Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

என்ன விலை அழகே...

நன்றி குங்குமம் டாக்டர்

பிரகாசமான தோற்றப் பொலிவு பெற!

பொதுவாக வயது வித்தியாசமின்றி பெண்கள் அனைவருமே தங்களது தோற்றத்தை பிரகாசமாகவும், பொலிவுடனும் வைத்திருக்கவே விரும்புவர். அந்த வகையில், தோற்றத்தை பிரகாசிக்க செய்யக் கூடிய சில எளிய விஷயங்களை பற்றி தெரிந்து கொள்வோம்.

நீரேற்றம்

சருமத்தை மென்மையாகவும் சருமத்திற்கு பளபளப்பு சேர்க்கவும் உடலில் நீர்ச்சத்தை பராமரிப்பது மிக மிக அவசியமானது. அதற்கு, காலையில் எழுந்ததும் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சைச்சாறு கலந்து பருகுவது வளர்சிதை மாற்றத்தை தொடங்குவதற்கு வழிவகுக்கும். மேலும், உடலில் இருக்கும் நச்சுக்களை நீக்கும். செரிமானத்துக்கும் உதவும். உடல் இலகுவாகவும், ஆற்றலுடனும் இருப்பதை உணருவதோடு, சருமம் பளபளப்பாக இருப்பதையும் உணர முடியும்.

உணவுக் கட்டுப்பாடு

சரும பொலிவுக்கு மிக அவசியமானது ஆரோக்கியமான உணவுமுறை. எனவே, முடிந்த வரை காய்கறிகள், பழங்கள், முளைக்கட்டிய தானியங்கள் போன்றவற்றை அதிகளவில் உணவில் சேர்ப்பது நல்லது. இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் என்றால் உணவோ, உணவு பதார்த்தங்களோ, நொறுக்குத்தீனிகளோ, பழங்களோ எதுவாக இருந்தாலும் அதிகம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதற்கு சாப்பிடும்போது பெரிய கிண்ணங்களோ, தட்டுகளோ பயன்படுத்துவதற்கு பதிலாக சிறிய தட்டுகள், கிண்ணங்களை பயன் படுத்தலாம். அது இயல்பாகவே அதிக அளவில் சாப்பிடுவதை தவிர்க்க உதவும்.

ட்ரை ஃப்ரூட்ஸ்

தினசரி உணவில் சிறிதளவு ட்ரை ஃப்ரூட்ஸ் சேர்த்துக் கொள்வது அவசியமானது. அதில் ஆரோக்கியமான கொழுப்புகள், புரதம், ஆன்டி ஆக்சிடென்டுகள் உட்பட பல அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன. அவை ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்களிக்கின்றன. முக்கியமாக பாதாம், வால்நட் போன்ற பருப்புகளில் காணப்படும் கொழுப்புகள், வைட்டமின் ஈ ஆகியவை சரும நலனை மேம்படுத்தும். இளமையாகவும், துடிப்பாகவும் தோற்றமளிக்க செய்யும். வயதான தோற்றம் எட்டிப்பார்ப்பதை தடுக்கும். நீண்ட நேரம் வயிற்றை முழுமையாக உணர செய்து அதிகம் சாப்பிட அனுமதிக்காது. உடல் எடையை சீராக பராமரிப்பதுடன் ஒட்டுமொத்த நல்வாழ்விற்கும் உதவும்.

சர்க்கரை உணவுகள்

சர்க்கரை அதிகம் சேர்க்கப்படும் பலகாரங்கள், உணவுப்பொருட்கள் மற்றும் பானங்களை உட்கொள்வதை கட்டுப்படுத்த வேண்டும். அது எடை அதிகரிப்பு மற்றும் சரும பிரச்னைகளை தடுக்க உதவும்.

