Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

விர்ச்சுவல் ஆட்டிசம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்!

நன்றி குங்குமம் தோழி

‘ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம்’, நரம்பியல் தொடர்பான ஒரு வளர்ச்சிக் குறைபாடு. பெரும்பாலான பெற்றோர்களால் இக்குறைபாட்டின் அறிகுறிகளை கண்டறிய முடியாது. காரணம், அதற்கான விழிப்புணர்வும் பெற்றோர் மத்தியில் குறைவாக உள்ளது. இக்குறைபாட்டினை ஆரம்ப காலத்திலேயே கண்டறிந்து சிகிச்சைகளை வழங்கினால் குழந்தையின் வளர்ச்சியில் நல்ல முன்னேற்றங்களை காண முடியும். பெற்றோர்கள் மத்தியில் ஆட்டிசம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் நடத்தை சிகிச்சையாளர் மற்றும் மருத்துவ உளவியலாளர் ஷரண்யா ரவிச்சந்திரன் இதுகுறித்து மேலும் விளக்குகிறார்.“ஆட்டிசம் குறைபாடுடைய குழந்தைகளுக்கு நடத்தை சார்ந்த பிரச்னைகளும் இருக்கும். அந்த அறிகுறிகளை ஆரம்ப காலத்திலேயே கவனித்து, நிபுணர்களை அணுகி சிகிச்சைகளை தொடங்கினால் அவர்களின் வளர்ச்சியில் முன்னேற்றங்களை ஏற்படுத்தி, நடத்தைகளை சமன் செய்யலாம். ஆனால், குழந்தைகளிடம் வெளிப்படும் அறிகுறிகளை பெற்றோர் கவனிக்க தவறுகிறார்கள். இதனால் குழந்தைகள் வளர்ந்த பின் பிரச்னைகள் தீவிரமான பிறகுதான்அதற்கான சிகிச்சையினை நாடுகிறார்கள். ஆட்டிசம், ஹைப்பராக்டிவ் போன்ற குறைபாடுகள் குறித்து பெற்றோர்கள் மத்தியில் விழிப்புணர்வினை ஏற்படுத்த நினைத்தேன்.ஆட்டிசம் குறைபாடு ஏற்படுவதற்கான காரணங்கள் இப்போது வரையிலும் கண்டறியப்படவில்லை. மூளை வளர்ச்சி மேம்பாடு தடைபடுகின்ற

இக்குறைபாட்டினால் குழந்தைகள் பலவிதங்களில் பாதிக்கப்படுகின்றனர். சில குழந்தைகளுக்கு ஆட்டிசம் குறைபாட்டுடன் ஹைப்பராக்டிவ் பிரச்னையும் இருக்கும். பொதுவாக குழந்தை பிறந்த 18 மாதங்களுக்குப் பிறகுதான் அவர்களிடம் அறிகுறிகள் வெளிப்படும்.

குறிப்பிட்ட வயதில் குழந்தைக்கு பேச்சு வராமல் சிறிது காலதாமதம் என்றால் பரவாயில்லை. ஆனால், பல வருடங்களாக பேச்சு வரவில்லையென்றால், அலட்சியப்படுத்தாமல் உடனடியாக டாக்டரை அணுக வேண்டும். அதே போல் நாம் குழந்தையை கொஞ்சும் போதும் பேசும் போதும் அவர்களுக்கு நம்முடன் கண் தொடர்பு இருக்காது. பெயரைச் சொல்லி அழைத்தாலும் திரும்பி பார்க்க மாட்டார் கள். அவர்களுக்கான தனி உலகில் இருப்பார்கள். இவையெல்லாம் ஆரம்பகால அறிகுறிகள். குழந்தைப் பருவத்திலேயே இதனை கண்டறிந்து சிகிச்சைகளை தொடங்கினால், குறைபாட்டின் தீவிர நிலையை பொறுத்து சிகிச்சைகள் மூலம் அவர்களின் வளர்ச்சி மேம்பாட்டை ஊக்கப்படுத்தலாம்” என்றவர் தற்போது அதிகரித்து வரும் விர்ச்சுவல் ஆட்டிசம் குறித்து விளக்கினார்.“ஆட்டிசம் பிறப்பிலே ஏற்படும் குறைபாடு ஆனால், எந்தக் குறை பாடும் இல்லாமல் பிறக்கும் குழந்தைகளுக்கு பெற்றோர்களின் தவறான வழிநடத்துதல் காரணமாக அவர்களுக்கு ஆட்டிசம் குறைபாட்டின் அறிகுறிகள் தோன்ற காரணமாக அமைகிறது. அதாவது, பிறந்து சில மாதங்களிலிருந்தே டிவி, மொபைல் ஃபோன் போன்ற சாதனங்களை குழந்தைகளுக்கு நாம் பழக்கப்படுத்தி விடுகிறோம். இதனால் குழந்தைகள் மனிதர்களுடன் செலவிடும் நேரத்தை விட, சாதனங்களுடன் அதிக நேரத்தை செலவிடுகிறார்கள். அவர்கள் வளர்ந்த பிறகும் அந்த சாதனங்களுடன் மட்டும் தான் தொடர்பில் இருக்கிறார்கள். அவர்களுக்கு மனித தொடர்புகளே பிடிக்காது. அதிக மக்கள் கூட்டம், அதிகமான பேச்சினை விரும்பமாட்டார்கள். வீட்டிற்கு வரும் உறவினர்களை பழக்கமில்லை என்றால் புறக்கணிப்பார்கள். மிகச் சிறிய வயதில் குழந்தைகளுக்கு எலெக்ட்ரானிக் சாதனங்களை அறிமுகம் செய்வதால் அவர்களுக்கும் ஆட்டிசம் மற்றும் ஹைப்பராக்டிவ் போன்ற அறிகுறிகள் தென்படுகின்றன.

