Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

திருமண மலர்கள் தருவாயா..!

நன்றி குங்குமம் தோழி

வாழ்வில் நாம் அனுபவித்து கடந்து செல்லும் இனிமையான தருணங்களை நினைவுகூர்ந்து அசை போடும் போதே நிகழ்காலத்தில் நம் மனதில் ஒரு சந்தோஷம் பிறக்கும். நினைவுப் பொருட்களுக்கும் இதில் பங்குண்டு. குறிப்பாக திருமண நிகழ்வின் நினைவாக புகைப்படங்கள், பரிசுப் பொருட்கள், திருமண உடைகள் போன்றவற்றை பொக்கிஷமாக வைத்திருப்போம். திருமணத்தில் அணிந்திருந்த மலர் மாலைகளை பத்திரப்படுத்தி நினைவுப் பொருட்களாக மாற்றும் பரவலான எண்ணப்போக்கு தற்போது பலரிடமும் பரவி வருகிறது. இதன் புது வரவாக திருமண மலர்களை இயற்கையான முறையில் ஈகோ பிரின்ட் செய்து, அழகிய நினைவுகளை ஆடைகளாக வடிவமைத்து வழங்குகிறது ஹவுஸ் ஆஃப் முரா (House of Murah). முதன் முதலில் தன் திருமண மலர்களை கொண்டு தானே அழகிய ஆடைகளை வடிவமைத்த புவனா, தன் கணவர் ஊக்கமளிக்கவே இதனை ஒரு ப்ராண்ட் ஆக உருவாக்கியுள்ளார். சென்னையை சேர்ந்த புவனா, தன் அழகிய தருணங்களை பகிர்ந்த போது...

“எனக்கு ஃபேஷன் டிசைனிங் படிக்கவேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. ஆனால், என் பெற்றோரின் விருப்பத்தினால் எஞ்சினியரிங் படித்தேன். ஐடி துறையில் வேலை செய்த போதும், என் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் வேலையை செய்வதிலேயே ஆர்வமாக இருந்தேன். 2017ல் ஃபேஷன் டிசைனிங் படிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. படித்து முடித்ததும் சென்னையில் நிறைய பொட்டிக்கில் வேலை பார்த்தேன். 2023ல் எனக்கு திருமணம் நடந்தது.

எங்களுடையது காதல் திருமணம். நாங்க காதலித்த காலத்தில் எங்களுக்குள் பரிமாறிக் கொள்ளப்படும் சின்னச் சின்ன பொருட்களை பத்திரப்படுத்தி வைக்க எனக்குப் பிடிக்கும். ஒரு கடிதம், கார்டு, ஒரு சிறிய பூவாக இருந்தாலும் அழகிய நினைவாக அதை என்னுடன் வைத்திருப்பேன். அப்படித்தான் எங்களது திருமண மலர்களையும் பத்திரப்படுத்தி அதனை நினைவுப் பொருளாக மாற்ற விரும்பினேன். ஆனால், எந்த முறையில் பத்திரப்படுத்துவது என்று தெரியவில்லை.

நாங்க காதலித்த ேபாது அவர் எனக்கு கொடுத்த மலரினை ரெசின் ஆர்ட் மூலம் பத்திரப்படுத்தி வைத்திருந்தேன். ஆரம்பத்தில் அழகாக இருந்தது. ஆனால், கொஞ்ச காலத்தில் பூக்களின் நிறம் மாறி வெளுத்துவிட்டது. அதனால் மீண்டும் அதே முறையில் பத்திரப்படுத்த நான் விரும்பவில்லை. வித்தியாசமான சில விஷயங்களை யோசித்தபோது, ஈகோ பிரின்டிங் நினைவுக்கு வந்தது. அது நான் உடுத்திக்கொள்ளும் ஆடையாக இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்குமென்று தோன்றியது. முதலில் என் திருமண மாலையில் இருந்த பூக்களை வைத்து இயற்கையான முறையில் பூக்களின் நிறமிகளை துணியில் அச்சிட்டு அதில் ஒரு சேலையும் என் கணவருக்கு ஒரு சட்டையும் வடிவமைத்தேன்.

