Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சமூக விழிப்புணர்வுக்காக ஓவியத் திறனை பயன்படுத்துகிறோம்!

நன்றி குங்குமம் தோழி

பள்ளி, பூங்கா, மருத்துவமனை, நாம் கடந்து செல்லும் நடைபாதை சுற்றியுள்ள பகுதிகள், மக்கள் சிறு வியாபாரம் செய்யும் வீதிகள்... மேலும், பல பொது இடங்கள் எங்கும் தூய்மையாகவும் பசுமையாகவும் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். ஆனால், நாம் காணும் இடங்கள் எல்லாமே அவ்வாறு இருப்பதில்லை. விழிப்புணர்வு இல்லாத நபர்களால் அந்த இடங்கள் ஆக்கிரமிக்கப்படுகின்றன.

பள்ளியின் சுவர் உள்ளே மாணவர்கள் இருக்கின்றனர் என்பதை கூட பாராமல் இது போன்ற பொது இடங்களின் சுவரோரங்களில் சற்றும் யோசிக்காமல் சிறுநீர் கழிப்பது, குப்பைகளை கொட்டுவது, தேவையில்லாத சுவரொட்டிகளை ஒட்டுவது என மேலும் அசுத்தம் செய்து மக்களை முகம் சுழிக்க செய்கின்றனர். எவ்வளவு விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட மக்களுக்கு புரிவதேயில்லை. இதற்கான மாற்று தீர்வினை கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் ‘கரம் கோர்ப்போம் ஃபவுண்டேஷன்’நிறுவனர்களான உமா மகேஸ்வரி மற்றும் சிவகுமார்.

“ஒரு இடத்தில் ஒரு சிறிய குப்பை பை இருந்தால் கூட உடனே அந்த இடத்தை குப்பை கொட்டும் இடமாக கருதி மேலும் பலரும் வந்து அந்த இடத்தில் குப்பைகளை கொட்ட தொடங்க ஆரம்பித்துவிடுவார்கள். ஒருவர் செய்வதை பார்த்து மற்றொருவர் பின்னர் பலரும் என ஒரு சங்கிலி போல் இந்த தவறுகள் தொடர்கின்றன. குப்பைகளை போடுவதற்கு என்று உரிய இடம் இருந்தாலும், போடக் கூடாத இடங்களில்தான் அதை செய்கின்றனர். மட்டுமின்றி சுவரோரங்களில் சிறுநீர் கழிப்பது, எச்சில் துப்புவது மேலும் அந்த இடத்தினை அசுத்தம் செய்வது போன்ற காரியங்களில் ஈடுபடுகின்றனர். மக்கள் பயன்படுத்துகின்ற பொது இடம் என்பதை பொருட்படுத்த தவறுகிறார்கள்.

சாலையோர வியாபாரிகள் சிலர், தாங்கள் பயன்படுத்தும் இடத்தினை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்பதை நினைப்பதில்லை. அந்த இடத்தை சுற்றிலும் அவ்வளவு கழிவுகள் இருக்கும். அங்கேயே சாப்பிட்டு அங்கேயே கை கழுவுவது, எச்சில் துப்புவது போன்றவற்றையும் செய்வார்கள். இது போன்ற பொது இடங்கள் அசுத்தம் செய்யப்பட்டிருப்பதை தொடர்ந்து பார்த்துக்கொண்டுதான் நாம் கடந்து செல்கிறோம். நானும் என் கணவரும் அந்த இடங்களை பார்க்கும் போதெல்லாம் வருத்தப்படுவோம்.

இது போன்ற காரியங்களை தடுப்பதற்கு ஏதேனும் முயற்சி செய்ய வேண்டும் என்று எங்க இருவரின் மனதிலும் தோன்றும். ஒரு இடம் தூய்மையாகவும் மனதை கவரும் விதத்திலும் இருந்தால் அந்த இடத்தில் குப்பை கொட்ட தயங்குவார்கள். அதுவும் வண்ணமயமான ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் சுவர் ஓரங்களில் அசுத்தம் செய்வதை சற்று தவிர்த்துக்கொள்வார்கள் என்பதை யோசித்தோம். என் கணவர் ஓவியக் கலைஞர். மக்களால் அசுத்தம் செய்யப்படும் பொது இடங்களின் சுவர் பகுதிகளில் அழகான ஓவியங்கள் வரைந்து அழகுப்படுத்தலாம் என்றார். எனக்கும் அவரின் யோசனை சரியாக இருந்தது’’ என்றவர், 2016ம் ஆண்டில் ‘ஸ்டாப் அப்யூஸிங் பப்ளிக் ப்ளேசஸ்’ (Stop Abusing Public Places) எனும் இயக்கத்தினை தொடங்கியுள்ளார்.

