Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ஸ்டீரியோடைப்களை உடைத்து முன்னேறலாம்!

நன்றி குங்குமம் தோழி

எல்லாத் துறைகளிலும் அங்கீகரிக்கப்படக்கூடிய உயர் பதவிகளில் பெண்கள் பங்காற்றுகின்றனர். ஆனால், உயர் பதவிகளில் இருந்தும்கூட தாங்கள் பாரபட்சம் பார்க்கப்படுவதாக உணருகின்றனர். இது போன்ற ஆக்கிரமிப்புகளை எதிர்கொள்ளும் பெண்களுக்கு சிஸ்கோ இந்தியா&சார்க் அமைப்பின் தலைவரான டெய்ஸி சிட்டிலபில்லி, பெண்கள் பணியாற்றும் இடங்களில் சந்திக்கக்கூடிய ஸ்டீரியோடைப்களை உடைத்து முன்னேறுவதற்கான வழிகளை குறித்து தன் அனுபவங்கள் மூலம் பகிர்கிறார்.“பெண்கள் தங்களது திறமைக்கு தகுந்தாற்போல வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும். உணர்ச்சி நுண்ணறிவை மேம்படுத்துவதும் முக்கியமானது.

பெண்களுக்கு தலைவர்களாக இருக்கக்கூடிய திறன் உள்ளது. பல்வேறு பணிகளை செய்வது, நெருக்கடிகளை மேலாண்மை செய்வது, மாற்றத்திற்கு தங்களை எளிதாக உட்படுத்திக்கொள்வது போன்றவற்றில் சிறந்து விளங்கக்கூடியவர்கள். மேலும், தகவமைப்புத்திறன் கொண்டவர்கள். ஆண்கள் இப்படியெல்லாம் இல்லையென்று சொல்லவில்லை. ஆனால், பெண்களும் இப்படித்தான் என்கிறேன். ஒரு குழுவின் தலைவராக இருப்பதற்கு இவையெல்லாம்தான் முக்கியம். நான் லாப நஷ்ட மேலாண்மை தலைவராக சிறப்பாக பணியாற்றியதற்காக பல பாராட்டுகளை பெற்றேன். காரணம், நிதி, மனிதவளம், சந்தைப்படுத்துதல், தகவல் தொடர்பு போன்ற பல துறைகளில் பெண்கள் பணி செய்வதைப் பார்க்கலாம். ஆனால், லாப நஷ்ட மேலாண்மை பொறுப்புகளில் பெரும்பாலும் பெண்களை காணமுடியாது. நான் அந்த துறையில் இருந்த போது பலர் வியந்து பார்த்துள்ளனர். சமத்துவமான உலகமாக மாறிவிட்டது என்று அவர்கள் கூறியதை நானும் ஒப்புக்கொள்கிறேன்.

பெண்கள் தங்களுக்கும், அவர்கள் வழிநடத்தக்கூடிய அணிகளுக்கும், வணிகத்திற்கும் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பொறுப்புகளில் ஈடுபாட்டுடன் செயல்படுவார்கள். அவர்களின் திறனை ஏற்றுக்கொண்டு சமூகத்தில் அர்த்தமுள்ள மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்பதையே நான் விரும்புகிறேன்” என்றவர் பல தடைகளை தகர்த்தே இந்த தலைவர் பொறுப்பிற்கு வந்துள்ளார்.

“1990 காலக்கட்டத்தின் நடுப்பகுதியில் தொழில்நுட்ப விற்பனையில் ஈடுபடத்தொடங்கினேன். அப்போது பெண்கள் விற்பனை சார்ந்த பணிகளில் இல்லை. இதனால் இந்த விஷயத்தை தீவிரமாக எடுத்துக்கொள்வதே என் முதல் தடையாக இருந்தது. தொடர்ந்து வெற்றிகளை குவித்து உங்களை நிரூபிக்கும்போது உங்கள் மீதான நம்பகத்தன்மை வளரும். இவ்வாறு செயல்படும் போது நம்மை மறுப்பவர்களை விட ஆமோதிப்பவர்கள் அதிகமாக இருப்பார்கள். சரியான நேரத்தில் சில நபர்கள் உங்களுடன் இருப்பது முக்கியம்.

என் திறன் என்னவென்பதை நான் அறிந்திடாத போது, அதைக் கண்டறிந்து எனக்கு தெரியப்படுத்தினார்கள். நான் யார், என்னுடைய திறமை என்ன என்று கூறினார்கள். மகிழ்ச்சியாகவும் நிறைவாகவும் இருக்கிறீர்கள் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். நீங்க எவ்வளவு புத்திசாலித்தனத்துடன் இருந்தாலும், யாரையேனும் சார்ந்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவதை எதிர்த்துப் போராடவேண்டும். சூழ்நிலைக்கேற்ப அதனை கையாள வேண்டும். சில நேரங்களில் கண்ணியத்துடனும், உறுதியான வார்த்தைகளை வெளிப்படுத்தியும், சமயங்களில் கனிவுடனும் பணிவுடனும் கையாளப் பழக வேண்டும்.

