நன்றி குங்குமம் தோழி
பண்டிகை காலம் வந்தாச்சு... தீபாவளி நெருங்கிடுச்சு... இனி துணி மற்றும் ஸ்வீட் கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரிக்க ஆரம்பித்துவிடும். முக்கியமாக வார இறுதி நாட்களில் குடும்பம் குடும்பமா ஷாப்பிங் செய்ய கிளம்பிடுவாங்க. கடைத்தெருக்களில் அலைமோதும் கூட்டம், நெருக்கடிகள் சங்கடம் தந்தாலும் ஷாப்பிங் பிரியர்களுக்கு ஹேப்பியாதான் இருக்கும். ஆடைகள் பக்கம் ஒரு குரூப் திரும்பினாலும் தீபாவளிக்கு என்ன பலகாரம் செஞ்சு நண்பர்கள், சொந்தக்காரங்களுக்கு தரலாம்ணு தாய்மார்கள் யோசித்துக் கொண்டிருப்பார்கள். கடைகளில் பலகாரம் வாங்கித் தருவதை விட பண்டிகை நாட்களில் வீட்டில் குடும்பமா உட்கார்ந்து பலகாரம் செய்து மத்தவங்களுக்கு தரும் போது கிடைக்கும் மகிழ்ச்சி அளவில்லாதது.
அவ்வாறு விரும்பும் தாய்மார்களின் வேலையை சுலபமாக்குகிறார் ‘அன்னம் ஷாப் மற்றும் ஃபுட்ஸ்’ உரிமையாளர் அன்னம் செந்தில்குமார். தீபாவளி பலகாரங்களில் குறிப்பா செட்டிநாடு பலகாரங்களின் மிக்ஸ்களை உயர்ந்த தரத்தில் தயாரித்தும் அதனை செய்ய பயன்படுத்தும் பாத்திரங்களையும் விற்பனை செய்து வருகிறார். தீபாவளி விற்பனையில் பிசியாக இருந்தவரிடம் பேசியதிலிருந்து...
‘‘நான் சென்னையில்தான் பிறந்து, வளர்ந்தேன். பெற்றோர் செட்டிநாடு நெற்குப்பை பக்கம். கணிதத்தில் இளங்கலை படிப்பு முடித்தேன். ஆனால், படிப்பிற்கும் நான் செய்யும் பிசினஸிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கணவர் ஆயுர்வேத மருந்துகள் தயாரிப்பவர். அவரின் ஊர் மதுரை என்பதால் அங்குதான் இருந்தோம். அவர் அங்குள்ள கிளப்களில் உறுப்பினராக இருந்தார். அப்போது கிளப் சார்பில் உணவுத் திருவிழாக்கள் நடைபெறும்.
மேலும், உணவு போட்டிகளுக்கு நடுவராக கலந்து கொண்டிருக்கிறேன். மதுரையில் என் குடும்பத்தார் மற்றும் நண்பர்கள் அடிக்கடி ஒன்றுகூடுவோம். அப்போது வீட்டில் இருந்து ஒவ்வொருவரும் ஏதாவது ஒன்று சமைத்துக் கொண்டு வருவோம். எனக்கு நல்ல சுவையான உணவினை கொண்டு செல்ல வேண்டும். அதனால் பார்த்துப் பார்த்து சமைப்பேன். அப்படித்தான் சமையல் மீதான ஆர்வம் எனக்கு ஏற்பட்டது’’ என்று தன் நினைவுகளை பகிர ஆரம்பித்தார்.
‘‘திருமணமாகி ஒன்பது வருடங்கள் கழித்து மகன் பிறந்தான். கணவருடைய வியாபாரம் உயரவும் மகனுக்காகவும் 2004ல் சென்னை வந்தோம். இந்த இடைப்பட்ட காலத்தில் நானும் நன்றாக சமையல் பழகினேன். அதனால் என் கணவர் 2006ல் வலைப்பக்கம் ஒன்றை துவங்க சொன்னார். அவர் கொடுத்த ஊக்கம் மற்றும் சப்போர்ட்டில் ‘செட்டிநாடு ரெசிப்பிஸ்’ என்ற பெயரில் வலைப்பக்கம் ஒன்றை ஆரம்பித்து அதில் என்னுடைய ரெசிப்பிக்களை பதிவு செய்தேன். சமூக வலைத்தளங்கள் இப்போது இருப்பது போல் அன்று அவ்வளவு ஃபேமஸ் கிடையாது. இணையதள வேகமும் குறைவு.
அப்படி இருந்தும் நான் என் பக்கத்தில் பலவித சமையல் குறிப்புகளை பதிவு செய்து வந்தேன். சாதாரண சமையல் மட்டுமில்லாமல் புதுப்புது சமையல் குறிப்புகளை போடுவேன். கணவர் கேமரா வாங்கி தந்தவுடன் உணவினை போட்டோவாக அப்லோட் செய்தேன்’’ என்றவர், ‘ஆரோக்கிய சமையல்’, ‘ஸ்டார் ஹோட்டல் சமையல்’ என சமையல் குறிப்புகள் அடங்கிய ஆறு புத்தகங்களை எழுதிஉள்ளார்.