‘‘முதலில் எங்கள் வீட்டின் அருகே உள்ள சுவர் பகுதியை சுத்தம் செய்து அந்த சுவரை ஓவியங்களால் அலங்கரித்தோம். அதனைத் தொடர்ந்து மக்களால் அசுத்தம் செய்யப்பட்டு, பராமரிக்கப்படாத இடங்களில் தன்னார்வலர்களின் உதவியுடன் அங்குள்ள சுவற்றில் ஓவியங்களை வரைய தொடங்கினோம். பின்னர் 2018ம் ஆண்டு ‘கரம் கோர்ப்போம் ஃபவுண்டேஷன்’ எனும் பெயரில் ஒரு அறக்கட்டளை பதிவு செய்து, பல்வேறு சமூக அக்கறையுள்ள செயல்களில் ஈடுபடத் தொடங்கினோம்.

அசுத்தமாக இருக்கும் பள்ளி வளாகங்கள் மற்றும் மோசமாக இருக்கும் பகுதிகளை தேர்ந்தெடுத்து எங்களால் முடிந்தவரை சுத்தம் செய்து பின்னர் அந்த சுவர்களை ஓவியத்தினால் அழகுபடுத்த ஆரம்பித்தோம். ஓவியத்தின் கரு இடத்திற்கு ஏற்ப மாறுபடும். பள்ளி, பூங்கா, உடற்பயிற்சி கூடம், பொதுவான சாலையோரங்கள், வழிபாட்டு தலங்கள் போன்ற இடத்திற்கு தகுந்த மையக்கருத்தினை கொண்டு சுவர்களில் ஓவியங்கள் வரைவோம். எங்களுடன் தன்னார்வலர்களும் இணைந்து செயல்பட ஆரம்பித்தார்கள்” என்ற உமா மகேஸ்வரியினை ெதாடர்ந்தார் சிவகுமார்.

“நான் மும்பை ஐ.ஐ.டி பொறியியல் படித்து, பொறியாளர் பணியில் இருந்து பின்னர் தொழில்முனைவோராக இருந்தேன். ஓவியக்கலையில் பேரார்வம் கொண்டதால், இப்போது சமூக விழிப்புணர்விற்காக என்னுடைய திறனை பயன்படுத்தி வருகிறேன். முதலில் நாங்கள் தேர்ந்தெடுத்த இடத்தை சுத்தம் செய்த பின் அந்த இடத்தினை எவ்வாறு மாற்றப் போகிறோம் எனும் கற்பனை ஓவியங்களை திட்டமிடுவோம். இடத்திற்கு ஏற்றப்படி ஓவியத்தின் கரு அமையும் அல்லது சில நேரங்களில் பள்ளியின் தலைமையாசிரியர், குறிப்பிட்ட இடத்தினை பராமரிப்பவர் அல்லது அங்கு வாழும் மக்கள் எங்களிடம் இது போன்று ஓவியங்கள் வேண்டும் என்று கேட்பார்கள்.

எனவே அதற்கான பொது வரைபடம் தயார் செய்துவிட்டு. வரைய வேண்டிய சுவர்களில் வரைபடத்தின் அவுட் லைனை வரைந்து உள்ளே என்னென்ன வண்ணம் தீட்டலாம் என்பதையும் குறிப்பிடுவேன். எங்கள் குழுவில் உள்ள ஓவியர்கள், தன்னார்வலர்கள் மட்டுமின்றி அந்த இடத்தினை சுற்றி வாழும் மக்களையும் நாங்கள் இதில் ஈடுபடுத்துகிறோம். பள்ளி எனில் மாணவர்களும் ஆசிரியர்களும், பொது இடம் எனில் அந்த இடத்தினை அதிகம் பயன்படுத்தும் மக்களும், பூங்கா என்றால் அப்பகுதியில் வாழும் மக்களும் தன்னார்வலராக வந்து ஓவியங்களில் வண்ணங்கள் தீட்டுவதில் ஈடுபடுகின்றனர்.

