Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வைரல் ஐபிஎஸ் ஆபீசர்!

நன்றி குங்குமம் தோழி

சண்டிகரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி, இந்திரஜித் சிங் சித்து. இவர் வசிக்கின்ற தெரு மட்டுமல்லாமல், சுற்றியிருக்கும் தெருக்களில் உள்ள குப்பைகளை அகற்றுவதை ஒரு கடமை போல செய்து வருகிறார். இந்த தன்னலமற்ற சேவையை இந்திரஜித் பல வருடங்களாக செய்து வந்தாலும், சமீபத்தில்தான் அதற்கான அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறார். இந்திரஜித் ஒரு தெருவில் உள்ள குப்பைகளைச் சேகரித்து, வண்டியில் ஏற்றிச் செல்வதை யாரோ ஒருவர் வீடியோவாக்கி, சமூக வலைத்தளங்களில் கசிய விட்டிருக்கிறார். பாலிவுட் நடிகர்கள் முதல் பல பிரபலங்கள் இந்திரஜித்தைப் புகழ்ந்து வருகின்றனர். இப்போது அவரது வயது 88.

முதல் யூடியூபர்!

யூடியூப் வரலாற்றில் 40 கோடி சப்ஸ்கிரைபர்களைப் பெற்ற சேனல் என்ற சிறப்பு அந்தஸ்தை பெற்றிருக்கிறது, ‘மிஸ்டர்பீஸ்ட்’. பிரபல அமெரிக்க யூடியூபரான ஜேம்ஸ் ஸ்டீபன் டொனால்ட்சனின் சேனல் இது. இவரை மக்கள் ‘மிஸ்டர் பீஸ்ட்’ என்றே அழைக்கின்றனர். கடந்த 2012-ம் வருடம் உருவான இச்சேனல், முதல் ஒரு லட்சம் சப்ஸ்கிரைபர்களைப் பெறுவதற்கு நான்கு வருடங்கள் தேவைப்பட்டது. அடுத்த ஒரே வருடத்தில் சப்ஸ்கிரைபர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தைத் தொட்டுவிட்டது.

10 லட்சத்திலிருந்து ஒரு கோடியாக சப்ஸ்கிரைபர்களின் எண்ணிக்கை உயர்வதற்கு ஒரு வருடமே தேவைப்பட்டது. கடந்த வாரம் சப்ஸ்கிரைபர்களின் எண்ணிக்கை 40 கோடியைத் தொட்டு சாதனை படைத்தது. இந்தச் சேனலில் 892 வீடியோக்கள் இருக்கின்றன. இந்த வீடியோக்கள் 9200 கோடி பார்வைகளை அள்ளியிருக்கிறது. இந்த யூடியூப் சேனல் மூலமாகவே ஒரு பில்லியன் டாலர் சம்பாதித்தவர் என்ற பெருமையையும் பெற்றிருக்கிறார் மிஸ்டர் பீஸ்ட். தவிர, யூடியூப் மூலம் அதிகமாக வருமானம் ஈட்டுபவரும் இவரே.

குற்றங்களின் தலைநகரம்!

இந்தியாவில் அதிகளவில் குற்றங்கள் நடக்கும் மாநிலங்களின் பட்டியலை தேசிய குற்றப்பதிவு பணியகம் வெளியிட்டு அதிர்ச்சியளிக்கிறது. இதில் முதலிடத்தைப் பிடித்துள்ளது, உத்தரப்பிரதேசம். சாதாரண திருட்டு முதல் பாலியல் வன்கொடுமை, கொலை உள்ளிட்ட சகல குற்றச் சம்பவங்களும் நடக்காத நாளே உத்தரப்பிரதேசத்தில் இல்லை என்கின்றனர். அந்தளவுக்குப் பாதுகாப்பற்ற ஒரு மாநிலமாக மாறிவிட்டது.

அதிகளவில் குற்றங்கள் நடக்கும் மாநிலங்களின் பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது, அருணாச்சலப் பிரதேசம். இதற்கு அடுத்தடுத்த இடங்களில் ஜார்க்கண்ட், மேகாலயா, அசாம், சட்டீஸ்கர், அரியானா, ஒடிசா, ஆந்திரப்பிரதேசம் வருகின்றன. தலைநகரமான தில்லியும் அதிகளவில் குற்றங்கள் நடக்கும் பட்டியலில் இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் பட்டியலில் தமிழ்நாட்டுக்கு இடமில்லை என்பதும் கவனிக்கத்தக்கது!

மாத வருமானம் 87 ஆயிரம் ரூபாய்!

அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பெண் தாய்ப்பாலை விற்பனை செய்வதன் மூலம் மாதந்தோறும், 87 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறார் என்ற செய்திதான் சமூக வலைத்தளங்களில் ஹாட் டாக். அந்தப் பெண்ணின் பெயர், எமிலி ஈங்கர். இத்தனைக்கும் தனது குழந்தைகளுக்குக் கொடுத்ததைப் போக மீதமிருக்கும் பாலைதான் விற்பனை செய்கிறார் எமிலி. உடல் ரீதியாகவோ அல்லது மருத்துவக் காரணங்களுக்காகவோ தங்களது குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுக்க முடியாத சூழலில் இருக்கும் தாய்மார்கள்தான் எமிலியின் முக்கிய வாடிக்கையாளர்கள். சில நாட்களில் வழக்கத்துக்கு மாறாக 2.5 லிட்டர் முதல் 3 லிட்டர் வரை அதிகமான தாய்ப்பால் எமிலியிடம் சுரக்கிறது.

உபரியாக இருக்கும் இந்த தாய்ப்பாலை பேக்கிங் செய்து, குளிர்சாதனப்பெட்டியில் வைத்து விற்பனை செய்து வருகிறார். ஆரம்பத்தில் தனக்கு அறிமுகமான தாய்மார்களுக்கு விற்பனை செய்தார். அந்த தாய்மார்கள் மூலம் இன்னும் சில பேர் வாடிக்கையாளர்களாக கிடைத்தனர். இப்போது பதினைந்துக்கும் மேற்பட்ட தாய்மார்கள் எமிலியின் தினசரி வாடிக்கையாளர்களாக இருக்கின்றனர். எமிலியின் செயலைப் பார்த்து வேறு சில பெண்களும் தாய்ப்பாலை விற்பனை செய்யத் தொடங்கியிருக்கின்றனர்.

தொகுப்பு: த.சக்திவேல்