நன்றி குங்குமம் தோழி
கனத்துத் ததும்பும் மல்லிகை தோட்டத்திற்கு நடுவில் இருந்தது இளவரசியின் ஓலை வீடு. பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் இளவரசி, பள்ளிக்கூடம் விட்டு வீட்டிற்கு வந்ததும் முதல் வேலையாக புறவாசல் பக்கம் போய் வெள்ளச்சியை கட்டியணைத்து நெற்றியில் முத்தமிட்டப் பிறகுதான் வீட்டிற்குள்ளேயே செல்வாள்.வெள்ளச்சி என்றால் இளவரசிக்கு உயிர். தன் அம்மாவின் திடீர் இறப்பு, அதைத்தொடர்ந்து திருமணமாகிப்போன அக்காவின் பிரிவு... இப்படி எல்லாவற்றிற்கும் வடிகாலாய் இருந்தது இந்த வெள்ளச்சிதான். இந்த ஒரு வருட காலமாக பேச்சுத் துணையாக இருந்ததுகூட வெள்ளச்சிதான். “வெள்ளச்சி..!” என்ற குரல் கேட்ட அடுத்த நொடியே ஓடி வந்து இளவரசியின் மடியில் சுருண்டு கொள்ளும். அதன் இதமான கதகதப்பு இறந்து போன தாயின் பரிசத்தை உணரச் செய்யும்.நல்லதோ கெட்டதோ இளவரசியின் மனதில் உள்ளதை வெள்ளச்சியிடம்தான் பகிர்ந்துகொள்வாள்.வெள்ளச்சிக்கென்று பெரிய கதையே இருக்கிறது. இரண்டு வருடங்களுக்கு முன்பு இளவரசி தன் அப்பா அழகப்பனோடு சந்தைக்குப் போனபோது ஏலத்திற்கு வந்திருந்த வெள்ளச்சியை பார்த்தாள். முயல் குட்டிப்போல் முசுமுசுவென்று இவளைப் பார்த்து தலையை ஆட்டியது.“அப்பா இந்த ஆட்டுக்குட்டியை எனக்கு வாங்கித் தர்றீங்களாப்பா..?” சிறு குழந்தையைப்போல் கேட்ட மகளை யோசனையோடு பார்த்தவர், தன் கால்சட்டை பாக்கெட்டை தொட்டுப் பார்த்துவிட்டு சட்டென்று சம்மதித்தார்.
“சரி சரி வாங்கித்தரேன்! அதுக்கு என்ன தேவையோ அதையெல்லாம் நீதான் கவனிச்சிக்கணும் சரியா...” என்றவர், மகளின் ஆசையை நிறைவேற்றும் களிப்போடு ஆட்டுக்குட்டியை அடிமாட்டு விலைக்கு பேசி பாதிப்பணத்தை கொடுத்துவிட்டு மீதி அடுத்த வாரம் சந்தைக்கு வரும்போது கொடுப்பதாக வாக்களித்த போது, அழகப்பனின் பேச்சில் நம்பிக்கையற்று தலையை சொரிந்தான் ஆட்டுக்காரன்.
“என்னப்பா... அப்படி பார்க்கிறே? இந்த அழகப்பனுக்கு சொல்லொன்னு செயல் ஒன்னெல்லாம் கிடையாது! சொன்ன தேதிக்குள்ள உன் காசு கைக்கு வந்துடும் புரியுதா?” அவனுடைய பதிலுக்கு காத்திராமல் மகளை அழைத்துக்கொண்டு கிளம்பினார் அழகப்பன். மகிழ்ச்சியோடு ஆட்டுக்குட்டியை வீட்டிற்கு தூக்கிக்கொண்டு வந்தாள் இளவரசி. ஆட்டுக்குட்டியை பார்த்தவுடன் இளவரசியின் அண்ணன் வேலு கோபப்பட்டு கத்தினான்.இளவரசிக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது. வாசற்படியில் குத்திட்டு அமர்ந்தாள்.“ஏய் வாய மூடு... அவள எதுக்கு திட்டுறே? நான்தான் அவளுக்கு வாங்கிக்கொடுத்தேன். தாயில்லாத பொண்ணு ஆசைப்பட்டா வாங்கிக் கொடுத்தேன். அவதானே வளக்கப் போறா உனக்கென்ன வந்துச்சு...?” அப்பா தனக்காக பரிந்து பேசியதை கேட்டு இளவரசியின் முகம் மலர்ந்தது.முன்பெல்லாம் குடித்துவிட்டு வாய்க்கு வந்ததெல்லாம் பேசுகிற அப்பா, அம்மாவின் இறப்புக்குப் பிறகு ரொம்பவே மாறியிருக்கிறார்.