இந்தப் பிரச்னை தற்போது அதிகரித்து வருகிறது. இது ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் கோளாறு போன்ற தோற்றத்தை அளிப்பதால் இந்த நிலையை ‘விர்ச்சுவல் ஆட்டிசம்’ அல்லது ‘மெய்நிகர் ஆட்டிசம்’ என்று குறிப்பிடுகிறோம். பெரும்பாலான பெற்றோர்களுக்கு இது குறித்து விழிப்புணர்வு இல்லை. தற்போது குழந்தைகளிடையே இந்த பாதிப்பு அதிகரித்து வருவதால், இதன் தீவிரத்தை பெற்றோர்கள் உணர வேண்டும். இப்பிரச்னையை தடுக்க குழந்தைகள் திரையில் செலவிடும் நேரத்தை (screen time) முற்றிலும் நிறுத்திவிட வேண்டும். குழந்தையை மற்றவர்களுடன் பழகவும், விளையாடவும், உரையாடவும் பழக்கப்படுத்த வேண்டும். குழந்தையை வெளியில் அழைத்து செல்ல வேண்டும். அவர்களை பார்க் போன்ற இடங்களில் விளையாட பழக்க வேண்டும். அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக சிகிச்சைக்கு உட்படுத்த வேண்டும். ஒரு குழந்தை பார்த்தல், கேட்டல், தொடுதல், சுவைத்தல், நுகர்தல் போன்ற ஐம்புலன்களை பயன்படுத்தினால்தான் அக்குழந்தைக்கு முழுமையான வளர்ச்சி மேம்பாடு இருக்கும். 2 வயதிற்குள் 70 முதல் 90% மூளை வளர்ச்சி மேம்பாடு நடைபெறும். இந்தக் காலகட்டத்தில் மொபைல் ஃபோனை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தால், அதைத் தவிர்த்து அந்த குழந்தைக்கு வேறெதுவும் தெரியாது. இதனால் சுய பேச்சு, தானாக சிரிப்பது போன்ற வழக்கமில்லாத செயல்கள் வெளிப்படும்” என்றவர் மேலும் தொடர்ந்தார்...“இது போன்ற குறைபாடுகளால் பாதிக்கப்படும் குழந்தைகளின் பெற்றோர்களும் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகின்றனர். குழந்தையை கையாளுவதிலும், குழந்தையின் குறைபாட்டை ஏற்றுக்கொள்வதிலும் மன ரீதியான சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்.

