நன்றி குங்குமம் தோழி
கடம் வாத்தியக் கலைஞர் சுகன்யா ராம்கோபால்
பாரம்பரியமாக ஆண்கள் ஆதிக்கம் செலுத்தி வந்த ‘கடம்’ தாளக் கருவியை பொறுத்தமட்டில் புரட்சியை செய்துள்ளார் இந்தியாவின் முதல் பெண் ‘கடம்’ வாத்தியக் கலைஞரான சுகன்யா ராம்கோபால். இசை நிகழ்ச்சியின் போது பெண் ‘கடம்’ வாசிப்பதா, அது சரி வராது, பெண் கடம் வாசித்தால் அந்த நிகழ்ச்சி வேண்டாம் என்று பலரும் தெரிவித்த எதிர்ப்புகளை மீறி சுமார் 50 ஆண்டுகளாக ‘என் வழி... தனி வழி’ என ஏழு ஸ்வர பாதையில் பயணிக்கிறார் 67 வயது நிரம்பிய சுகன்யா.
இசை நிகழ்ச்சியில், ‘கடம்’ ஒரு பக்க வாத்தியமாகத்தான் கருதப்படும். மற்ற வாத்தியங்களுக்கு மத்தியில்தான் கடம் இடம் பெறும். அதனை மாற்றி மேடை நிகழ்ச்சியில் நடுநாயகமாக அமைத்தார் சுகன்யா. கடம் முக்கிய வாத்தியமாகவும், மிருதங்கம், வீணை, வயலின், மோர்சிங் போன்ற வாத்தியங்கள் பக்க வாத்தியங்களாக மாற்றியதும் இவர்தான்.
மேலும், கடத்தில் ஆரம்பித்து, மிருதங்கம், வீணை, வயலின், மோர்சிங் என அனைத்து வாத்தியங்களையும் பெண்களை இசைக்க வைத்து, முழுக்க முழுக்க பெண்களை கொண்ட இசைக் குழுவை உருவாக்கி சுமார் 35 ஆண்டுகளாக நிர்வகித்து வருகிறார். எதிர்ப்புகளை சமாளித்து முன்னேறுவது என்பது ஒரு சிலரால்தான் முடியும். அந்தப் பட்டியலில் இடம் பெற்றிருக்கும் இவர், இசை உலகில் தனக்கென்று ஒரு ஸ்தானத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.
‘‘என்னுடைய கொள்ளு தாத்தாதான் தமிழ் தாத்தா என்று அழைக்கப்படும் உ.வே.சாமிநாதய்யர். நான் பிறந்தது மயிலாடுதுறை என்றாலும் சென்னையில் படித்து வளர்ந்தேன். கணிதத்தில் இளங்கலை பட்டம். அப்பாவுக்கு தபால் துறையில் வேலை. எங்க குடும்பத்தில் நான்தான் கடைக்குட்டி. சிறுவயதிலிருந்தே தாள வாத்தியங்களில் எனக்கு ஒரு மயக்கம். மேசை, நாற்காலி என்று எது கிடைத்தாலும் அதில் என்னுடைய விரல்கள் தாளம் போடும். சகோதரிகளை பாடச் சொல்லி நான் அதற்கேற்ப தாளம் போடுவேன். தொடக்கத்தில் வாய்ப்பாடு படித்து வயலின், வீணை பயின்று வந்தேன்.
கட வித்வானான விக்கு விநாயக்ராம் அவர்களின் சகோதரர் குருமூர்த்தியிடம்தான் வயலின் பயிற்சி பெற்றேன். அங்கு விக்கு விநாயக்ராம் கடம் வாசிப்பதைப் பார்ப்பேன். எனக்கு அந்த வாத்தியம் மேல் ஈர்ப்பு ஏற்பட்டு கடம் வாசிக்க சொல்லித் தருமாறு அவரிடம் கேட்டேன். அவர், ‘கடம் ஆண்களுக்குதான் சரிப்படும். சிறுமி நீ வாசித்தால் விரல்களில் விரிசல் ஏற்படும். ரத்தம் வடியும், மிருதங்கம் வாசிக்கக் கற்றுக்கொள்’ என்றார். நான் அவரிடம், ‘மிருதங்கத்தை விரல்களால் தட்டும் போது அதிரும். ஆனால், கடம் அப்படி இல்லை. கடம் எழுப்பும் நாதம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது’ என்றேன். அவரும் என்னுடைய விருப்பத்தை புரிந்து கொண்டு எனக்கு பயிற்சி அளித்தார்.
