Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இந்த இரண்டு விஷயத்தை மனசுல வச்சுக்கங்க... ஜெயிச்சிருவீங்க!

நன்றி குங்குமம் தோழி

‘‘30 நொடி இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மாதிரிதாங்க நம்ம வாழ்க்கை... அவ்வளவு சிம்பிளாகிவிட்டது என்பதை விட சுருங்கிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். எல்லோரும் பல விஷயங்களுக்காக ஓடிக்கொண்டே இருக்கிறோம். அதே சமயம் நம்முடைய உடல் நலம் குறித்தும் கவனம் கொள்வது அவசியம் என்பதை நாம் மறந்து விடுகிறோம். நம்முடைய வாழ்க்கைக்கு உடல் ஆரோக்கியம் மிகவும் அவசியம்’’ என்கிறார் ஜோஷ்னா ராமகிருஷ்ணன். யோகா பயிற்சியாளரான இவர் இயந்திரமயமான வாழ்க்கைக்கு யோகா எந்த அளவுக்கு முக்கியம் என்பதை எடுத்துக்கூறி விவரித்தார்.

‘‘நான் எட்டாம் வகுப்பு படிக்கும் வரை சென்னையிலதான் இருந்தேன். அதன் பிறகு அப்பாவின் பிசினஸ் காரணமாக நான், அம்மா, தம்பி எல்லோரும் குடும்பமாக காஞ்சிபுரம் சென்றுவிட்டோம். சென்னையில் இருந்தவரை எல்லா விளைாட்டுலேயும் நான் பயிற்சி எடுத்து வந்தேன். காஞ்சிபுரம் சென்ற பிறகு என்னால் விளையாட்டினை தொடர முடியவில்லை. அதற்கு மாற்றாக என்னையும் என் தம்பியையும் அம்மா யோகா பயிற்சிக்கு அனுப்பினாங்க. மேலும் அங்கு நான் சேர்ந்த பள்ளியின் சூழலே எனக்கு வித்தியாசமா இருந்தது. பள்ளி யுனிஃபார்ம் பாவாடை தாவணிதான். அது எனக்கு வித்தியாசமா இருந்தது.

அதற்கு யோகா எனக்கு பெரிய பிரேக் கொடுத்தது. எனக்கு மட்டுமில்லை என் அப்பாவிற்கும் யோகாசனத்தால் பெரிய மாற்றம் ஏற்பட்டதால்தான் எங்க வீட்டில் என்னையும் தம்பியையும் யோகா பயிற்சிக்கு சேர்த்துவிட்டார்கள். பயிற்சி எடுக்க ஆரம்பித்த நாள் முதல் அதுகுறித்து நிறைய விஷயங்களை படித்தேன். யோகா போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகள் வாங்கினேன். அது எனக்கு மேலும் நிறைய சாதிக்க வேண்டும் என்ற ஊக்கத்தினை ஏற்படுத்தியது’’ என்றவர் கல்லூரிக் காலங்களில் தன்னுடைய யோகா திறமைகளை வெளிப்படுத்தியுள்ளார்.

‘‘பொறியியல் கல்லூரியில் சேர்ந்ததால், சென்னைக்கு மீண்டும் படிப்பிற்காக வந்தேன். இங்கு வந்த பிறகு என்னுடைய யோகாசன திறமையை வெளியே கொண்டு வந்தவர் என் ஆசிரியர்தான். கல்லூரி விழா மேடைகளில் கண்டிப்பாக என் யோகாசன நிகழ்வு இருக்கும். படிப்பு முடித்ததும், கேம்பஸ் மூலம் வேலை கிடைத்தும் நான் அதை தேர்வு செய்யவில்லை. வேறு வேலையும் கிடைக்கவில்லை. அதனால் ஈவென்ட் மேனேஜ்மென்ட் வேலையில் சேர்ந்தேன்.

