நன்றி குங்குமம் தோழி
‘‘தமிழகத் திருக்கோயில்களில் அற்புதமான சிற்பங்களின் உருவ அமைப்புகள் யோகாசனங்களின் ஒரு வடிவமாக அமைந்திருக்கிறது. சிற்பங்கள் மற்றும் பழங்கால ஓவியங்கள் மனித உளவியலுடன் மிகுந்த தொடர்பு கொண்டிருக்கிறது. தெய்வ சிற்பங்களும், அதன் குறியீடுகளும், வெளிப்படுத்தும் தன்மையும் மனித மனதின் எதிர்மறை அம்சங்களை அழிக்கும் வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளன என்பது என்னுடைய நம்பிக்கை’’ என்கிறார் சென்னையை சேர்ந்த மருத்துவர் நிஷாந்தி.
இவர் நேச்சுரோபதி மற்றும் யோகா உதவி மருத்துவ அலுவலராக அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். நிஷாந்தியின் யோகாசனங்கள் மட்டுமில்லாது அவரது சிற்பங்கள், களி மண், மினியேச்சர் பொம்மைகள், எம்போசிங், தஞ்சாவூர் ஓவியங்கள் என அனைத்து கலையும் இவரின் கைவண்ணத்தில் பார்ப்பவரை வசீகரிக்கிறது. யோகா முதல் சிற்ப சாஸ்திரம் வரை அனைத்து சம்பந்தமான விஷயங்கள் குறித்து மனம் திறந்தார் நிஷாந்தி.
“நான் சென்னை அரசு யோகா மற்றும் நேச்சுரோபதி மருத்துவக் கல்லூரியில் யோகா நேச்சுரோபதி பட்டம் பெற்றேன். என் குழந்தைப் பருவத்தில் இருந்து கலை சார்ந்த விஷயங்கள் என்னை ஒரு சுயமாக கற்றுக் கொள்ளும் ஓவியராக உருவாக்கியது. குறிப்பாக சிறிய வயதில் அப்பா பக்தி சம்பந்தமான இதழ்களை படிக்க வாங்கி வருவாங்க. அதில் கோயில்களின் படங்கள், கடவுள்களின் திருவுருவங்கள் போன்ற ஓவியங்கள் இருக்கும். அவை அனைத்தும், பென்சிலால் வரையப்பட்டு இருக்கும். அதை நான் பார்த்து மறுபடியும் வரைவேன். அப்படி வரைவது எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆரம்பத்தில் பொழுதுபோக்காக இருந்தாலும், ஒரு ஓவியத்தை வரைந்த பிறகு என் மனதில் ஒரு ஆத்ம திருப்தி ஏற்படும்.
தஞ்சாவூர் ஓவியம், பட்டச்சித்திரம், மினியேச்சர் ஓவியங்கள், மண் சிற்ப வேலைகள், ஃபாயில் எம்போசிங் போன்ற பல்வேறு இந்திய கலை வடிவங்களை நான் வரைந்து முயற்சி செய்துள்ளேன். இதில் எனக்கு கோயில் சிற்பக்கலை பயிற்சியும், கோயில் சிற்பங்கள் வரைவதில் மிகவும் பிடித்தமான விஷயம். 2020ல் சிற்ப சாஸ்திரம் படிக்க தொடங்கினேன். அடுத்த வருடத்தில் இருந்து கோயில் சிற்ப வரைபடங்கள் வரைவதில் முழுமையாக ஈடுபட்டேன். இதில் சக்கரங்கள், கோணவியல் வடிவங்கள், கோயில் சிற்பங்கள் போன்றவை அடங்கும். இது போன்ற கோயில் சிற்பங்களின் ஐகானோகிராஃபியை புரிந்து கொண்டு அதை படைப்பாக உருவாக்கும் போது உள்ளார்ந்த திருப்தியை அளிப்பதோடு மனதையும் அமைதிப்
படுத்தும்.
யோகா, பொதுவாகவே பெண்களின் உடலில் பல மாற்றங்களை ஏற்படுத்தும். குழந்தை மற்றும் பாலுணர்ச்சி பருவம், பிரசவத்திற்குப் பிறகு, வயது முதிர்வுக் காலம் (மாதவிடாய் நிறைவுக்குப்பிறகு) ஆகிய ஒவ்வொரு கட்டத்திலும் உடல், மனம், உளவியல் நிலைகளில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகின்றன. பெண்கள் யோகா பயிற்சியினை மேற்கொள்ளும் போது, சுவாசம், உடல் நிலை மற்றும் ஆசனங்களில் கவனம் செலுத்துப்பட வேண்டும்.
ஒருவர் சுவாசத்தை தொடர்ந்து பயிற்சி செய்து, உடல் நிலையை ஒழுங்குபடுத்திக் கொண்டால், மனஅமைதி ஏற்படும். இது, உடலில் பெரிய அளவில் மாற்றத்தினை ஏற்படுத்தும். குறிப்பாக அனைத்து உளவியல் சிக்கல்கள் மற்றும் மகப்பேறு தொடர்பான பிரச்னைகளுக்கு நல்ல பயன் கிடைக்கும். மன
அழுத்தம் குறைவதால், ஹார்மோன் சமநிலை ஏற்படும். கர்ப்ப காலத்திலும் உடல்-மனம் ஆரோக்கியமாக இருக்கும்’’ என்றவர், இந்த யோகக் கலை சிறப்புக் குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் மன அழுத்தத்தை போக்க உதவுவதாக கூறினார்.
