Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

லிங்கராஜா கோயில்

சிற்பமும் சிறப்பும்

ஆலயம்: லிங்கராஜா கோயில், புவனேஸ்வர், ஒடிசா.

பெரும் சிவாலயமான லிங்கராஜா கோயில் புவனேஸ்வரில் உள்ள பழமையான கோயில்களில் ஒன்றாகும். இந்து மதத்தின் இரண்டு முக்கிய பிரிவுகளான சைவம் மற்றும் வைணவம் ஒன்றிணைந்து இங்குள்ள சுயம்பு லிங்கம் ‘ஹரிஹரன்’ என வணங்கப்படுகிறார்.கோயிலின் தற்போதைய வடிவம் பொ.ஆ.11 ஆம் நூற்றாண்டில் மன்னர் முதலாம் சோமவன்ஷி (1025-1040) என்பவரால் கட்டப்பட்டது.ஏழாம் நூற்றாண்டின் சில சமஸ்கிருத நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, கோயிலின் ஒரு பகுதி கிபி ஆறாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது என்பதற்கான சான்றுகள் உள்ளன.

புகழ்பெற்ற வரலாற்றாசிரியரான ஜேம்ஸ் ஃபெர்குசன் (James Fergusson, 1808-86), இக்கோவிலை ‘one of the finest examples of purely Hindu temple in India’ என்று குறிப்பிடுகிறார். ஃபெர்குசனின் கூற்றுப்படி 615 முதல் 657 வரை ஆட்சி செய்த மன்னர் ‘லலத் இந்து கேசரி’யால் இந்த கோயிலின் கட்டுமானம் தொடங்கப்பட்டிருக்கலாம்.40 ஏக்கர் பரப்பளவில் உள்ள பரந்து விரிந்துள்ள இக்கோவில் வளாகத்தில் 150 துணைக் கோவில்கள் உள்ளன. 180 அடி உயரத்தில் இருக்கும் பிரம்மாண்டமான விமானத்தைக் காணுகையில் பார்வையாளர்களுக்கு பெரும் பிரமிப்பையும் மரியாதையையும் ஏற்படுத்துகிறது.

கோயிலை நான்கு முக்கிய பகுதிகளாகப் பிரிக்கலாம். கர்ப்ப கிருஹம் (கருவறை), யஜன மண்டபம் (பிரார்த்தனைக்கான மண்டபம்), நாட்டிய மண்டபம் (நடனம் மற்றும் இசை மண்டபம்) மற்றும் போக மண்டபம் (பக்தர்கள் இறைவனின் பிரசாதம் பெறக்கூடிய இடம்).

விரிவான கட்டிடவியல் அமைப்பு, விமானங்களின் விகிதாச்சாரங்கள், நேர்த்தியான கைவினைத்திறன், பெரிதும் ஈர்க்கக்கூடிய பரிமாணங்கள் என பலதரப்பட்ட கூறுகளில் இக்கோயில் தலைசிறந்த படைப்பாகக் கருதப்படுகின்றது.

ஜெகதீஷ்