தூக்கம்

உடல் ஆரோக்கியமாகவும் சருமம் பளபளப்பாகவும் இருப்பதில் முக்கிய பங்கு வகிப்பது தூக்கம். தினசரி சரியான அளவு தூக்கம் இருந்தால் தோற்றம் பொலிவுடன் காணப்படும். எனவே, உடலுக்குத் தேவையான ஓய்வை வழங்க தினமும் 7 முதல் 8 மணிநேரம் தூங்குவதை கட்டாயப்படுத்திக் கொள்ள வேண்டும். போதுமான நேரம் தூங்குவது பசிக்கு காரணமான ஹார்மோன்களை ஒழுங்குபடுத்தும். உணவை அதிகம் உண்பதற்கான சாத்தியக்கூறுகளை தடுக்கும். சோர்வை நீக்கி சருமம் பொலிவாக காணப்படும்.

மன அழுத்தம்

மன ஆரோக்கியமும் தோற்றப் பொலிவுக்கு முக்கியமான ஒன்று, பொதுவாக, நாம் மகிழ்ச்சியாக இருக்கும்போது, தோற்றமும் பிரகாசமாக காணப்படும். அதுவே, மன வருத்தத்தில் இருக்கும்போது தோற்றம் பொலிவிழந்து காணப்படும். எனவே, தோற்றப் பொலிவிற்கு மன ஆரோக்கியமும் அவசியமாகிறது. மனம் ஆரோக்கியமாக இருந்தால், புத்துணர்ச்சியுடனும், ஆற்றலுடனும் செயல்பட வைக்கும்.

அந்தவகையில், மனதை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள எந்தவொரு செயலுக்கும் திட்டமிடுதல்களை மேற்கொள்வது மிக முக்கியமானது. சரியான திட்டமிடல் இல்லை என்றால் அது மன அழுத்தத்தைத் தரக்கூடியதாக அமைந்துவிடும். அதுபோன்று மனதை கட்டுப்படுத்த தியானம், யோகா அல்லது ஆழ்ந்த சுவாசப் பயிற்சிகளை மேற்கொண்டு வரலாம். அவை ஆரோக்கியத்தையும், தோற்றப் பொலிவையும் பராமரிக்க உதவும். மனம் அமைதியாக இருந்தால், சருமம் பொலிவாக இருப்பதை உறுதிசெய்யும்.

பொறுமை

உடல் ஆரோக்கியம் மற்றும் அழகு இலக்குகளை அடைவதற்கு நிதானமும், பொறுமையும் மிக மிக தேவையான ஒன்று. எனவே, மனதை கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு விஷயத்திற்கும் மனதை அலைபாயவிடாமல், தேவையற்ற சிந்தனைகளுக்கு இடம் கொடுக்காமல் செயல்பட வேண்டும். அதுபோன்று சின்ன சின்ன விஷயங்களுக்குக் கூட பொறுமை இழந்து கோபத்தினால் கத்துவதும், அடிக்கடி சண்டையிடுவதும் தொடர்ந்து செய்து கொண்டிருந்தால், நரம்புகள் பாதிக்கப்பட்டு விரைவில் முதுமையான தோற்றத்தை கொடுத்துவிடும். எனவே, நிதானமாக எந்தவொரு செயலையும் அணுகுவதும், பொறுமையாக இருப்பதும் தோற்றப் பொலிவை தருவதோடு, இளமையான தோற்றத்தையும் கொடுக்கும்.

உடற்பயிற்சி

உடற்பயிற்சியில் பளு தூக்குதல் போன்ற வலிமை பயிற்சிகளை இணைத்துக் கொள்வது தசையை வலுப்படுத்தி வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும். ஒட்டுமொத்த உடல் வலிமையையும் அதிகரிக்கச் செய்யும். உடல் தோரணையையும் மேம்படுத்தும். இத்தகைய வழி முறைகளை முறையாக கடைபிடித்து வந்தால் உங்கள் தோற்றத்தை பிரகாசிக்க வைக்கும்.

தொகுப்பு: ரிஷி