Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

யாத்வஷேம்

நன்றி குங்குமம் தோழி

ஹிட்லரின் நாஜி படையினர் யூதர்களை கொலை செய்ய அலைந்து கொண்டிருக்கும் நேரத்தில் அவர்களிடம் இருந்து தப்பித்து செல்கிறது ஒரு யூதக் குடும்பம். அம்மா, அக்கா, தம்பியை நாஜி படையினரிடம் இருந்து காப்பாற்ற முடியாத சூழலில் ஹயானா தன் அப்பாவுடன் கண்ணீர் நிறைந்த கண்களோடு இந்தியாவிற்கு தப்பித்து வருகிறாள். அந்த இரவில் தனது முப்பது வருட வாழ்வையும், போரினால் தொலைந்து போன தன் குடும்பம், தான் வாழ்ந்து வந்த மண்ணையும் தொலைத்தவளின் கதை தான் ‘யாத்வஷேம்.’ சாகித்திய அகாடமி விருது பெற்ற இந்த நாவலை கர்நாடக எழுத்தாளர் நேமிசந்த்ரா எழுதியுள்ளார். கன்னடத்தில் இருந்த யாத்வஷேம் நாவலை எதிர் வெளியீடு பதிப்பகத்தின் வாயிலாக தமிழுக்கு மொழிபெயர்த்து இருக்கிறார் கே.நல்லதம்பி.

ஹிட்லர் யூதர்கள் மீது நிகழ்த்திய படுகொலைகளை பதிவு செய்யும் இந்த புத்தகம் வன்முறைக்கு பயந்து தாங்கள் வாழ்ந்த நிலத்தைவிட்டு அகதிகளாக வேறு நாட்டிற்கு குடிபெயர்ந்த மக்களின் வாழ்க்கையை புனைவு கதாப்பாத்திரங்களின் வழியாக நேர்த்தியாக பதிவு செய்கிறது. அப்படி அகதியாக இந்தியாவில் குடிபெயர்ந்தவர்கள்தான் ஹயானாவும் அவரது அப்பாவும். உருவம் இல்லாத கடவுளை வணங்கும் பாரம்பரியத்தில் பிறந்த ஹயானா இந்தியாவில் உள்ள முப்பது முக்கோடி தெய்வங்களை பார்த்து ஆச்சரியப்படுகிறாள். சாதிய பாகுபாடுகள் குறித்து புரிந்துகொண்ட ஹயானா இவ்வளவு சாதிகள், மொழிகள், கலாச்சாரம் உள்ள நாட்டில் இவ்வளவு பேரை காப்பாற்ற ஒரு கடவுள் மட்டும் போதாது... அதனால்தான் இந்தியர்களுக்கு முப்பது முக்கோடி தெய்வங்கள் என்பதை உணர்ந்து கொள்கிறாள்.

போர்கள் என்றுமே சாமானிய மனிதர்களுக்காக நடப்பதில்லை. ஆனால் போர்கள் நடக்கும் போது அதிகம் பாதிக்கப்படுவது சாமானியர்கள்தான். போருக்குப் பின் பொருளாதார கணக்குகள் இருக்கிறது. விளைவு போர் இறுதியில் தோல்வியை தழுவும் நாட்டின் மக்கள் வறுமையினால் பாதிக்கப்படுகிறார்கள். மன்னராட்சி தொடங்கி ஜனநாயக அரசுகள் வரை இந்த நிலை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதில் பெரும்பாலும் மதத்தின் பெயரால் நிகழ்த்தப்படுகிறது. ஒரு மதத்தினை பறைசாற்ற மற்ற மதங்களை அழிக்கும் வேலைகளில் இறங்கியுள்ளனர்.

மதவெறி இனவெறியாக பரிணமித்து சக மனிதன் மீது வெறுப்பை கக்க வைத்திருக்கிறது. எல்லா மதங்களின் அடிப்படையும் அன்பு, கருணை, தயை, மன்னிப்பு தான். அனைத்து காலங்களிலும் போர்கள், தாக்குதல்கள் இருந்தன. போர் காலங்களில் கைதாகும் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகுகிறார்கள். ஒரு போர் பல கைம்பெண்களையும், அனாதை குழந்தைகளையும் உருவாக்குகிறது. போரினால் மற்ற நாட்டில் அகதியாக வாழும் மக்களின் அகமனதை வெளிக்கொணர்கிறது இந்த நாவல்.

ஒரு போர் மனித உயிரை, தாங்கள் வாழ்ந்து வந்த நாட்டினை பறிப்பது மட்டுமல்லாமல், ஒரு சந்ததியின் வாழ்க்கையையே கேள்விக்குறியாக மாற்றுகிறது. இது என்றுமே நிரந்தர தீர்வை கொடுத்ததில்லை. ஹிட்லர் 32,000 யூதர்களை உயிரோடு எரித்தார் என்று கூறப்படுகிறது. தனி மனிதன் ஒருவனால் மட்டுமே இது போன்ற நரபலியினை நிகழ்த்த முடியுமா? ஒவ்வொரு படுகொலைக்குப் பின் பலரின் உதவிகள் மறைந்திருக்கிறது. இனவெறி, மதவெறி காரணமாக இன்றும் பல ஹிட்லர்கள் உருவாகிக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை குறிக்கிறது இந்த நாவல்.

மதங்கள் போதிப்பது வன்முறையையா என மத நூல்களிலிருந்து விளக்கங்களை விவாதித்துள்ளது இப்புத்தகம். சிலுவையில் இயேசுவை அறைந்த போது, ‘இவர்களை மன்னித்து ஆசீர்வதியுங்கள் பிதாவே’ என குறிப்பிட்ட பைபிளும், ‘பெரும் தயாபரனும், கருணை படைத்தவனும் ஆன அல்லாவின் பெயரால்’ என்ற குரானின் முதல் வாக்கியம் கருணையோடு உருவான கடவுள் கொல்ல சொல்வானா? என சொல்லி அறத்தை நிலை நாட்ட வேண்டும் என்ற கருத்தினை வலியுறுத்துகிறது இந்த புத்தகம்.

பிணக்குவியலின் மீது மரணத்தை கொண்டாடி சாம்ராஜ்ஜியத்தை கட்ட முடியுமா? என்று காத்திரமான கேள்விக்கு யாத்வஷேம் சொல்வது ‘உங்கள் நாட்டை காதலியுங்கள், தைரியமாக இருங்கள், உண்மையை எதிர்கொள்ளுங்கள், மக்கள் கொலையை வெறுங்கள் என்பதுதான்.

தொகுப்பு: மா.வினோத்குமார்