Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பண்டிகை காலங்களிலும் ஆரோக்கியமாக சாப்பிடலாம்!

நன்றி குங்குமம் தோழி

விநாயகர் சதுர்த்தியை தொடர்ந்து பொங்கல் வரை பண்டிகை காலங்கள்தான். அதாவது, நவராத்திரி, ஆயுத பூஜை, தீபாவளி, கிறிஸ்துமஸ், நியூ இயர் என வருட இறுதி முதல் அடுத்த வருட ஆரம்ப காலம் வரை ஒரே கொண்டாட்டமாகத்தான் இருக்கும். அந்த கொண்டாட்டத்தின் அடையாளமே பல வகை உணவுகள். பண்டிகை காலங்களில் வழக்கமாக சாப்பிடுவதை விடவும் கொஞ்சம் ஸ்பெஷலாகவும், அதிகமாகவும் சாப்பிடுவது வழக்கம். இந்தக் காலங்களில் நாம் கடைப்பிடித்து வைத்திருந்த டயட்டிற்கு எல்லாம் குட்பை சொல்லிடுவோம்.

காரணம், பண்டிகை காலங்களில் வழக்கமான உணவுகளை தவிர்த்து ஸ்பெஷல் உணவுகளை சாப்பிட யாருக்குத்தான் விருப்பம் இருக்காது? குறிப்பாக குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் எல்லோருடன் சேர்ந்து சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். கொண்டாட்டங்களின் குஷியில் கிடைக்கின்ற எல்லா உணவுகளையும் சாப்பிட்டுக்கொண்டே இருந்தால் உடல் ஆரோக்கியத்தில் சில பிரச்னைகள் ஏற்படலாம் என்கிறார் ஆர்ட் ஆஃப் ஈட்டிங் அமைப்பின் நிறுவனர், ஊட்டச்சத்து நிபுணர் ஷைனி சுரேந்திரன்.

‘‘பண்டிகை காலத்தில்தான் எனக்கு உடல் எடை கூடிவிட்டது என்று என்னிடம் வருபவர்கள் புலம்புவார்கள். பிள்ளையார் சதுர்த்தியில் ஆரம்பித்து, நவராத்திரி, தீபாவளி என வரிசைக்

கட்டிக் கொண்டு வந்த பண்டிகையினால் நிறைய சாப்பிட்டு விடுவதால், உடல் எடையை எவ்வாறு பராமரிப்பது என்று தெரியவில்லை என்றுதான் என்னிடம் ஆலோசனைக்காக வருவார்கள். பண்டிகை காலங்களில் கொண்டாட் டம், சந்தோஷத்துடன் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தையும் கடைப்பிடிக்க வேண்டும்.

அதில் முதலில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது ஹைட்ரேஷன். அதாவது, உடலுக்கு நீரேற்றம் எப்போதும் இருந்து கொண்டே இருக்க வேண்டும். ஒரு நாளைக்கு 2-லிருந்து 3 லிட்டர் தண்ணீரை குடியுங்கள். க்ரீன் டீ, கஷாயம், மூலிகை நீர், விதைகள் ஊறவைத்த நீர், மோர், ரசம் போன்ற திரவங்களை நாள் முழுக்க எடுத்துக்கொண்டே இருந்தால் அதிகமான பசி தூண்டுதல் இருக்காது. அடிக்கடி எதையாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றாது. அடுத்து புரத உணவுகளுக்கு முக்கியத்துவம் ெகாடுங்கள்.

இது வயிறு நிரம்பிய உணர்வினை கொடுக்கும். அதனால் சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் ஏற்படாது. அதாவது, சுமார் 5 மணி நேரத்திற்கு பசி இருக்காது. முளைக்கட்டிய பயிர், கருப்பு கொண்டைக்கடலை, முட்டை, மீன், சிக்கன், மட்டன் இவற்றையெல்லாம் அளவோடு சாப்பிடும்போது வயிறு நிரம்பிய உணர்வு இருக்கும். சைவ உணவுகளில் பனீர், டோஃபு, பால், தயிர், புரோட்டீன் ஷேக்கினை அளவோடு சாப்பிடலாம். அல்லது 10 பாதாம், 5 வால்நட் சாப்பிடலாம். இவ்வாறு உணவு வகைகளை கலவையாக சாப்பிடும்போது அதிலுள்ள முழுமையான புரதச்சத்து உடலுக்கு கிடைக்கும். சரியான அளவு புரதம் உடலுக்கு சென்றாலே பசி தூண்டுதலும் அதிகம் இருக்காது.

