதவுகிறது. வேலைக்கு செல்லும் பெண்களால் தனக்குள் இருக்கும் தலைமைப் பண்புகளை உணர்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கின்றன. இல்லத்தரசிகளுக்கு அந்த வாய்ப்பு இருப்பதில்லை.

திருமணத்திற்குப் பிறகு தங்களின் கனவுகளை மூட்டைக்கட்டிவிட்டு, குடும்பத்திற்காகவே வாழத் தொடங்கி விடுகிறார்கள் பெரும்பாலான இல்லத்தரசிகள். இதனால் அவர்கள் தனக்குப் பிடித்த உணவு என்ன என்பதைக்கூட மறந்துவிடுகிறார்கள். குடும்பத்தில் ஒரு இக்கட்டான சூழல் ஏற்படும் போது, செய்வதறியாமல் கலங்கி நிற்கிறார்கள். கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், கைம்பெண்கள், கணவனை இழந்த பெண்கள் அந்த நிலையை அடையும் போதுதான் தங்களையும் குடும்பத்தையும் காப்பாற்ற படித்த படிப்பு, திறமையை மீண்டும் தூசி தட்டி எடுக்கிறார்கள்.

அதில் ஒரு சிலர் வெற்றி பெறுகிறார்கள். சிலர் தோல்வியை சந்திக்கிறார்கள். திருமணமாகி வேலைக்கு போகாமல் இல்லத்தரசியாக இருந்தாலும் பெண்கள் தங்களுடைய திறமைக்கு முக்கியத்துவம் கொடுத்து அவற்றை தினமும் மேம்படுத்திக்கொள்வது அவசியம். அவ்வாறு திறனை வளர்த்துக் கொள்ளும் பெண்கள் மன உளைச்சலை கையாளும் விதம், உணர்வு மேலாண்மை, சீரிய முடிவு எடுக்கும் தன்மை, பிறரை வழி நடத்துதல், நிதி மேலாண்மை போன்ற திறன்கள் கொண்டவர்களாக தன்னை மாற்றிக் கொள்கிறார்கள். மேலும் குழந்தை வளர்ப்பிலும் பெரிய மாற்றத்தினை கொண்டு வர அவர்களால் முடிகிறது’’ என்றவர் பெண்களுக்கான ‘மீ டைம்’ குறித்தும் விவரித்தார்.

‘‘மீ டைம் என்பது, உங்களுக்காக ஒரு அரை மணி நேரம் ஒதுக்கிக் கொள்வது. இந்த நேரத்தில் மூச்சுப் பயிற்சி, உடற்பயிற்சிகள், தியானம், நடைப்பயிற்சி மற்றும் JOURNALING செய்வது மிகுந்த பலன்களை அளிக்கும். JOURNALING என்பது ஒருவரின் விருப்பங்கள், திறமைகளை பட்டியலிடுவது. அதாவது, இன்றைய நாள் எப்படி அமைந்தது, எந்த விஷயம் பிரச்னைகளை கொண்டு வருகிறது போன்றவை உள்ளடக்கியதாக இருக்கலாம்.

JOURNALING, ஒருவரின் தனித்திறன்கள் என்ன என்ற தேடலை சிறப்பாக எடுத்துக்காட்டும். அதுமட்டுமில்லாமல், குடும்பம் மற்றும் அலுவலகப் பணியிலும் பல நேர்மறை மாற்றங்களை கொண்டு வரும். இந்த அரை மணி நேரம் அவர்களுக்காக மட்டுமில்லாமல், குழந்தை வளர்ப்பிலும் கவனம் செலுத்தும் போது, இவருக்கும் குழந்தைக்கும் இடையே ஒரு பந்தத்தை உருவாக்கும். அது குழந்தைகளுக்கு சிறந்த பண்புகளை உருவாக்கி அவர்களிடையே அசாதாரணமான மாற்றங்களை ஏற்படுத்த உதவும்” என்றார் மலைமகள்.

தொகுப்பு: ஜோதி