அந்த சம்பளத்தினைக் கொண்டு கேரளாவில் உள்ள சிவானந்த யோகாசன படிப்பில் சேர்ந்தேன். மேலும் டான்ஸ் ஸ்டுடியோ ஒன்றில் பகுதி நேர யோகாசன பயிற்சியாளராகவும் வேலை பார்த்து வருகிறேன். அந்த சமயத்தில் சீனாவில் யோகா டீச்சருக்கான வேலை வாய்ப்பு குறித்த விளம்பரம் பார்த்து விண்ணப்பித்தேன். தேர்வாகி அங்கு சென்றேன். ஆனால் நான் வேலைக்கு சேர்ந்த ஒரே வாரத்தில் என்னுடைய கான்ட்ராக்டை ரத்து செய்துட்டாங்க.

பாஷை தெரியாத ஊரில் என்ன செய்வதுன்னு புரியாம தவித்த போது, அங்கிருந்த ஒருவர் எனக்கு உதவி ெசய்தாங்க. அதன் மூலம் அங்குள்ள கிராமப் பள்ளியில் யோகா பயிற்சியாளராக ஆறு மாத காலம் வேலை பார்த்தேன். அதன் பிறகு வேலையை ராஜினாமா செய்துவிட்டு தனியாக யோகாசன பயிற்சி பள்ளியினை துவங்கினேன். இடையில் மீண்டும் சென்னை வந்து சில ஆசனங்களை பயின்று மீண்டும் சீனாவிற்கு திரும்பினேன்.

ஆறு வருடம் கடுமையான உழைப்பில் எனக்கான அடையாளத்தினை உருவாக்கிக் கொண்டேன். ‘Atma Yoga’ என்ற பெயரில் யோகா ஸ்டுடியோ துவங்கி, அதன் மூலம் ஆன்லைனில் பயிற்சி அளித்தேன். சீனாவில் மட்டுமே 500க்கும் மேற்பட்ட யோகா பயிற்சியாளர்களை உருவாக்கி இருக்கிறேன்’’ என்றவர் யோகாசனம் குறித்து சென்னை, கேரளா, உத்தரகாண்ட், ரிஷிகேஷ், மைசூர் போன்ற இடங்களுக்கு சென்று பல பயிற்சிகளை மேற்கொண்டுள்ளார்.‘‘எல்லாம் நல்லபடியாக சென்றிருந்த சமயத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

அந்த சமயம் திருவண்ணாமலையில் ரமணா ஆசிரமத்தில் தியானம் செய்த போது, இந்தியாவில் ஒரு யோகா ஸ்டுடியோ தொடங்கும் எண்ணம் ஏற்பட்டது. நண்பர்களின் உதவியால் சென்னையில் அதே பெயரில் இங்கு யோகா ஸ்டுடியோ துவங்கினேன். கொரோனா நேரத்தில் ஸ்டுடியோவினை மூடவேண்டிய நிலை ஏற்பட்டதால், ஆன்லைனில் பயிற்சி அளிக்க துவங்கினேன். இந்தியா மற்றும் சீனா இரண்டு நாடுகளிலும் யோகாசன பயிற்சி அளித்து வந்தேன். எதிர்காலத்தில் ஓய்வு மையம் ஒன்றை அமைக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. யோகாசனம் எல்லோருக்கும் கற்றுத் தரணும். நிறைய சாதனைகள் செய்யணும்.

சாதிக்கத் துடிக்கும் பெண்களுக்கு நான் ெசால்வது இரண்டே விஷயம்தான். ஆரோக்கியமா இருக்கணும்... அடுத்து நிதி ரீதியாக வலுவாக இருக்க வேண்டும். இது இரண்டும் இருந்தால், உங்களின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது’’ என்ற ஜோஷ்னாவின் முகத்தில் சாதனைப் பெருமிதம் புன்னகையாக தெறித்தது.

தொகுப்பு: ஆனந்தி ஜெயராமன்