அப்பா இப்படி மாறுவாரென்று இளவரசி கனவில்கூட நினைத்துப் பார்க்கவில்லை. “வேலு... இளவரசி யாரு உன் தங்கச்சிடா!...கூடப் பொறந்த பொறப்பு... இன்னும் எத்தனை நாளைக்கு அவ இந்த வீட்டுல இருக்கப்போறா? நாளைக்கே அவளுக்கொரு கல்யாணம் ஆயிடிச்சின்னா அவ புருஷன் வீட்டுக்குப் போயிடப்போறா! அவள ஒரு எதிரியா நினைச்சு பேசாத...போ...போயி கொல்லையில கிடக்கிறதேங்காயை எடுத்துட்டு வா உரிக்கணும்...” வேலுவால் அப்பாவை எதிர்த்துப் பேசமுடியவில்லை. இளவரசியை முறைத்துப் பார்த்துவிட்டு வெளியேறினான்.இளவரசிக்கு தன் தாயின் நினைவு வந்தது. பாவம் அம்மா என்று எண்ணினாள். எவ்வளவோ கஷ்டத்துக்கு நடுவில்தான் தனம் குடும்பத்தை நடத்தினாள். அழகப்பன் சதா குடித்துவிட்டு அங்கங்கே விழுந்து கிடப்பார். அவரைத்தேடி கண்டுபிடித்து! வீட்டுக்குக் கூட்டிட்டு வருவதே தனத்தின் வேலையாக இருந்தது. மூன்று பிள்ளைகளுக்கு தாயாகிவிட்டோமே!? என்று பொறுப்பை எல்லாம் தன் தலையில் ஏற்றிக்கொண்டு உழைத்தாள். வீட்டைச் சுற்றியிருந்த மல்லிகைத் தோட்டத்தில் பூக்களை பறித்துக் கட்டி ரயில்வே ஸ்டேஷனுக்கு சென்று கட்டியப்பூக்களை விற்று காசாக்கி வீடு திரும்புவாள். அந்த வருமானமும் பத்தாமல் குடும்பத்தை ஓட்ட முடியாமல் வட்டிக்கு வாங்கி அது குட்டிப் போட்டு வட்டியும் அசலையும் கொடுக்கமுடியாமல் போகவும் கடன்காரர்கள் வீட்டு வாசல்ல வந்து நின்னு கத்தோ கத்துன்னு கத்த... அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் எல்லாம் வேடிக்கைப்பார்க்கத் தொடங்கிவிடுவார்கள். அது போன்ற சமயங்களில் கூனிக்குறுகிப் போய் நிற்பது இளவரசியும்தான்.பெரிய மகள் கோதையோட கல்யாணத்துக்காக பக்கத்து ஊர் தலைவர் சுந்தரலிங்கத்திடம் ஒன்றரை லட்சம் பணத்தை ஐந்து பைசா வட்டிக்கு வாங்கி இருந்தார் அழகப்பன். சில மாதங்களுக்குப் பிறகு அழகப்பன் வாங்கின கடனைக் கொடுக்கமுடியாமல் போகவே வீடு தேடி வந்துவிட்டார்.