பண்டிகை காலங்களில் நண்பர்களின் வீட்டிற்கு செல்லும்போது அவர்கள் கொடுக்கும் பலகாரங்களை, ‘வேண்டாம், நான் டயட்டில் இருக்கேன்’னு தவிர்க்க முடியாது. மாலை நேரத்தில் பண்டிகை கொண்டாட்டத்திற்கு செல்லப் போகிறீர்கள் என்றால், வழக்கமாக நீங்கள் சாப்பிடக்கூடிய உணவின் அளவிலிருந்து கொஞ்சம் குறைவாகவே சாப்பிடுங்கள். நான்கு தோசை சாப்பிடுவீர்கள் என்றால் 2 தோசை சாப்பிடுங்கள். கிச்சடி என்றால் காய்கறிகளை அதிகமாக சேர்த்து குறைவான அளவில் சாப்பிடுங்கள்.

மதியம் சாப்பிடும்போது அரிசி சாதம் சாப்பிடாமல் 2 கப் அளவிற்கு கூட்டு, காய்கறிகளை எடுத்துக்கொள்ளலாம். அல்லது ஒரு பவுல் நிறைய காய்கறி அல்லது பழ சாலட் சாப்பிடலாம். சுண்டல் மட்டும் கூட எடுத்துக் கொள்ளலாம். இது போன்ற உணவுகளை சாப்பிட்டுவிட்டு சென்றால் கொண்டாட்டத்திற்கு போகிற இடத்தில் அதிகமாக சாப்பிடாமல் மிதமாக சாப்பிடுவீர்கள். மேலும் வீடு திரும்பியதும் இரவு உணவு சாப்பிட வேண்டிய தேவை இருக்காது. அதையும் மீறி பசி இருந்தால், ஒரு கப் சூப் குடிக்கலாம் அல்லது பசும் பால், பாதாம் பால், சோயா பாலினை எடுத்துக் கொள்ளலாம். பண்டிகை நாட்களில் இப்படி உணவினை தேர்ந்தெடுத்து சாப்பிட்டால் டயட் உணவை மிஸ் செய்தது போல இருக்காது.

இதில் முக்கியமான விஷயம் உடற்பயிற்சிதான். அடுத்த சில நாட்களுக்கு பண்டிகை கொண்டாட்டங்களாக இருக்கப் போகிறதென்றால் உடற்பயிற்சி செய்வதை முன்கூட்டியே பிளான் செய்யுங்கள். போதுமான நேரம் இல்லையென்றால் 15 நிமிடம் ஸ்க்வாட்ஸ் செய்யலாம், வீட்டைச் சுற்றி நடக்கலாம், படிக்கட்டுகளில் ஏறி இறங்கலாம். ஏதோ ஒரு உடல் அசைவு இருக்கும்போது, காலில் ரத்த ஓட்டம் நன்றாக இருக்கும். உடற்பயிற்சி செய்ய சரியான நேரத்தை திட்டமிட்டு தவறிடாமல் செய்யுங்கள். இந்த வழிமுறைகளை பின்பற்றினாலே பண்டிகை காலங்களில் தேவையில்லாமல் அதிகமாக சாப்பிடுவதையும் உடல் எடை கூடுவதையும் முடிந்த அளவு தவிர்க்க முடியும்.

வாழ்க்கையில் பண்டிகைகள், கொண்டாட்டங்கள் தவிர்க்க முடியாது. அதனை நாம் எவ்வாறு மேனேஜ் செய்கிறோம் என்பதே முக்கியம். சரியான திட்டமிடல். டயட்டில் சரியான அளவு புரத உணவு. எல்லாவற்றையும் விட என்ன... எப்போது... எவ்வளவு... எத்தனை முறை சாப்பிட வேண்டும் என்ற இந்த நான்கு சிம்பிள் மந்திரங்களை புரிந்து கொண்டாலே போதும் ஆரோக்கியமாக வாழலாம்.

தொகுப்பு: ரம்யா ரங்கநாதன்