13 வயதில் கடம் பயில ஆரம்பித்தேன். ஆறு மாதங்களில், சிறிய இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் அளவுக்கு முன்னேறினேன். பொதுவாக கடம் வாசிப்பவர்கள் தங்களின் வயிற்றில்தான் கடத்தின் வாயை லாவகமாக அழுத்திப் பிடித்திருப்பார்கள். அப்போதுதான் நாம் எதிர்பார்க்கும் தாளம் துல்லியமாக இருக்கும். ஆண்களுக்கு எளிதாக கடத்தின் வாய் அவர்களின் தொந்தியில் பொருந்திவிடும். பெண்களுக்கு பானையை வயிற்றில் பொருத்திக் கொள்வது அசௌகரியமாக இருக்கும். ஆனால், குரு அதற்கு எனக்கு ஒரு யுக்தியை சொல்லிக் கொடுத்தார். அப்படித்தான் நான் கடம் வாசித்தேன். அதில் வல்லமையும் பெற்றேன்’’ என்றவர் திருமணத்திற்குப் பிறகும் கடம் வாசிப்பதை நிறுத்தவில்லை.
‘‘என்னதான் பெண்கள் கலைத் துறையில் இருந்தாலும், நடக்க வேண்டிய சுப நிகழ்வினை தள்ளிப்போட முடியாது. எனக்கும் எங்க வீட்டில் திருமணம் பேசினார்கள். மாப்பிள்ளை வீட்டில் பாடத் தெரியுமான்னு கேட்டபோது, ‘நான் கடம் வாசிப்பேன்’ என்றேன். ‘திருமணத்திற்குப் பிறகு கடம் வாசிக்க முடியாதே’ என்றார்கள். ஆனால், ‘நான் கடம் வாசிக்காமல் இருக்க முடியாது’ என்று திட்டவட்டமாக கூறிவிட்டேன். எனக்கு கடம் மேல் இருக்கும் ஆர்வத்தினை என் கணவர் ராம்கோபால் புரிந்து கொண்டார். எனக்கு அதில் அவர் எந்த கட்டுப்பாடும் விதிக்கவில்லை. நிறைய ஊக்குவித்தார்.
ஆனால், இசை நிகழ்ச்சிகளில் பக்க வாத்தியமாக வாசிக்க செல்லும் போது பெண் கடம் வாசிக்க நான் பாடுவதா என்று ஆண் பாடகர் மறுப்பார். மிருதங்க வித்வானும் வாசிக்க மாட்டேன் என்பார். இதனால் நான் நிகழ்ச்சியில் பங்கு பெற முடியாமல் போனது. அதுவே எனக்குள் பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தியது. அந்த திருப்புமுனை எனது 26 வயதில் நிகழ்ந்தது. எப்போதும் போல், ஒரு இசை நிகழ்ச்சியில் மிருதங்க ஆண் கலைஞர் ஒருவர் பெண் கடம் வாசித்தால் நான் நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டேன் என்றார். அன்று முடிவு செய்தேன். எனக்கு மேடையில் இடம் தரப்படாவிட்டால் என்ன, எனக்கான மேடையை நானே உருவாக்குவேன் என்று எனக்குள் சபதமிட்டுக் கொண்டேன். முதலில் கிடைக்கும் கச்சேரியில் பங்கேற்றேன்.
நமக்கான அங்கீகாரத்திற்காக காத்திருக்கக் கூடாது, நாமே உருவாக்கிக் கொள்ள வேண்டும். அந்த அடிப்படையில்தான் முழுக்க முழுக்க பெண்கள் அடங்கிய, ‘ஸ்த்ரீ தால் தரங்’ இசைக் குழுவைத் தொடங்கினேன். மிருதங்கம், வீணை, வயலின், புல்லாங்குழல், மோர்சிங், கடம் என அனைத்திலும் பெண் கலைஞர்கள். ஒரே சமயத்தில் ஆறு முதல் ஏழு கடங்களை வலது பக்கத்திலிருந்து இடம், இடத்திலிருந்து வலம் என மெலடி வாசிப்பேன். எங்க குழுவின் கச்சேரிகள் பல வெளிநாடுகளில் நடந்துள்ளது. 1970களில் தில்லி அகில இந்திய வானொலிக்கு இசைக்கருவிகள் ஒவ்வொன்றிற்கும் தனித்தனி போட்டிகள் நடத்த வேண்டும் என்று கேட்டு நடத்தினேன்.
கடம் பயிற்சி பள்ளியும் தொடங்கினேன். பொதுவாகவே கடம் வாசிக்க வருபவர்கள் மிகவும் குறைவு. குறிப்பாக பெண்கள் அரிது. பெண்ணின் விரல்கள் மிகவும் மென்மையானவை, கரடு
முரடான வேலைகளுக்கு அவை உருவாக்கப்படவில்லை என்று சொல்வார்கள். கடம் வாசித்து எனது விரல்கள் காய்த்துப் போயிருப்பது உண்மைதான். ஆனால், இன்றும், இந்தத் துறை ஆண்களின் கோட்டையாகவே உள்ளது. பெண்கள் கடம் வாசிப்பதை இன்றைக்கும் நூறு சதம் ஏற்றுக் கொண்டுள்ளார்கள் என்று சொல்ல முடியாது’’ என்றார் சுகன்யா.
தொகுப்பு: கண்ணம்மா பாரதி