‘‘நம்முடைய இடது மற்றும் வலது மூளை இரண்டு முக்கிய செயல்பாடுகளை கொண்டுள்ளன. ஒன்று லாஜிக்கலாகவும் மற்றொன்று படைப்பாற்றல் குறித்த சிந்தனை செய்ய உதவும். இந்த இரண்டு திறன்களை வளர்த்துக் கொள்ளவும், முழுமையான அறிவாற்றல் பெறுவதற்கு முக்கியமாக அமைகிறது. நான் சிற்பக்கலை பயின்ற பயிற்சி பள்ளியில்தான் சிற்ப சாஸ்திரத்தின் அடிப்படையினைப் பற்றி தெரிந்து கொண்டேன்.
இது மிகவும் விரிவான துறை. அதனை நான் கற்றுக் கொள்வது மட்டுமில்லாமல் முன்னேற்றமும் அடைந்து வருகிறேன். சிற்ப சாஸ்திரம் வரை படங்கள் மட்டுமில்லை... ஒரு சிற்பம் எந்த அளவில் இருக்க வேண்டும், அதன் விகிதாச்சாரங்கள், கணக்குகள் உள்ளன. அதைக் கொண்டுதான் சிற்பங்களை வடிவமைக்க வேண்டும். இது கவனத்தை அதிகரிக்க செய்யும். பெரியவர்களுக்கு மனநிலையை மேம்படுத்த உதவுகிறது. உள்ளத்தில் நேர்மறை உணர்வுகளை உருவாக்குகிறது.
பொதுவாக ஆர்ட் தெரபி சிறப்புக் குழந்தைகளுக்கான மருத்துவ முறையாக ஏற்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக பாரம்பரியக் கலையில் அதிகமான நுணுக்கங்கள் இருப்பதால், குழந்தைகளின் கவனத்தை அதிகரித்து அவர்களின் பதட்டத்தினை குறைக்க உதவுகிறது. சிற்பங்கள் மட்டுமில்லாமல் கோயில்கள், சமூகக் கட்டிடங்கள், சிலைகள், ஓவியங்கள், வடிவமைப்புகள் போன்ற கலைகளை உருவாக்குவதற்கான விதிமுறைகள், அளவுகள், விகிதாச்சாரங்கள் ஆகியவற்றை விரிவாக விளக்கும் ஒரு பண்டைய அறிவியல்தான் சிற்ப சாஸ்திரம்.இது வெறும் கலைக்கான வழிகாட்டுதல் மட்டுமில்லை. ஆன்மிகம், கணிதம், கட்டிடக்கலை, உளவியல் ஆகியவற்றையும் ஒருங்கிணைக்கும் துறை.
சிற்ப சாஸ்திரம் ஒரு சாதாரண மனிதனுக்கும் தெய்வீக ஆற்றலை உணர உதவுகிறது. ஒவ்வொரு தெய்வத்தின் உருவமும், கோயிலின் அமைப்பும், மனித உடலின் சக்கரங்கள் மற்றும் ஆற்றல் மையங்களோடு தொடர்பு படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளன. கலை மற்றும் ஆன்மிகத்தை இணைக்கும் பாலம். மனதிற்கு சமநிலையும் சிந்தனைத் தெளிவையும் அளிக்கக்கூடிய பண்டைய இந்திய மரபுக் கல்வி, வாழ்வியல் முறை எனக் கூறலாம்.
யோகா நம்மை உள்ளார்ந்த அமைதிக்குக் கொண்டு செல்கிறதோ, அதேபோல், சிற்பக்கலையும், ஓவியக்கலையும் மனதிற்கு கவனம், தியானம், சுய ஆராய்ச்சி ஆகியவற்றை வளர்க்கின்றன. ஒவ்வொரு தெய்வத்தின் சிற்பமும், அவர்களின் சின்னங்களை ஆழமாகப் படிக்கும் போது, நம்முடைய உள்மனத்தில் மறைந்து இருக்கும் சக்திகளை வெளிப்படுத்தும். நம்மை பாதிக்கும் எதிர்மறை மனப்பாங்குகளை எவ்வாறு கடக்க வேண்டும் என்று வழிகாட்டுகிறது.
பெண்கள் இயல்பாகவே அதிகம் படைப்பாற்றல் திறன் கொண்டவர்கள், கோலம் போடுவதில் தொடங்கி சமையல், உடைகள் மற்றும் ஆபரணங்கள் வடிவமைத்தல் அனைத்தும் அவரவர்களின் படைப்பாற்றலின் வெளிப்பாடுகள். சிற்ப சாஸ்திரமும், விரும்பிய தெய்வங்களை வரைவது, கோயில் வடிவமைப்புகள், தலைமுடி, உடை ஆகியவற்றை அலங்கரிப்பது போன்றவற்றைக் கொண்டுள்ளது. இது அவரவர்களின் சிந்தனையை ஊக்குவிப்பதோடு, தன்னிறைவையும் தருகிறது. இதற்கு தொடர் பயிற்சி அவசியம்’’ என்றார் நிஷாந்தி.
தொகுப்பு: மதுரை ஆர்.கணேசன்