பெற்றோர்கள் தன் குழந்தையின் நிலையை அறிந்து அவர்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டாலும், சுற்றியிருப்பவர்கள் மன ரீதியாக அவர்களை புண்படுத்துகின்றனர். இது பெற்றோர்களுக்கு தங்களின் குழந்தையின் வளர்ச்சி மேம்பாட்டில் முன்னேற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கையை இழக்க செய்கிறது. குழந்தைகளின் நடத்தைகள், செயல்கள் மற்றும் பேச்சில் வித்தியாசங்கள் இருக்கும், ஆனால், அவர்களை முற்றிலும் வேறுபட்டவர்களாக பார்ப்பதை சமூகம் தவிர்க்க வேண்டும். சிகிச்சைகள் மூலம் அவர்களின் வளர்ச்சி மேம்பாட்டில் முன்னேற்றத்தை கொண்டு வந்தால் அவர்களாலும் சராசரி வாழ்க்கையை எதிர்கொள்ள முடியும். சமூகம் இந்தப் புரிதலை ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு வேலை வாய்ப்புகளை அளித்தால் அவர்களும் கல்வி, வேலை வாய்ப்பு, அங்கீகாரம் போன்றவற்றை பெற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவார்கள்” என்றவர், தான் இயக்கிவரும் ‘ஷரணாலயா பிஹேவியரல் தெரபி’ மையத்தில் குழந்தைகளுக்கு அளிக்கப் படும் சிகிச்சை குறித்து விளக்கினார். “ஆட்டிசம் குறைபாட்டின் நிலை மற்றும் தீவிரத்தை பொறுத்து ஒவ்வொரு குழந்தைகளுக்கும் தனிப்பட்ட சிகிச்சைகளை அளித்து வருகிறேன். பெரும்பாலும் இக்குழந்தைகளுக்கு நடத்தை மற்றும் அறிவாற்றல் சார்ந்த வளர்ச்சி மேம்பாடு தடைப்பட்டிருக்கும். அவர்களின் நடத்தை மற்றும் திறன் மேம்பாட்டை ஊக்குவிக்கவும், பேச்சு, மொழியினை மேம்படுத்தவும், உணர்வு செயலாக்கம், நுண்ணிய திறன்கள் மற்றும் தினசரி வாழ்க்கைத் திறன்கள், சிறப்புக் கல்வி, நண்பர்கள் மற்றும் சுற்றியிருப்பவர்களுடன் உரையாடவும், கவனம், ஒருங்கிணைப்பு, ஒழுங்குமுறையினை மேம்படுத்த என ஒவ்வொரு நிலைக்கும் பல்வேறு சிகிச்சை முறைகள் உள்ளன.

அதனை குழந்தைகளின் நிலை அறிந்து செயல்படுத்துவோம். மேலும், வீட்டில் இருந்தும் பெற்றோர்கள் குழந்தைகளுக்குப் பயிற்சி அளிக்க அவர்களுக்கு தனிப்பட்ட பயிற்சியும் வழங்குகிறோம். இது போன்ற தெரபிகள் மூலம் குழந்தையின் நடத்தை மற்றும் அறிவாற்றல் வளர்ச்சி மேம்பாட்டில் கண்டிப்பாக முன்னேற்றத்தை பார்க்க முடியும். நாங்க அளிக்கும் சிகிச்சை மட்டுமில்லாமல் பெற்றோரின் தூண்டுதலும் அவசியம். பெற்றோர்கள் சொல்லிக்கொடுக்கும் போது குழந்தையால் எளிதாகவும் விரைவாகவும் விஷயங்களை கற்றுக்கொள்ள முடியும். இன்றைய சூழலில் பெற்றோர்கள் இருவரும் வேலைக்கு செல்லும் நிலைஉள்ளது. குழந்தைக்கு ஆட்டிசம், ஹைப்பராக்டிவ் பிரச்னை இருந்தால் ஒருவராவது வேலையை விட்டுவிட்டு குறைந்தபட்சம் 6 மாதகாலமாவது குழந்தையுடன் முழுமையாக நேரத்தை செலவிட வேண்டும். குழந்தைகளின் வளர்ச்சியில் பங்கெடுத்து அவர்களின் மேம்பாட்டை பார்க்கும் போது எனக்கு மனநிறைவாக இருக்கும். ஒரு தெரபிஸ்ட்டாக பெற்றோர்களுக்கு நான் சொல்வது குழந்தையின் வளர்ச்சி மேம்பாட்டில் நம்பிக்கை வையுங்கள். சமூகத்திற்கு ஒன்று சொல்லவேண்டுமெனில் இது போன்ற குழந்தைகளை ஊக்குவிக்க முன்வாருங்கள். பெற்றோர்களை ஆதரிக்கவில்லையென்றாலும் அவநம்பிக்கையை ஏற்படுத்தாதீர்கள். ஆட்டிசம் குறைபாட்டிற்கான அறிகுறிகள் குழந்தைகளிடம் வெளிப்பட்டால் உடனடியாக நிபுணர்களை அணுகுவது நல்லது’’ என்றார் ஷரண்யா ரவிச்சந்திரன்.

தொகுப்பு: ரம்யா ரங்கநாதன்