“ஏம்பா அழகப்பா... உன்னையும் ஒரு மனுஷனா மதிச்சு ஒன்றரை லட்சம் பணத்தை கொடுத்தேன் பாரு என்ன நானே செருப்பால அடிச்சுக்கணும். இந்த ஊர்க்கார பயலுங்க உன்னை ஒரு பைசாவுக்கு மதிக்கமாட்டானுங்க. அந்த லட்சணத்துல இருக்கு உன் நிலமை. ஆனா, நீ ஊரவிட்டு ஊருவந்து எங்கிட்ட ஒன்றரை லட்ச ரூபாய் கடன் கேட்டபோது உன்ன மதிச்சு கொடுத்தேனே அந்த மரியாதையை நீ காப்பாத்தினியா?”“சத்தம் போடாதீங்கையா... அக்கம் பக்கத்துல இருக்கிறவங்க பார்த்தா தப்பா நினைப்பாங்க?” கையை பிசைந்தார் அழகப்பன்.“அந்த பயம் இருக்கிறவன் வாங்குன பணத்துக்கு வட்டி கொடுக்கணும் இல்லையா? பணத்தை வாங்கிட்டு கமுக்கமா இருந்தா என்ன அர்த்தம்? வட்டி கொடுக்க வருவேன்னு பார்த்தா... என் வீட்டுப் பக்கமே வராமல் ரெண்டு ஊர சுத்திக்கிட்டு போற!?” என்று வாசலில் நின்று அவர் கத்தியப் பிறகு தான் அப்பா கடன் வாங்கின விஷயமே பிள்ளைகளுக்கு தெரியவந்தது.“ஏம்பா... போயும் போயும் முதலை வாயிலப்போய் மாட்டிட்டீங்களே? இந்த ஆளு பணத்தத் திருப்பிக்கொடுக்கலேன்னா நம்மள சும்மா விடமாட்டானே? எப்படி கொடுக்கப்போறீங்க? ஒரு ரூபாய், ரெண்டு ரூபாயா? ஒன்றரை லட்சமாச்சே? வீட்டை அடமானம் வைக்கலன்னாலும் அதுவும் நமக்கு சொந்தமில்லையே? வேற யார்கிட்டேயும் கடன் வாங்கவும் முடியாது. என்னப்பா பண்ணப் போறீங்க?” என்று அழகப்பனை உள்ளே அழைத்து கேட்டாள் இளவரசி.‘‘அம்மா இளவரசி... சத்தமா பேசாதே அந்தாளு ரொம்ப மோசமானவன். இப்படி எல்லாம் பேசினா தகராறு பண்ணுவான்” என்று மகளை அடக்கிவிட்டு வாசலுக்கு வந்தார்.“தலைவரே உக்காந்து பேசலாம் வாங்க...” என்றவர் மகளிடம் குடிக்க தண்ணீர் கொண்டு வாம்மா” என்று குரல் கொடுத்தார்.
“அதெல்லாம் ஒன்னும் வேணாம்... உன் வீட்டுல உக்காந்து விருந்து சாப்பிட நான் வரல... கொடுத்த பணத்த வட்டியோட வாங்கிட்டு போகலான்னுதான் வந்தேன்” என்று அவர் பேசிக் கொண்டிருக்கும் போது சொம்பில் தண்ணீரோடு வந்த இளவரசியை யோசனையோடு பார்த்தார் சொக்கலிங்கம். பிறகு தாடையை சொரிந்து எதையோ யோசித்தார். “ஏம்பா அழகப்பா... நீயும் உன் மகனும் என் கூட கொஞ்சம் வாங்க... ஒரு முக்கியமான சமாச்சாரம் பேசணும்...”மறுக்காமல் இருவரும் அவருடன் சென்றார்கள். வாசலுக்கு சற்று தள்ளி நின்று மூவரும் வெகு நேரம் பேசினார்கள்.அண்ணன் வேலு மறுப்பாய் தலையை ஆட்டுவதும் அப்பா சம்மதமாய் தலையை ஆசைப்பதும் என மாறிமாறி நடந்தது. அதைப்பார்த்த இளவரசிக்கு சொக்கலிங்கம் சூட்சுமமாக எதையோ பேசுவது புரிந்தது. சற்று நேரத்திற்குப் பிறகு சொக்கலிங்கம் தெருவில் இறங்கி நடந்து சென்றார். அழகப்பனும் வேலுவும் உள்ளே வந்தார்கள்.
