Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

பிசிஓடி வருமுன் காப்போம்!

நன்றி குங்குமம் டாக்டர்

இன்றைய காலகட்டத்தில் பருவமடைந்த வளரிளம் பெண்கள் முதல் மாதவிடாய் நிற்கும் வயதில் உள்ள பெண்கள் வரை பரவலாக பிசிஓடி (பாலிசிஸ்டிக் ஓவேரியன் டிசீஸ்) பிரச்னை காணப்படுகிறது. அதாவது 10- 20 சதவிகித பெண்கள் பிசிஓடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். பிசிஓடி நோயா என்றால் இல்லை. உடலில் ஏற்படும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வால் உருவாகிறது. அதே சமயம், இது குறித்து பெண்கள் கட்டாயம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம். பி.சி.ஓ.டிக்கு முறையான சிகிச்சை எடுத்துக் கொள்ளவில்லை என்றால் டைப் 2 நீரிழிவு நோய், மன அழுத்தம், உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய பிரச்னைகள், எண்டோமெட்டீரியல் புற்றுநோய், கருவுறாமை உள்ளிட்டவைகளை எதிர்கொள்ள நேரிடும். இது குறித்து நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் மகப்பேறு மருத்துவர் ஆர்.பிரேமலதா.

பிசிஓடி உருவாகும் காரணங்கள்

உணவு முறை மாற்றம், மரபணு பிரச்னை மற்றும் உடல் உழைப்பற்ற லைஃப் ஸ்டைலுமே பிசிஓடி ஏற்பட காரணமாகிறது. மரபணு பிரச்னை எனும்போது தாய் வழி, தந்தை வழியில் யாருக்கேனும் மாதவிடாய் பிரச்னை இருந்திருந்தால் அதன் காரணமாக அடுத்த தலைமுறையினருக்கு இந்த பிரச்னை தொடர்கிறது. கர்ப்பப்பை பக்கத்தில் உள்ள சினைப்பையில் நீர்கட்டிகள் உருவாதைத்தான் பிசிஓடி என்கிறோம். அதாவது, ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதமொரு முறை சினை முட்டை வெடித்து வெளியேற வேண்டும். அப்படி வெளியேறாமல் சினைப்பையிலேயே தங்கிவிடும்போது, சினைப்பையில் சிறு சிறு நீர்க்குமிழ்கள் உருவாகிறது. இதனால் உடலில் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் உருவாகி மாதவிடாய் சுழற்சியில் பிரச்னை ஏற்படுகிறது.

பிசிஓடியின் அறிகுறிகள்

முறையற்ற மாதவிடாய், தேவையற்ற இடங்களில் முடிவளருதல், முகப்பரு தோன்றுதல், முடி கொட்டுதல், உடல் பருமனாகுதல் இவையெல்லாம் பிசிஓடியின் அறிகுறிகளாக கருதப்படுகிறது. மேலும் மற்றொரு அறிகுறியாக, கழுத்துப்பகுதியின் பின்புறம், அக்குள் போன்ற பகுதிகளில் கருநிறத்தில் தோலில் கோடுகள் போன்று தோன்றும். இதை Acanthosis Nigricans என்று கூறுவோம். இது இன்சுலின் குறைபாட்டின் வெளிப்பாடாகும். இதுவும் பிசிஓடியின் ஒரு முக்கிய அறிகுறியாகும்.

பிசிஓடியால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்

பொதுவாக, ஒரு பெண்ணின் சினைப்பையில் இருந்து அதிக அளவில் பெண்மையின் ஹார்மோனான ஈஸ்ட்ரோஜெனும் (Estrogen) சிறிய அளவில் ஆண்மையின் ஹார்மோனான ஆண்ட்ரோஜெனும் (Androgen) சுரக்கும். ஆனால் பிசிஓடி பிரச்னை ஏற்படும்போது, ஆணின் ஹார்மோனான ஆண்ட்ரோஜென் சற்று அதிகளவில் சுரக்கிறது. இதனால் பிசிஓடி உள்ள பெண்களுக்கு ஆண்களைப் போல மீசை, தாடி, அக்குள் பகுதிகளில் முடிகள் வளர வாய்ப்புண்டு. இந்த நிலை முற்றினால் தலை சொட்டை (androgenic alopecia) ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது. இதுவே முறையற்ற மாதவிடாய்க்கும், குழந்தையின்மைக்கும் காரணமாகிறது.

பிட்யூட்டரி சுரப்பியில் இருந்து Follicular stimulating hormone(FSH) சுரக்க ஆரம்பித்து விடும். இந்த FSH அளவு நன்றாக இருந்தால்தான், பெண்ணின் சினைப்பையில் இருக்கும் கருமுட்டைகள் வளர்ச்சி அடையும். இல்லையென்றால், கருமுட்டைகள் சரியாக வளர்ச்சி அடையாமல், பாதி வளர்ந்த நிலையிலேயே பல முட்டைகள் சினைப்பையில் காணப்படும்.

