கி ஃப்டா..! பொடிசுகள் முதல் பெருசுகள் வரை எல்லோரது மகிழ்ச்சி குரல்… பரிசுகளுக்கு எல்லோரும் அடிமை அல்லவா!குடும்ப விழாக்களில் விருந்தினர்களுக்கு வயிறு நிறைய சாப்பாடு போட்டு கூடவே பரிசும் தந்தனுப்பினால் விருந்தினர்களின் முகத்தில் சந்தோஷம் பொங்குவதை பார்க்கணுமே! அதிலும் அந்த கிஃப்ட் டிரெண்டிங் ஆக இருந்தால் இரட்டிப்பு மகிழ்ச்சிதானே..!அத்தகைய டிரெண்டிங் ரிட்டன் கிஃப்ட்ஸ் தயாரிப்பில் கலக்குகிறார் திருப்பூரைச் சேர்ந்த, கோவையில் வசிக்கும் ரம்யா ராமச்சந்திரன். அவரிடம் பேசியதிலிருந்து…
உங்களைப் பற்றி...
திருப்பூர் சொந்த ஊர். கோவையில் வசிக்கிறேன். அப்பா வங்கி மேனேஜராக வேலை பார்த்தார். அம்மா இல்லத்தரசி. அப்பாவின் மறைவிற்குப் பிறகு அம்மா தான் என் முழு பலம். அவங்க சப்போர்ட் இல்லாம நான் இந்தளவிற்கு வளர்ந்திருக்க முடியாது. எனக்கு கலைத்திறன் இருந்ததால், ஃபேஷன் டெக்னாலஜி படித்தேன். ஆனால், படிப்பு முடித்த கையோடு திருமணமானது. வேலைக்குச் செல்ல முடியவில்லை. வாழ்க்கையின் ஓட்டத்தில் இல்லத்தரசியாக இருந்தாலும், எனக்குள்ளே எப்போதும் ஒரு தொழில்முனைவோராக வேண்டும் என்ற எண்ணம் துரத்திக் கொண்டேயிருந்தது. ஆர்வம் மற்றும் கனவுகளைப் பின்தொடர்ந்து என் சொந்த நிறுவனமான ‘அய்க்யா அங்காடி’யை உருவாக்கினேன். அய்க்யா என்பது சமஸ்கிருத வார்த்தை. அடையாளம் என்று பொருள். என் அங்காடியே என் அடையாளம்
ஈ-காமர்ஸ் நிறுவனம்...
என் இரண்டாவது மகள் பிறந்த பிறகு ஒரு ஈ-காமர்ஸ் நிறுவனம் மூலம் முதன்முதலாக சேலை வியாபாரம் செய்தேன். அதுதான் என் தொழிலின் முதல் படி. அதுவே என் கனவுகளுக்கு ஒருவித
தூண்டுகோலானது. அடுத்தக்கட்டமாக ‘அய்க்யா பொட்டிக்’ பெயரில் ஆன்லைனில் துவக்கினேன். தொடக்கத்தில் 10,000 ரூபாய் முதலீட்டில் தனியாளாக எல்லா வேலைகளையும் நானே செய்தேன். தயாரிப்பு முதல் நானே மாடலாகி புகைப்படம் எடுப்பது, பொருட்களை பேக்கிங் செய்வது, வாடிக்கையாளர் சேவை, சந்தைப்படுத்துதல் வரை அனைத்தும் நானே பார்த்துக் கொண்டேன். என் மகள்களும் எனக்கு பேக்கிங் செய்ய உதவுவார்கள். இது முழுக்க முழுக்க ஒரு குடும்ப முயற்சி. தினமும் 8 முதல் 10 மணி நேரம் வரை ஆன்லைன் வியாபாரத்தில் ஈடுபடுவேன். போஸ்டர்கள் உருவாக்குவது, ரீல்ஸ் தயாரிப்பது, சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்வது, வெண்டர்களிடம் தொடர்பு கொள்வது, சந்தைப்படுத்துதல் என அனைத்தும் என் வேலை. வாடிக்கையாளர்களுக்கு நல்ல தரம் மற்றும் குறைந்த விலையில் வழங்க வேண்டும்.
ஏற்றுமதி...
ஈ-காமர்ஸ் நிறுவனம் நடத்தும் போது டிஜிட்டல் மார்க்கெட்டிங் பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டும். அதை தானாகவே கற்றுக்ெகாண்டேன். ஆன்லைன் பிசினஸ் என்பதால் இந்தியா மட்டுமில்லாமல் அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, இலங்கை போன்ற வெளிநாடுகளுக்கு என் தயாரிப்புகளை ஏற்றுமதி செய்கிறேன்.
அய்க்யா பொட்டிக்...