என்னிடம் நிறைய பூக்கள் இருந்ததால், மீண்டும் ஒரு சேலை மற்றும் என் கணவருக்கு ஒரு குர்தா போன்றவற்றை வடிவமைத்தேன். மீதமிருந்த மலர்களை கொண்டு 1 மீட்டர் அளவில் சில துண்டு துணிகளை ஈகோ பிரின்ட் செய்து வைத்திருக்கிறேன். அதில் என் குழந்தைக்கு ஆடை தயாரிக்கும் யோசனையுள்ளது. இயற்கையான முறையில் நானே தயார் செய்த இந்த நினைவுப் பொருட்களை என் கணவரிடம் காண்பித்த போது மனம் நெகிழ்ந்து சந்தோஷப்பட்டார். ‘இது ரொம்ப ஸ்பெஷலா இருக்கு. நம் நினைவுகளை இப்படி பொக்கிஷமா மாற்றியது போல நீ மற்றவர்களுக்கும் இது போல செய்து தரலாமே, உன் படைப்பாற்றலை வெளிப்படுத்தும்படி இதையே உன் பிசினஸாகவும் எடுத்து செய்தால் என்னவென்று என்னை ஊக்குவித்தார். அப்படித்தான் ஹவுஸ் ஆஃப் முரா உருவானது.

என் திருமண மலர்களை கொண்டு எங்களுக்கான நினைவுப் பொருட்களாக சேலையும் சட்டையும் தயாரித்த போது மன நிறைவாக இருந்தது. ஆனால், அதை பிசினஸாக செய்யத் தொடங்குவதில் சற்று தயக்கம் இருந்தது. இந்த யோசனையை என் மாமியார், மாமனாரிடம் சொன்னபோது அவர்களும் என்னை ஆதரித்தனர். என்னுடைய ஒவ்வொரு விஷயத்திலும் உதவியாக இருந்தார்கள். என் மாமனார் பெயர் முரளி, ஆங்கிலத்தில் இருக்கும் அவர் பெயரின் முதல் மூன்று எழுத்தையும், அமுதா என்கிற என் மாமியார் பெயரின் முதல் ஆங்கில எழுத்தையும் இணைத்துதான் ‘முரா’ என்ற ப்ராண்ட் பெயரில் என் பிசினஸை தொடங்கினேன். 2024ல் பிப்ரவரி மாதம் ஆன்லைனில் தொடங்கி இன்று வரை சிறப்பாக

சென்று கொண்டிருக்கிறது.

எங்களைப் போலவே நிறைய தம்பதிகள் அவர்களின் திருமண மலர்களை பத்திரப்படுத்தி வைக்க ஆர்வமாக இருந்தனர். சென்னையில் இருப்பவர்கள் நேரடியாக மலர்களை அனுப்பி வைப்பார்கள். வெளிநாடுகளில் உள்ளவர்களும் தற்போது அனுப்பி வைக்கின்றனர். திருமண மலர்கள் மட்டுமல்ல, பிறந்த நாளுக்கு வந்த பொக்கேவில் உள்ள பூக்கள், காதலர் தினத்தில் கிடைத்த பூக்கள், சீமந்த விழா மலர் மாலைகள் என அனைத்தையும் ஆடைகளாக மாற்ற தம்பதியினர் விரும்புகின்றனர். இனிமையான நினைவுகளை கொண்ட, ஸ்பெஷலாக அவர்கள் எடுத்து வைத்திருக்கும் எந்தப் பூக்களாக இருந்தாலும் எங்களுக்கு அனுப்புவார்கள்.

இயற்கையான முறையில் ஈகோ பிரின்ட் செய்து அழகிய ஆடைகளாக வடிவமைத்து தருகிறோம்” என்றவர், தயாரிக்கும் விதம் குறித்து பகிர்ந்தார்.“வாடிக்கையாளர்களிடம் பூக்களை பெற்ற பிறகு, முதலில் அவற்றை பாதுகாப்பாக பிரித்தெடுப்போம். அதில் சில பூக்கள் அழுகி இருக்கும். அவற்றை நீக்கி, நல்ல நிலையில் உள்ள பூக்களை மட்டும் எடுத்து வைத்துக்கொள்வோம். வாடிக்கையாளர்களுக்கு என்ன டிசைன்களில் வேண்டும் என்ற விருப்பத் தேவைகளை கேட்டறிந்த பின்னர் அடுத்த செய்முறைகளை தொடங்குவோம்.