பிசிஓடி பெண்ணின் மூளை, leutinising hormone(LH) ஐ அதிகமாக சுரக்கும். இந்த லூடினைசிங் ஹார்மோன் சரியாக முட்டை வெளியேற்றத்துக்கு மட்டுமே தேவை. இந்த LH, தேவைக்கு மீறி அதிகமாக இருப்பதாலும், முட்டைகள் சரியான வளர்ச்சி அடையாமல் இருப்பதாலும், மாதவிடாயின் மத்தியில் நிகழ வேண்டிய சினைப்பையில் இருந்து முட்டை வெளியேற்றம் தடைபட்டு விடும்.

முட்டை சரியாக வெளியேற இன்சுலினும் சரியாக வேலை செய்ய வேண்டும். அதுவும் பாதிக்கப்படுவதால், முட்டை வெளியேற்றம் முற்றிலும் நின்று விடுகிறது. (Anovulatory cycles) LHஆனது தான் செய்ய வேண்டிய வேலையான முட்டை வெளியேற்றுதலை செய்ய முடியாமல் போனால், சினைப்பையில் உள்ள THECA செல்கள், இன்னும் அதிகமான ஆண்மை ஹார்மோன்களை சுரக்கும். இதனால்தான் பிசிஓடி பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சரியாக மாதவிடாய் வராமல் போகிறது.

அதுபோன்று மாதவிடாய் சுழற்சியில், முட்டை வெளியேறாமல் எப்படி கரு உருவாக முடியும்? அதனால் தான். பிசிஓடி பாதிக்கப்பட்ட பெண்கள் கர்ப்பம் தரிப்பதில் பிரச்னை ஏற்படுகிறது. இந்த பிரச்னை அனைத்திற்கும் மூலக் காரணம், இன்சுலின் ரெசிஸ்டென்ஸ். அதை சரி செய்தால், இந்த ஹார்மோன் ஏற்றதாழ்வுகள் படிப்படியாக சீராகிவிடும். ஹார்மோன் ஏற்றதாழ்வு சரியானாலே பிசிஓடி கட்டுக்குள் வந்துவிடும்.

அதுபோன்று பெண்களில் உடல்பருமன் இல்லாதவர்களுக்கும் பிசிஓடி வருகிறது. இதை LEAN PCOD என்போம். இந்த LEAN PCOD -இல் பெண்களுக்கு இன்சுலின் ரெசிஸ்டென்சை தொடர்ந்து கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். பொதுவாக, 100க்கு 90 சதவிகித பெண்கள் எடை அதிகமானவர்களாகவே (obese PCOD) இருக்கின்றனர். 10 சதவிகிதத்திற்கும் குறைவாகவே எடை குறை உள்ள பெண்களுக்கு lean PCOD வருகிறது.

சிகிச்சை மற்றும் உணவு முறை

எடை அதிகமாக உள்ள பிசிஓடி பெண்கள் கட்டாயமாக டயட் கடைபிடிக்க வேண்டும். இதுதான் பிசிஓடி பிரச்னைக்கு முதல் தீர்வு. அவரவர் உயரத்துக்கு ஏற்றவாறு எடையை குறைக்க வேண்டும். இதற்காக தினமும் உடற்பயிற்சி, நடை பயிற்சி செய்ய வேண்டும். உடல் எடை மெல்ல குறைய குறைய இன்சுலின் நன்றாக சுரக்க ஆரம்பிக்கும். இன்சுலின் நன்றாக வேலை செய்வதால், சினைப்பையில் இருந்து கருமுட்டை வெளியேறுவதில் பிரச்னை இருக்காது.

அதுபோன்று, பிசிஓடி உள்ள பெண்களுக்கு மெட்ஃபார்மின்(metformin) மாத்திரைகள் பரிந்துரைக்கப்படுகிறது. இது இன்சுலினை வேலை செய்ய வைப்பதற்காக கொடுக்கப்படுகிறது. இதுவே சர்க்கரை நோய் இருப்போருக்கும் பயன்படுகிறது.பிசிஓடி உள்ளவர்கள் சிக்கன், மட்டன் போன்ற கறி வகைகள், முட்டை வெள்ளைக்கரு, ஒமேகா3 கொழுப்பு அதிகமுள்ள மீன்கள், காய்கறிகள், பழங்கள், கொட்டைகள் (nuts) போன்றவற்றை அதிகம் உண்ணவேண்டும்.

தவிர்க்க வேண்டியவை

சர்க்கரை, பதப்படுத்தப்பட்ட உணவுகள், பேக்கிங் செய்யப்பட்ட தின்பண்டங்கள், பேக்கரி பொருட்கள் ஆகியவற்றை கட்டாயம் தவிர்க்க வேண்டும். கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் இல்லாத உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். சில பெண்கள் பால் பொருட்களை தவிர்க்க வேண்டும். இவற்றை எல்லாம் முறையாக கடைபிடித்து வந்தால் விரைவில் பிசிஓடி

பிரச்னைக்கு தீர்வு காணலாம்.

தொகுப்பு: ஸ்ரீதேவி குமரேசன்