ஒருபோதும் நிதானத்தை இழந்துவிடக் கூடாது உதாரணமாக, நான் ஒருமுறை விமானநிலையத்தில் இருந்தபோது, பரிசோதனைக்காக காத்திருந்தேன். முகம் சரிபார்த்து பரிசோதிக்கும் வரிசை கடைசியில் இருந்தது. அதற்காக ஒதுக்கப்பட்ட இரண்டு வரிசைகளும் ஆண்களுக்கானது. பெண்களுக்கென்று எதுவும் இல்லை. எங்களை அந்த கடைசி வரை நடந்துசென்று வரிசையில் இணையுமாறு சொன்னார்கள். நாங்கள் மூன்று பெண்கள் இருந்தோம். நான் அதில் சிரமம் பார்க்கவில்லை.

ஆனால், மற்ற இரண்டு பெண்கள், CRPF பணியாளர்களின் மேற்பார்வையாளர்களை சந்தித்து பேசியவுடன், உடனே அங்கு பெண்களுக்கான ஒரு வரிசை திறக்கப்பட்டது. இதுபோல உங்களுக்காக பேச உங்களுக்கு தைரியம் வேண்டும்” என்ற டெய்ஸி தன் வாழ்வில் ஒரு திருப்புனை ஏற்பட்டதாக கூறுகிறார்.

“நான் பணியாற்றி வரும் நிறுவனத்தில், இப்போது நான் இருக்கும் பொறுப்பில் வேறு ஒருவர் இருந்தார். அவர் எனக்கு வழிகாட்டியாக இருப்பதாக அவர் என்னிடம் சொன்னபோது எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. நான் என் வேலையில் முன்னேறிக் கொண்டிருந்தேன். ஆனால், இதை எதிர்பார்க்கவில்லை. அவர் என்னை அவருடைய நாற்காலியில் அமர வைத்து, ‘நீ விரும்பினால் இதுதான் உன் இலக்கு’ என்றார். பின்னர் ஒருநாள் தலைவராக பொறுப்பேற்றவுடன் நான் ஒரு முழுமையான தலைவராக மாற நிறைய விஷயங்களை வெளிப்படுத்த வேண்டும் என்பதும் புரிந்தது. உங்க கருத்துக்களை வெளிப்படுத்தும்போது உணர்ச்சிவசப்படக்கூடாது. அதற்கு பழகிய பின், இப்போது என் குரலும் தொனியும் நன்கு பரிணமித்துள்ளன.

தொடக்கத்தில் என்னிடம் ஆளுமை இருந்தது. என்னை யாரும் ஏமாற்ற முடியாது. அந்த வகையான பொறுப்புகளில் இருக்கும் போது சற்று கண்டிப்புடன் இருக்க வேண்டும். பணியிடத்தில் உணர்ச்சிவசப்படுவது பலவீனமான ஒன்றாக கருதப்படும் சமூகத்தின் விளைவாகவும் நான் இருக்கிறேன். என் பெற்றோர்கள் சிறு வயது முதலே சுதந்திரமாக இருக்க எனக்கு கற்றுக்கொடுத்தார்கள். அப்போது அவர்கள் என்னிடம் சுதந்திரம், முடிவெடுப்பது, மனிதத் திறன் பற்றியெல்லாம் பெரிதும் பேசவில்லை. ஒவ்வொரு மாதமும் வங்கிக்கு சென்று என்னை பணம் எடுத்துவரச் சொன்னார்கள்.

அந்த சின்ன செயலே எனக்கு சுதந்திரத்தை கற்றுத்தந்தது. உங்களின் செயல் உங்களுக்காக மட்டுமின்றி மற்றவர்களுக்கும் அது என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டும். ஒரு தலைவராக உங்களிடம் இருக்க வேண்டிய மிக முக்கியமான பண்பும் இதுதான். சரியான விஷயத்தை செய்வதென்பது அவ்வளவு எளிதல்ல. என் தந்தையிடமிருந்து நான் இதனை கற்றுக்கொண்டேன். பெண்கள் தொழில் ரீதியாக உயரும் போது தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் சில தியாகங்கள் இருக்கலாம்.

பெண்கள் பரிபூரணவாதிகளாக இருக்க விரும்பாதவரையில் அவர்களால் பல வேலைகளில் ஈடுபட முடியும். நான் பார்த்தவரையிலும் பெரும்பாலான பெண்களிடம் குற்ற உணர்வு அதிகமாக இருக்கிறது. பெண்கள் பெற்றோர்களின் பராமரிப்பாளராக, தாயாக, மனைவியாக, வணிகத் தலைவராக இருக்கும் போது சில நேரங்களில் சில விஷயங்கள் தடுமாறும், அது பரவாயில்லை” என்றார் டெய்ஸி.

தொகுப்பு: ரம்யா ரங்கநாதன்