‘‘பிரபல பத்திரிகைகள் என்னுடைய வலைப்பக்கம் மற்றும் புத்தகங்களைப் பார்த்து விட்டு தங்களின் பத்திரிகைகளுக்கு சமையல் குறிப்புகள் தரச் சொல்லி கேட்டார்கள். என்னுடைய மீடியா என்ட்ரி அன்று முதல் தொடங்கியது. ஐந்து வருடங்களுக்கு தொடர்ந்து அனைத்து பிரபல பத்திரிகையிலும் என் சமையல் குறிப்புகள் இடம் பெற்று வந்தன. 2012ல் ‘அன்னம் ரெசிப்பிஸ்’ பெயரில் யூடியூப் சேனலை ஆரம்பித்தேன். நான் செய்த அனைத்து ரெசிப்பிக்களையும் வீடியோவாக பதிவேற்றினேன்.
இதனைத் தொடர்ந்து 2011ல் தமிழ்நாடு வேளாண் பயிற்சி நிறுவனத்தில் மசாலாக்கள், சாலட்களுக்கான பயிற்சி தர சொன்னார்கள். இரண்டு வருடம் பயிற்சி அளித்தேன். தொலைக்காட்சி
ஒன்றில் ‘கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு’ என்ற தலைப்பில் சமையல் நிகழ்ச்சிகளையும் வழங்கியுள்ளேன். பெண்களுக்கு குக்கரி பயிற்சியும் அளித்திருக்கிறேன். அரசு தொலைக்காட்சியில் இன்றும் என் சமையல் நிகழ்ச்சி இடம் பெற்று வருகிறது. அதைப் பார்க்கும் வாடிக்கையாளர்கள் என்னுடைய சமையல் வீடியோக்களில் பயன்படுத்தப்படும் மசாலாக்கள், பொடிகள், கஞ்சி மாவு வகைகள், சத்தான மிக்ஸ்கள், தீபாவளி பலகார வகைகள் ஆகியவற்றுக்கான மிக்ஸ்களை செய்து தரச் சொல்லி கேட்டனர்.
நான் உணவு பதனிடுதலில் டிப்ளமோ படிப்பும் படித்துள்ளதால் 2020ல் என் மகனுடைய ஆலோசனை பேரில் ஆன்லைன் மூலமாக பொடி மற்றும் மிக்ஸ்களை விற்பனை செய்து வருகிறேன். மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து வீடியோக்களில் நான் பயன்படுத்தும் பாத்திரங்கள் தரமாக உள்ளதை பார்த்த பலர் அதனையும் விலைக்கு வாங்கித் தர கேட்டார்கள். குறிப்பாக என்னுடைய இட்லி மாவு வைக்கும் பாத்திரம் மற்றும் இட்லி பாத்திரம்தான் பலரும் விரும்பி கேட்டனர். நான் பயன்படுத்துவது பெரும்பாலும் செட்டிநாடு ரக அடிப்பகுதி கனமான பாத்திரங்கள். செட்டிநாடு சமையல் பாத்திரங்கள் எல்லாமே மடிப்பாக்கத்தில் உள்ள எங்கள் கடையில் நேரடியாகவும் ஆன்லைன் மூலமாகவும் பெற்றுக் கொள்ளலாம்’’ என்றவர் பலகார மிக்ஸ்கள் குறித்து விவரித்தார்.
‘‘முள்ளு முறுக்கு, தட்டை, ரவா லட்டு, வெள்ளை தேன் குழல் முறுக்கு, ரிப்பன் பக்கோடா ஆகியவற்றின் மிக்ஸ்கள் எங்களிடம் கிடைக்கும். இந்த மிக்ஸ்களைக் கொண்டு எளிதில் பலகாரங்களை தயாரித்து விடலாம். தேவையான தண்ணீர், உப்பு சேர்த்து அச்சில் வார்த்தால் பலகாரங்களை விரைவாக செய்து விடலாம். அனைத்தும் தரமாக கொடுப்பதால், ஒரு தடவை வாங்கியவர்கள் தொடர்ந்து எங்களை நாடி வருகிறார்கள். எங்களின் இட்லிப்பொடி குழந்தைகள் மத்தியில் ஃபேமஸ். மிக்ஸ்கள் அனைத்தும் என் மேற்பார்வையில்தான் தயாரிக்கிறேன். உடன் நான்கு பெண்கள் பணியாற்றுகிறார்கள். கடையிலும் பெண்களைதான் வேலைக்கு நியமித்து இருக்கிறேன்.
பொழுதுபோக்காக உருவாக்கிய தொழில் இன்று என் அடையாளமாக மாறியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் என் குடும்பத்தினரை தான் சொல்ல வேண்டும். அவர்கள் கொடுத்து வரும் ஊக்கம்தான் இந்த வயதிலும் என்னை துடிப்புடன் செயல்படுத்த வைத்துள்ளது’’ என்றவரின் 20 வருட பத்திரிகை சேவையை பாராட்டி தமிழ்நாடு பத்திரிகை வெளியீட்டாளர் சங்கம் சார்பில் ‘பயனெழுத்து படைப்பாளி’ என்ற விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
தொகுப்பு: கலைச்செல்வி
படங்கள்: ஆ.வின்சென்ட் பால்