சம்பந்தப்பட்ட இடத்தினை சுற்றிலும் வாழும் மக்களையே இந்த செயல்திட்டத்தில் ஈடுபடுத்தும் போது அவர்களுக்கு அந்த இடத்தினை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்கிற பொறுப்புணர்வும் சமூக அக்கறையும் இருக்கும். மீண்டும் யாரேனும் இடத்தினை அசுத்தம் செய்வதையும் குப்பைகளை கொட்டுவதையும், சுவரொட்டிகளை ஒட்டுவதை முடிந்தவரை தடுத்துவிடுவார்கள்.

ஒருமுறை ஒரு முக்கிய சாலையோர பகுதியில் ஓவியம் வரையும் போது அங்கு வியாபாரம் செய்பவர்களையே ஓவியமாக வரைந்தோம். அவர்கள் மகிழ்ச்சி அடைந்தது மட்டுமின்றி, அந்த இடத்தினை சுத்தமாக வைத்திருக்கும் பொறுப்பினை ஏற்றுக்கொண்டனர். வியாபாரம் செய்யும் இடத்தினை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்கிற விழிப்புணர்வு அவர்களிடத்தில் உருவாக்கியதில் மகிழ்ச்சி அடைந்தோம்.

நாங்க செயல்திட்டங்களை தொடங்கிய பின்னர் இந்த இடத்தினை ஓவியங்களால் அழகுப்படுத்தி கொடுங்கள் என பலரும் கேட்டு முன்வந்தனர். காஞ்சிபுரம் அருகில் கிராமப்புற மாணவர்களுக்கான இலவசப் பள்ளி ஒன்றின் அழைப்பினை ஏற்று, அங்கு ஒரு வாரம் தங்கியிருந்து, சுற்றுப்புற சுவர்களை சுத்தம் செய்து, பள்ளியின் செயல்களை அடிப்படையாக கொண்ட ஓவியங்கள் வரைந்து அழகுப்படுத்தினோம். அவற்றை செய்துமுடித்ததும் மாணவர்களின் வருகைக்குப் பிறகு அவர்கள் ஆர்வத்துடன் ஓவியங்களை ரசித்துப் பார்த்தது எங்களை நெகிழ்ச்சியடைய செய்தது. பக்கிங்காம் கால்வாய் பகுதியினை ஒட்டிய சுவர் பகுதியில் அதன் வரலாற்று சிறப்புகளையும், கால்வாயின் வழி வாணிபம் செய்த வரலாற்று குறிப்புகளை ஓவியங்களாக வரைந்தோம்.

மிகவும் மோசமாக உள்ள இடங்களை சுத்தம் செய்து இவ்வாறு ஓவியங்களால் அழகுப்படுத்திய பின்னர் அந்த இடம் அங்குள்ள மக்களால் தூய்மையாக பராமரிக்கப்படுகிறது என்றால் அதில் எங்களுக்கு மனநிறைவு கிடைக்கிறது. இதுவரையில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் ஓவியங்களால் அழகுப்படுத்தியிருக்கிறோம். பொது இடங்களை சுத்தமாக பராமரிக்க இது ஒரு வழி அவ்வளவே.

மேலும் அரசும், மக்களும் இணைந்து ஒத்துழைத்தால் நம் நாட்டின் ஒவ்வொரு இடத்தினையும் தூய்மையாக வைத்திருக்க முடியும். முடிந்தவரை பொது இடங்களில் குப்பைகளை போடுவதையும் கழிவுகளால் அசுத்தம் செய்வதையும் பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். பெரும்பாலும் பிளாஸ்டிக் குப்பைகளே எங்கும் கிடக்கின்றன. முடிந்தவரை குப்பையை தரம் பிரிப்பதும், பிளாஸ்டிக் பயன்பாட்டினை தவிர்ப்பதும்தான் நமக்கும் சுற்றுச்சூழலுக்கும் நல்லது. பள்ளி, கல்லூரிகளிலும் முக்கியமான நிகழ்வுகளிலும் இதுகுறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்” என்றார் சிவகுமார்.

தொகுப்பு: ரம்யா ரங்கநாதன்