Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பழைய நோட்டுப் புத்தகங்களை மறுசுழற்சி செய்யலாம்!

நன்றி குங்குமம் தோழி

நூலகத்தின் உள்ளே நுழைந்ததும் மொபைல் போன்கள் போன்ற எந்த கவனச்சிதறல்களும் இல்லாமல் குழந்தைகளும், சிறார்களும் தங்கள் விருப்பப்படி புத்தகங்களை எடுத்து படிக்கவே சென்னை பெருங்களத்தூரில் அமைந்துள்ளது ‘ப்ரக்ரித் அறிவகம்’ எனும் நூலகம். புத்தக வாசிப்பை ஊக்கப்படுத்துவது மட்டுமின்றி குழந்தைகளின் கற்றல் திறன்களை மேம்படுத்தும் விதமாகவும் பல்வேறு சிறப்பு செயல்திட்டங்களை நடத்தி வருகிறார் இந்நூலகத்தின் நிறுவனர் ஸ்ரீராம்.

இவர் தன்னார்வலர்களுடன் இணைந்து சிறுவர்களின் எழுத்து திறமை, கதை சொல்லும் திறன், வாசகர் அனுபவங்கள், திருக்குறள் கதைகள், அறிவியல் போன்றவற்றை ஊக்குவிக்கும் நிகழ்ச்சிகள், நிதி சார்ந்த கல்வி அறிவினை போதித்தல் போன்ற நிகழ்வுகளை இந்நூலகத்தில் செயல்படுத்தி வருகிறார். இதுமட்டுமின்றி கடந்த வருடம் மறுசுழற்சி செய்யப்பட்ட நோட்டுப் புத்தகங்களை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கியதும் ஸ்ரீராம் தொடங்கிய சிறப்பான திட்டங்களில் ஒன்று. அது குறித்து ஸ்ரீராம் கூறுகையில்...

‘‘மாணவர்கள் பயன்படுத்திய நோட்டுகளில் முழுதாக பயன்படுத்தப்படாத சில வெற்றுத் தாள்கள் அப்படியே இருக்கும். பலரும் இது போன்று நோட்டுகளை முழுதாக பயன்படுத்தாமல் அதை அப்படியே போட்டுவிட்டு புது நோட்டுகளை பயன்படுத்துவார்கள். ஒருபுறம் இது போன்று நோட்டுகள் வீணாக்கப்படுகிறது. மறுபுறம் எழுதவும், படிக்கவும் போதுமான அளவு நோட்டுப் புத்தகங்களை பெற முடியாத மாணவர்கள்.

இதனை கருத்தில்கொண்டு பழைய நோட்டுகளை சேகரித்து மீதமிருக்கும் தாள்களை அவற்றிலிருந்து பிரித்தெடுத்து, சேகரிக்கப்பட்ட வெற்றுத்தாள்களை இணைத்து மீண்டும் புது நோட்டுப்புத்தகங்களாக மறுசுழற்சி செய்கிறோம். நேர்த்தியாக புதுப்பிக்கப்பட்ட நோட்டுகளை தேவையுள்ள குழந்தைகளுக்கும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் கொடுக்கும் திட்டத்தினை கடந்த ஆண்டு துவங்கினோம். இந்த ஆண்டும் அதை செயல்படுத்த இருக்கிறோம்.

தற்போது பள்ளி இறுதித் தேர்வுகள் முடிந்துவிட்டது. புது வகுப்பு, புது நோட்டுப்புத்தகம் என்பதால், உங்க குழந்தைகளிடம் இருக்கும் நோட்டுகளில் பயன்படுத்தாமல் தாள்கள் மீதமிருக்கிறதா என்பதை பாருங்கள். அப்படி இருந்தால், அதனை சென்னை, நியூ பெருங்களத்தூர், ஜி.ஆர் காம்ப்ளெக்ஸில் அமைந்துள்ள எங்களின் நூலகத்திற்கு நேரில் வழங்கலாம் அல்லது அனுப்பியும் வைக்கலாம். நோட்டுகளை சேகரித்து நூலகத்திற்கு வழங்க விரும்பும் தன்னார்வலர்களும் எங்களை தொடர்பு கொள்ளலாம்.

நோட்டுகள் மட்டுமின்றி உங்களிடம் கூடுதலாக இருக்கும் பென்சில்கள், பேனாக்கள், அழிப்பான்கள், ஷார்ப்பனர்கள், பென்சில் பாக்ஸஸ், ஸ்கூல் பேக்ஸ் போன்றவற்றையும் தானமாக வழங்கலாம். மேலும் விவரங்களை தெரிந்துகொள்ள prakritharivagam எனும் இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் எங்களை தொடர்பு கொள்ளலாம். எங்களின் இத்திட்டத்திற்கு நிதி கிடைத்தால் மேலும் உதவியாக இருக்கும்” என்றார் ஸ்ரீராம்.

தொகுப்பு: ஆர்.ஆர்