என்னுடைய பொட்டிக்கில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த குறிப்பாக காஞ்சிபுரம்(தமிழ்நாடு), சந்தேரி, மகேஷ்வரி(மத்திய பிரதேசம்), பனாரசி (உத்தரப்பிரதேசம்), பைதானி (மஹாராஷ்டிரா), கசாவு (கேரளா), கலம்காரி, லினன், காடன், ஆர்கன்சா, சிஃபான் வகை சேலைகள் மற்றும் மேலும் பல பாரம்பரிய கைத்தறி புடவைகளை விற்பனை செய்கிறோம். இயற்கை நிறங்களில் அழகான கைமுறையால் அச்சிடப்பட்ட ப்ளாக் பிரின்ட் புடவைகள் எங்களின் ஸ்பெஷாலிட்டி. இவை தவிர போச்சம்பள்ளி, சம்பல்புரி, டஸ்ஸர், மைசூர் பட்டுப்புடவைகள் என பல ரகங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.
புடவைகள் மட்டுமில்லாமல் பாரம்பரிய நகைகளும் இங்கு தேர்ந்தெடுத்து விற்பனை செய்து வருகிறோம். ஒவ்வொரு துணியும் நகையும் நேரடியாக அந்தந்த கலைஞர்களிடமிருந்து பெறப்பட்டதால், அதன் தரம் மற்றும் டிசைன்கள் பார்க்கவே நம் கண்களை கவரும் வகையில் இருக்கும். ஆக்ஸிடைஸ் ஜெர்மன் சில்வர், கேம்ப் நகைகள், ராஜஸ்தானி பாரம்பரியத்தில் உருவான ஜடாவ் மற்றும் குந்தன் நகைகள்... இவை தவிர பரதநாட்டியம் மற்றும் கலை நிகழ்வுகளுக்கான முழு செட் நகைகளும் நம்மிடம் கிடைக்கும். கைவினைப் பாணியில் உருவாக்கிய டெரக்கோட்டா, டெம்பில் நகைகள், ஆன்டிக் தொகுப்புகளும் உள்ளன.
ரிட்டன் கிஃப்ட்ஸ்...
கடந்த 3 வருடங்களுக்கு முன்தான் ரிட்டர்ன் கிஃப்ட்ஸ் வியாபாரம் தொடங்கினோம். அது பெரிய சக்சஸினை கொடுத்துள்ளது. இந்தியாவின் ஒவ்வொரு பகுதியின் தனிச்சிறப்பான தஞ்சாவூர் ஓவியங்கள், ரிவர்ஸ் கிளாஸ் பெயின்டிங்ஸ், பித்தளை ஹேண்டிகிராஃப்ட்ஸ், கோரைப்புல் மற்றும் பனை ஓலைப் பெட்டிகள், கலம்காரி, எகோடாட் ஹேண்ட்பேக்குகள், ஜூட் பைகள் என ஒவ்வொரு கைவினைப் பொருட்களையும் தேர்வு செய்து விற்பனை செய்கிறோம்.
திருமணம் மற்றும் விழாக்களுக்கு மட்டுமில்லாமல் கார்ப்பரேட் நிறுவனங்களின் விருப்பத்திற்கு ஏற்பவும் ரிட்டர்ன் கிஃப்ட்ஸ்களை வழங்கி வருகிறோம். தற்போது எங்க அங்காடியின் புதிய என்ட்ரி கொலு பொம்மைகள். நவராத்திரிக்கு பிரத்யேகமாக கொலு பொம்மைகளும், அதற்கான காம்போ செட்களும் உள்ளது.
அடுத்த இலக்கு...
என் குடும்பத்தில் முதலாவது தொழில்முனைவோராக உருவெடுத்த நான் கடவுளின் அருளால் கடந்த 10 ஆண்டுகளாக ஆன்லைன் ஸ்டோரை வெற்றிகரமாக நடத்தி வருகிறேன். இப்போது என் வியாபாரத்தை ஒரு ஷோரூம் வழியாக விரிவாக்க வேண்டும். அதற்கான வேலையில் ஈடுபட்டு வருகிறேன்.நான் இந்தத் தொழிலை ஆரம்பிக்கும் போது என்னால் முடியும் என்று என் மேல் நம்பிக்கை வைத்துதான் துணிந்து ஆரம்பித்தேன்.
என்னுடைய இந்த வளர்ச்சிக்கு காரணம் நான் விரும்பியதை செய்து கொடுத்த உற்பத்தியாளர்கள், கைவினைக் கலைஞர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். என்னைப் ெபாறுத்தவரை ஒவ்வொரு பெண்ணும் தன்னிச்சையாக சம்பாதிக்க வேண்டும். அது தன்னம்பிக்கையை தரும். எந்த சூழலையும் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். தன்னைத்தானே நம்பும் பெண்களால் எதையும் சாதிக்க முடியும் என்று பெருமிதத்துடன் கூறினார் ரம்யா ராமச்சந்திரன்.
தொகுப்பு: கலைச்செல்வி