“அப்பா நீங்க இந்த விஷயத்துக்கு ஒத்துக்கிட்டு இருக்கக்கூடாது” என்றான் வேலு.“டேய் என்னை என்னடா பண்ண சொல்ற? இது தவிர எனக்கு வேற வழி தெரியல...இளவரசியை பக்கத்து ஊர்லதானே கட்டிக்கொடுக்க போறோம்? நெனச்சா அவளப் போய் பார்த்துட்டு வரலாம்...” இருவரையும் குழப்பத்தோடு பார்த்தாள் இளவரசி.“அது ஒன்னுமில்ல இளவரசி... சுந்தரலிங்கத்துக்கு அவசரமா பணம் தேவைப்படுதாம். அதான் உடனே பணத்தை கேட்கிறார். இப்போதைக்கு முடியாது ஒரு ஆறு மாசம் டைம் குடுங்கன்னு கேட்டோம். அப்படி இல்லன்னா இளவரசியை என் பையன் ரகுவுக்கு கட்டிக்கொடுங்கன்னு கேக்கிறார்.”“அப்பா... அவனா...? அவன் நல்லவன் இல்லப்பா. குடிகாரன்... குடிச்சுட்டு போறவங்க வர்றவங்க கிட்ட தகராறு பண்ணுவான்...ரொம்ப கெட்டவம்பா? போயும் போயும் அவனையா? அய்யோ என்னால முடியாது. நான் இப்படியே இருந்துடுறேன்பா. தயவு செய்து இப்போ எனக்கு கல்யாணம் வேணாம்பா...” என்று மண்டியிட்டு கெஞ்சினாள்.“இளவரசி இப்படியே நீ இருப்ப... ஆனா, நாங்க இருக்க முடியாது.
ஒரு மாசத்துக்குள்ள வட்டியையும் அசலையும் கொடுக்கலேன்னா வீட்ட கொளுத்திடுவேன்னு மிரட்டுறார். அது மட்டுமா அடமானத்துல இருக்கிற நம்ம வீட்டை மீட்டெடுத்துக்கிட்டு நம்மள நடுத்தெருவுக்கு அனுப்பிடுவேன்னு பயமுறுத்துறார்... என்ன என்னப் பண்ண சொல்ற? உங்க ஆத்தா உங்களயெல்லாம் எந்தலையில கட்டிட்டு அவ நிம்மதியா போய் சேர்ந்துட்டா... இப்போ நானில்லே திண்டாடிக்கிட்டு இருக்கேன். உன்னை கட்டிக்கொடுத்துட்டேன்னா... நானும் வேலுவும் கஞ்சோ, கூழோ! எதையாவது ஒன்னை சாப்பிட்டுகிட்டு சிவனேன்னு கிடப்போமில்லையா?” என்று அழகப்பன் சொல்ல, இளவரசியின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.“சரி சரி போய் வேலையைப்பாரு... நீ என்னதான் அழுது அடம் பிடிச்சாலும் நாங்க இதிலிருந்து மாறப்போறதில்லை. அவர்
கிட்ட உன்ன கட்டிக்கொடுப்பதா வாக்கு கொடுத்துட்டோம்...”தன்னைப் பலிகடாவா ஆக்கப்பார்க்கிறார்கள் என்பது தெள்ளத்தெளிவாகப் புரிந்தது இளவரசிக்கு.“அப்பா பனிரெண்டாவதுல நல்ல மார்க் எடுத்திருக்கேன்பா..! காலேஜ்ல சேர்ந்து படிக்கலாம்னு இருக்கேன். படிப்பு முடிஞ்ச உடனே கல்யாணத்தைப் பற்றி பேசலாம்பா” என்றாள்.“அதுவரைக்கும் பாத்துட்டு சும்மா இருக்க மாட்டார் சொக்கலிங்கம். கைநீட்டி பணம் வாங்கிருக்கோம். திருப்பிக் கொடுக்க வேணாமா?” அழகப்பன் தன் முடிவில் தீர்க்கமாய் இருந்தார்.