பூக்கள் எந்த அளவிற்கு வண்ணமயமாகவும் ஈரத்தன்மையுடனும் மிகவும் காய்ந்திடாமல் இருக்கிறதோ, அதற்கேற்றார் போல் பூக்களின் நிறங்கள் துணிகளில் அச்சாக படியும். இயற்கையான முறையில் துணிகளில் பூக்களின் நிறங்களை அச்சிடுவதற்கு நிறைய படிநிலைகளும் செயல்முறைகளும் உள்ளன. இந்த செயல்முறைகளில் தூய்மையான பருத்தி, தூய்மையான பட்டு போன்ற 100% இயற்கையான இழைகளை கொண்ட துணிகளையே பயன்படுத்துகிறோம்.

முதலில் துணியினை சுத்தம் செய்து, பூக்களின் இயற்கை நிறமிகள் துணியில் இறங்கி நன்கு அச்சாக வேண்டும் என்பதற்காக மோர்டான்ட் எனும் பொருளை துணியில் சாயமிட வேண்டும். பின்னர் சேகரித்து எடுத்து வைத்த பூக்களை துணியில் முழுவதுமாக பரவலாக வைத்து, பின்னர் அதனை இறுக்கமாக சுருள் வடிவில் சுற்றி எடுத்து ஆவியில் வேக வைக்க வேண்டும். இந்த நிலையில் பூக்களில் உள்ள இயற்கை நிறமிகள் துணியில் அச்சுகளாக படியும். பின்னர் அடுத்தடுத்த சில நிலைகளுக்கு உட்படுத்தி ஆடைகளில் வேறு நிறங்களும் வாடிக்கையாளரின் விருப்பத்தை பொறுத்து சாயமிடப்படும். புடவையில் வேறு ஏதேனும் டிசைன் செய்ய வேண்டுமெனில் அதை செய்து முடித்தபின்னர் இனிமையான நினைவுகளை சுமந்து கொண்டு அழகான புடவை தயாராகியிருக்கும். ஆண்களுக்கு சட்டை, குர்தா போன்றவையும் இதில் வடிவமைக்கலாம்” என்றவர் மேலும் தொடர்ந்தார்.

“முழுவதும் இயற்கையான முறையில் இது தயார் செய்யப்பட்டிருப்பதால், இந்த ஆடைகளை அலசும் போது அதற்கென கொடுக்கப்பட்டிருக்கும் வழிமுறைகளை கடைபிடித்தால் ஆடைகள் நீண்ட காலத்திற்கு புதுமையான தோற்றத்துடன் இருக்கும். இவை ஸ்பெஷலான ஆடைகள் என்பதால், வருடத்திற்கு ஒருமுறையோ அல்லது எப்போதாவதுதான் எடுத்து அணிவார்கள். எனவே அடிக்கடி சுத்தம் செய்யும் வேலையில்லை என்பதால் ஆடைகளை நன்றாக பராமரிக்கலாம். விரைவில் நிறம் மங்காது. நிறைய தம்பதிகள் இது போன்ற அழகான நினைவுப் பொருட்களை உருவாக்கிக் கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். குறிப்பாக நிறைய ஆண்கள் தங்கள் காதல் மனைவிகளை சர்ப்ரைஸ் செய்ய நினைவுப் பரிசாக கொடுக்கின்றனர்.

நானும் என் கணவரும் நிறைய பரிசுப் பொருட்களை பரிமாறிக் கொண்டதில்லை. ஆனால், கடிதம் எழுதுவது, உணர்வுப்பூர்வமான வரிகளை எழுதி எளிமையாக அலங்கரிக்கப்பட்ட வாழ்த்து அட்டைகள், பூக்கள் போன்றவற்றை அதிகம் பகிர்ந்து கொள்வோம். நினைவுகளை பத்திரப்படுத்த எங்கள் இருவருக்குமே மிகவும் பிடிக்கும். மேலும், பலரும் இதை விரும்புகின்றனர். இது போன்ற நினைவுப்பொருட்களை நீண்ட காலத்திற்கு நாம் பத்திரப்படுத்தி வைக்கும் போது அழகிய நினைவுகளும் நம்முடன் பயணிக்கின்றன” என்றார்.

தொகுப்பு: ரம்யா ரங்கநாதன்