Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பாரிலே நாளைய சரிதம் நாம்!

நன்றி குங்குமம் தோழி

இந்திய மகளிர் தேசிய கிரிக்கெட் அணியை நம் நாடே கொண்டாடி மகிழ்கிறது... உலகமே போற்றுகிறது. ஆம், ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025 கிரிக்கெட் போட்டியை உத்வேகத்துடனும் விவேகத்துடனும் விளையாடி முதல் உலகக் கோப்பையை வென்றிருக்கும் நம் கிரிக்கெட் நாயகிகளின் வெற்றியை பறைசாற்றும் நேரம் இது! 2025ம் ஆண்டிற்கான ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் போட்டிகள் கடந்த செப்டம்பர் 30ம் தேதி தொடங்கி நவம்பர் 2ம் தேதி வரை நடைபெற்றன.

கேப்டனாக பொறுப்பேற்றிருந்த ஹர்மன் ப்ரீத் கௌர் தலைமையில் இந்திய அணியில் ஸ்மிரிதி மந்தனா, ஹார்லீன்தியோல், தீப்தி ஷர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரேணுகா சிங் தாகூர், அருந்ததி ரெட்டி, ரிச்சா கோஷ், கிராந்தி கௌட், அமன்ஜோத் கவுர், ராதா யாதவ், சரணி, சினே ராணா, உமா செட்ரி, ஷஃபாலி வர்மா ஆகிய வீராங்கனைகள் மகளிருக்கான உலகக் கோப்பை போட்டியில் களமிறங்கினர்.

தொடர் போட்டிகள் முழுவதும் இந்திய அணி தனது மன உறுதி, திறமை மற்றும் மீள் தன்மையை வெளிப்படுத்தி சிறப்பான ஆட்டத்தை முன்னெடுத்துள்ளது. துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா மற்றும் பிரதிகா ராவல் ஆகியோர் களமிறங்கி அற்புதமான சதங்களுடன் அணியை வலுப்படுத்தினர். ஜெமிமா ரோட்ரிக்ஸ் 55 பந்துகளில் 76 ரன்களை குவித்தார்.

இதற்கிடையில் வங்கதேசத்திற்கு எதிரான இந்தியாவின் இறுதி லீக் ஆட்டத்தின் போது, டீப் மிட் விக்கெட் எல்லைக்கு அருகே பிரதிகா ராவல் பந்தை ஃபீல்ட் செய்ய முயன்ற போது அவரது கணுக்காலில் அடிபட்டு காயம் ஏற்பட்டது. ஷஃபாலி வர்மா அவருக்கு பதில் மாற்றம் செய்யப்பட்டார். முழுமையான பந்துவீச்சு மற்றும் செயல்திறன்மிக்க பேட்டிங் செய்யும் முயற்சியில் கவனம் செலுத்திய இந்திய அணி, அரையிறுதி ஆட்டத்தினை சிறப்பாக விளையாடியது.

அரையிறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தின் போது ஜெமிமா ரோட்ரிக்ஸின் சிறப்பான ஆட்டம் ஹைலைட்ஸாக அமைந்தது. தொடர்ந்து ஆட்டமிழக்காமல் ஆடிய ஜெமிமா 127 ரன்களை குவித்ததால் இந்திய அணி தன் இலக்கை அடைந்து மகளிர் உலகக் கோப்பைக்கான இறுதிச் சுற்றுக்கு தகுதிப் பெற்றது. ஜெமிமாவின் ரெக்கார்ட் பிரேக்கிங் தருணமாக மாறிய இந்த வெற்றி இந்திய கிரிக்கெட் வரலாற்றில் முக்கிய சாதனையாக பேசப்பட்டது.

நவி மும்பையில் உள்ள டி.ஒய் மைதானத்தில் நவம்பர் 2ம் தேதி தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்தியாவின் இறுதிச் சுற்று ஆட்டம் நடைபெற்றது. ஆட்டத்தின் தொடக்கத்தில், ஷஃபாலி வர்மா மற்றும் ஸ்மிரிதி மந்தனாவின் சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்து இந்திய அணி முதல் 6.3 ஓவர்களிலேயே 50 ரன்களை கடந்தது. ஷஃபாலி வர்மா அரை சதம் அடித்ததும் முக்கிய நிகழ்வாக பார்க்கப்பட்டது. இந்தத் தொடர் ஆட்டத்தின் இடையில் அடுத்தடுத்து சில விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி பின்னடைவை சந்தித்ததை தொடர்ந்து ஹர்மன்ப்ரீத் கவுர் மற்றும் தீப்தி ஷர்மாவின் அதிரடி ஆட்டம் தொடங்கியது. ஷஃபாலி வர்மாவின் பந்து வீச்சு அணிக்கு பெரிதும் கை கொடுத்தது.

இந்திய அணி தொடர்ந்து முன்னிலை வகித்த நிலையில், தென்னாப்பிரிக்க கேப்டன் லாரா வோல்ஃபார்ட் மற்றும் டிகிளார்க் இந்திய அணிக்கு பெரும் சவாலாக திகழ்ந்தனர். இருப்பினும் பரபரப்பான ஆட்டத்தில் 52 ரன்களில் வெற்றி பெற்று இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. உலகக் கோப்பையை வென்ற பின், “இது மகளிர் உலகக் கோப்பை வரலாற்றில் இந்தியாவின் மிகப்பெரிய கம் பேக். எங்கள் அணியில் ஒவ்வொரு நபரும் சிறப்பாக விளையாடக்கூடிய திறனுள்ளவர்கள்.

மிகவும் நேர்மறையாக அடுத்தடுத்த போட்டிகளில் என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்திருந்தனர். இரவும், பகலும் உழைத்தனர், இந்த வெற்றிக்கு மிகவும் தகுதியானவர்கள்” என குறிப்பிட்டிருந்தார் இந்திய மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத். மகளிர் உலகக் கோப்பை 2025 போட்டியின் ரன்னர்-அப் ஆக தென்னாப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், “தோல்விகளின் மூலம் பாடம் கற்று தென்னாப்பிரிக்க அணி மீண்டும் வளரும்” என அணியின் கேப்டன் லாரா வோல்ஃபார்ட் தெரிவித்தார். ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025ன் சாம்பியன்ஷிப் வெற்றியின் மூலம் முதல் உலகக் கோப்பையை கைப்பற்றியிருக்கும் நம் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் இன்றைய சாதனை நாளைய வரலாறாக பதியட்டும்!

தொகுப்பு: ஆர்.ஆர்