இளவரசி வெள்ளச்சியிடம் தன் மனக்குறையை எல்லாம் சொல்லி அழுது தீர்த்தாள். அதற்கு புரிந்ததோ இல்லையோ மறுப்பாய் தலையை தலையை அசைத்தது. அடுத்த மாசம்...இளவரசியை கட்டாயப்படுத்தி அவளுக்கும் ரகுவுக்கும் திருமணத்தை நடத்தி முடித்தார் அழகப்பன். அக்கா கோதையும் இதற்கு உடந்தையாய் இருந்ததைதான் இளவரசியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. “அக்கா... நீயாவது என்னப் புரிஞ்சிக்கோக்கா...” “இளவரசி... ரகு நல்லவனோ? கெட்டவனோ? எப்படி வேணா இருந்துட்டு போகட்டும். அவன் வீட்டுக்குப் போனா மூணு வேளை சாப்பாடும் கட்டிக்க துணிமணியும் கிடைக்கும்... என்னப்போல கால் வயிறு கஞ்சி குடிச்சிக்கிட்டு கஷ்டப்பட வேணாம் பாரு... நீ இந்த விஷயத்துல கொடுத்துவச்சவ இளவரசி...”என்றாள் கோதை. இரவெல்லாம் அழுத சுவடு இளவரசியின் கண்களில் மிச்சமிருந்தது. “தாய் வீட்ட விட்டுப் பிரிஞ்சி போவுதில்லையா அந்தக் கவலை” என்றனர் அக்கம் பக்கத்தினர்.கல்யாணத்தை அவளால் தடுத்து நிறுத்தமுடியவில்லை. இளவரசி இரண்டு லட்சத்துக்காக விற்கப்பட்டாள். அன்று திருமணம் முடிந்து தாய் வீட்டிலிருந்து கிளம்பினாள்.“அப்பா வெள்ளச்சியை எங்கூட கூட்டிட்டுப் போறேம்பா”என்று புறவாசல் பக்கம் திரும்பினாள். “அந்த சனியனை எதுக்கு கூட்டிட்டுப் போறே? அது வந்ததுல இருந்துதான் நம்ம குடும்பத்துல இவ்வளவு பிரச்னையும்... சரி சரி அடுத்த முறை வந்தா பார்த்துக்கலாம்... நல்ல நேரம் முடியிறதுக்குள்ள கிளம்பு”என்றார்.கண்களில் குளம் கட்டியக் கண்ணீரோடு கணவன் ரகுவின் அருகில் அமர்ந்தாள்.“நீலிகண்ணீர் வடித்தது போதும் கண்ணத்தொட”என்றான் ரகு.
“அம்மா நீ இருந்திருந்தால் எனக்கு இந்த நிலமை வந்திருக்குமா? இனிமே பிடிக்காத வாழ்க்கையோட தினம் தினம் போராடப்போறேன்’’ என்று கண்ணீர் வடித்தாள். கார் கிளம்பியது... தெருமுனை திரும்பும் வரை, திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே சென்றாள் இளவரசி. வெள்ளச்சியை தவிர எல்லோரும் வீதியில் நின்று வழியனுப்பினார்கள்.ஊரையும் உறவுகளையும் விட்டுப் பிரிவதைவிட வெள்ளச்சியை விட்டு பிரிகிறோம் என்று நினைத்தமாத்திரம் கண்ணீர் கொட்டியது. ஊரின் முடிவில் ரயில்வே கேட் போடப்பட்டு இருந்ததால் கார் நிறுத்தப்பட்டது. உடல் புழுக்கத்தை தாண்டி மனப்புழுக்கத்தால் திணறிப்போனாள் இளவரசி. பார்வையை வெளிப்பக்கம் திருப்பிய போது கசாப்புக்கடை வாசலில் வெள்ளச்சி கட்டப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தாள். “வெள்ளச்சீ.......” என்று இவள் சக்தியை எல்லாம் திரட்டி கத்த... எதிரில் சென்ற ரயிலின் உரத்த சத்தத்தில் இவளின் குரல் ஊமையானது. இறங்கி ஓட வேண்டும் என்று இவள் முனைந்த போது கோபத்தோடு கதவை அறைந்து சாத்தினான் ரகு. அடுத்த நொடியே கேட் திறக்கப்பட்டு கார் கிளம்பியது. “நீ வாழ்ந்த வாழ்க்கை இந்த எல்லையோட முடிஞ்சிடிச்சு? கேட்டுக்கு அந்தாண்ட என் சாம்ராஜ்யம்! மூச்சு விடுறதா இருந்தாலும் என்ன கேட்டுதான் மூச்சு விடணும்..!” அடிதொண்டையில் கர்ஜித்தான் ரகு. உதட்டை கடித்து அழுகையை அடக்கிய இளவரசி மெல்ல தலையை திருப்பி வெள்ளச்சியைப் பார்த்தாள். அது இளவரசியை பரிதாபமாகப் பார்த்தது. இருவருமே பலிகடாவாகி விட்டோமே என்று சொல்வது போல் இருந்தது அதன் பார்வை.
தொகுப்பு: டெய்சி மாறன்